தி. த. கனகசுந்தரம்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தி.த.க என்று பரவலாக அறியப்படும் தி.த.கனகசுந்தரம்பிள்ளை (திருக்கோணமலை தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை, ஆகத்து 24, 1863 - 1922) ஈழத்தில் திருக்கோணமலையில் பிறந்து தமிழ் இலக்கிய, பதிப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்கினை ஆற்றிய ஆளுமையாவார். தமிழறிஞர். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை 1863 ஆவணி 24 ஆம் நாள் பிறந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை என்பவரின் மகன். தி. த. சரவணமுத்துப்பிள்ளையுடன் உடன் பிறந்தவர். திருகோணமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார்.

1880 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சென்று அங்கு செங்கல்வராயன் பள்ளியில் பயின்று, பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ சோதனையில் தேறி, இராசதானுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, தமிழ், தத்துவம் ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், கிறித்தவக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வாளாராய் இருந்தார்.

மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூல்களுக்குப் பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆகியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார்.

கனகசுந்தரம் பிள்ளை தெல்லிப்பழை சிதம்பரநாத முதலியாரின் மகள் சுந்தரம்பாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

பதிப்பாளராக[தொகு]

தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை, ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் கனகசுந்தரத்தால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிப்பிக்கப்படுகிறது".

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் கனகசுந்தரத்தால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

கனகசுந்தரம்பிள்ளை சுன்னாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடியமட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாகினர். மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

”தமிழ் நாவலர் சரிதை” எனும் நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை. எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து கனகசுந்தரம்பிள்ளை தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பவர் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இவர் பதிப்பித்த நூல்கள்[தொகு]

  • தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) நச்சினார்க்கினியார் உரை
  • தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) சேனாவரையர் உரை (திட்டவட்டமான ஆதாரங்கள் இதற்கில்லை)
  • கம்பராமாயணம் - பாலகாண்டம்
  • தமிழ் நாவலர் சரிதை

தி.த.க விடம் ஏடுகள் பெற்று பதிப்பிக்கப்பட்ட நூல்கள்[தொகு]

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • 'ஈழத்து தமிழ்ச்சான்றோர்' வித்துவான், தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu.. மணிமேகலை பிரசுரம். சென்னை, 2002.
  • திறனாய்வாளர் திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை.தொகுப்பு: கலாபூசணம் த. சித்தி அமரசிங்கம், ஈழத்து இலக்கியச் சோலை, திருகோணமலை 2003. (வித்துவான் நடராசா, நா. பாலேஸ்வரி, பேரா. செ. யோகராசா ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்கி - முன்னுரை வழங்கியுள்ளார் கா.சிவபாலன்.
  • தமிழ்நாடும், ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும் வித்துவான் தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu. மணிமேகலைப் பிரசுரம். சென்னை, 2005.