உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டைத் தமிழகத்தின் விவசாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க காலத்தில், ( கி.மு 600-கி.பி 200 ) தமிழர்களின் வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக வேளாண்மை இருந்தது.[1] இது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாக கருதப்பட்டது, எனவே அனைத்து தொழில்களைவிட இது முதன்மை வகித்தது. உழவர்கள் சமூக நிலையில் மேல் நிலையில் இருந்தனர். அவர்கள் உணவு தானிய உற்பத்தியாளர்களாக இருந்ததால், சுய மரியாதையுடன் வாழ்ந்தனர். சங்க காலத்தின் துவக்கக் கட்டங்களிலேயே வேளாண் தொழில் பழமையானதாக இருந்தது, ஆனால் நீர்ப்பாசனம், உழவு, எருவிடுதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் முன்னேற்றத்துடனும் செயல்திறன் கொண்டதாகவும் இருந்தது. பண்டைய தமிழர்கள் பல்வேறு விதமான மண்வகைகள், அவற்றில் பயிரிடப்படும் பயிர் வகைகள் அந்தந்த பகுதிகளுக்கு பொருத்தமான பல்வேறு நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். இவை தற்போது சென்னை, தஞ்சாவூர் பாசண முறைகளாக உள்ளன.

நில வகைப்பாடு[தொகு]

தற்கால தமிழ்நாட்டு நெல் வயல்

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தமிழ் நாட்டின் ஐவகை நிலப் பிரிவுகளில், மருத நிலப்பிரிவு மிகவும் வளமான நிலப்பகுதியாக இருந்ததால் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.[2] ஒரு விவசாயியின் செழிப்பானது சூரிய ஒளி, பருவ மழை, மண் வளம் ஆகியவற்றைப் பெறுவதைப் பொறுத்து அமைகிறது. இயற்கையின் இந்த கூறுபொருட்களில், பண்டைய தமிழர்களால் சூரிய ஒளி என்பது தவிர்க்க முடியாதது எனக் கருதப்பட்டது, ஏனென்றால் மழை பொய்தால் மற்ற பாசன முறைகளைப் பயன்படுத்தலாம், மண் இயற்கையிலேயே வளமற்றதாக இருந்தால், செயற்கையாக உரமிட்டு மண்ணை வளப்படுத்த இயலும். அவர்கள் நில வளத்தை அடிப்படையாகக் கொண்டு நிலங்களை வேறுபடுத்தி, அந்த மண் வகைக்கு ஏற்றவாறு பயிர்களைப் பயிரிட்டனர். அவை வன்புலம் (கடினத் தரை), மென்புலம் (வளமான நிலம்), பின்புலம் (உலர் நிலம்), களர்நிலம் அல்லது உவர்நிலம் (உப்பு நிலம்) போன்றவை ஆகும். முல்லை மற்றும் குறிஞ்சி நிலப் பகுதிகளில் இருந்த வன்புலம் பெருமளவு விளைச்சலைக் கொடுக்கக்கூடியதாக இல்லை, அதே நேரத்தில் மென்புலம் நல்ல விளைச்சல் தரக்கூடியதாக இருந்தது. குறைந்த நீர்ப்பாசன வசதிகள் கொண்டதால் பின்புலம் மானாவரி பயிர்கள் பயிரிடப்படும் இடமாக இருந்தது. களர்நிலம் சாகுபடிக்கு தகுதியற்றது ஆகும். அக்காலத்தில் சில மண் வகைகளை அவர்கள் அறிந்திருந்தனர், வண்டல் மண் செம் மண், கரிசல் மண், செந்நிறக் களிமண் மணல் மண் ஆகியவை ஆகும் மேலும் ஒவ்வொரு வகை மண்ணிலும் என்னென்ன பயிர்கள் விளையும் என்பதை அறிந்திருந்தனர்.

நில உடைமை[தொகு]

தற்கால கேரளத்தில் நெல் வயல்

மன்னர் நிறைய நிலங்களைக் கொண்டிருந்தார், ஆனால் அவர் முழு நிலங்களுக்கும் சொந்தக்காரர் அல்ல, ஏனென்றால் அவர் புலவர்கள், பிராமணர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்களுக்கு நிலங்களை கொடையாக அளித்தார். விவசாயிகளில் பெரும்பான்மையினர் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்தனர். அவர்கள் மண்ணினுக்கு ஏற்றவாறு வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டனர் - உழுதுண்பார் அல்லது ஏரின்வாழ்னர், ஏனென்றால் அவர்கள் கலப்பையின் முணையை நம்பி வாழ்தனர், வெள்ளாளார் அவர்கள் நீரின் உரிமையாளர்களாகவும் கருதப்பட்டனர் மேலும் காராளர் அல்லது கலமர் என்பதன் பொருள் மேகத்தை ஆள்பவர் என்பதாகும். பெண் விவசாயிகள் உழத்தியர் என்று அழைக்கப்பட்டனர். வெள்ளாளர் உயர் வர்க்க மக்களாக இருந்தனர், அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வந்த உற்பத்தியில் வாழ்ந்து வந்தனர். அடித்தட்டு வர்க்கத்தினர் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நிலங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. உயர் வகுப்பு வெள்ளாளர்கள், நிலத்தை வைத்திருந்ததோடு, அரசரிடம் உயர்ந்த பதவிகளையும் வகித்தனர், நிர்வாக மற்றும் இராணுவப் பணிகளிலும் இருந்தனர், மேலும் அவர்கள் வேள், அரசு, காவிதி போன்ற பட்டங்களைக் கொண்டிருந்ததோடு அரச குடும்பத்தினருடன் திருமண உறவுகளை வைத்திருந்தனர்.[3]

பாரம்பரிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் தவிர, செல்லா நிலக்கிழார்களும் இருந்தனர். புலவர்கள், பிராமணர்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு இறையிலி ( வரி விலக்கு) நிலங்களை அரசர்கள் நன்கொடையாக அளித்த பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் பிரம்மதேயம் என்று அறியப்பட்டது. பிராமணர்களுக்கும் புலவர்களுக்கும் நிலங்களை வழங்கப்பட்ட நிலங்களில், விவசாயப் பணிகள் பெரும்பாலும் குத்தகைதாரர்கள் அல்லது பண்ணைத் தொழிலாளர்களின் பொறுப்பில் விடப்பட்டன. இத்தகைய சாகுபடி தொடர்பான விதிமுறைகள் தெரியவில்லை. சில நேரங்களில் அடியார் என்றழைக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றவர் நிலங்களில் சம்பளத்திற்காக வேலைக்கமர்த்தப்பட்டனர். ஒரு சிறிய நிலத்தை சொந்தமாகக் கொண்ட ஒரு சாதாரண விவசாயியைவிட பரந்த நிலப்பகுதியைச் சொந்தமாக கொண்ட பெரிய நில உரிமையாளர்கள உணவு உற்பத்தியாளர்களாக இருந்த்தால் அவர்கள் பெருமித உணர்வுடையவர்களாக இருந்தனர்.

அசையா சொத்தான நிலம் மற்றும் அதன் உற்பத்தி ஆகியவற்றுக்கு வரிகள் விதிக்கப்பட்டன தேசத்தின் நிர்வாகியாக இருக்கும் மன்னருக்கான ஒரு பங்காக அது கருதப்பட்டது. நிலப்பிரபுக்களும் விவசாயிகளும் வரி செலுத்தினர் - நில வரியானது இறை அல்லது கரை என அறியப்பட்டது மேலும் உற்பத்தி வரியானது வரி என அழைக்கப்பட்டது. அறுவடையில் ஆறில் ஒரு பங்கு வரியாக சேகரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. வெள்ளம் மற்றும் பஞ்சத்தினால், சாகுபடி பாதிக்கப்படும்போது, மன்னர்களால் வரித்தள்ளுபடி செய்யப்பட்டன.[4] வரி வசூலிக்கும் வருவாய்துறை அதிகாரிகள் வரியர் மற்றும் காவிதி எனப்பட்டனர் அவர்களின் உதவியாளர்களான கணக்காளர்கள் ஆயக்கணக்கர் என அழைக்கப்பட்டனர். கூடுதலாக உள்ள தானியங்களை சேகரித்துவைக்க பொது இடங்களிலும். விவசாயிகளின் வீடுகளிலும் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டிருந்தன, இந்த தானியங்கள் வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்களில் மக்களுக்கு உதவின.[5] கிராம மக்கள் நலன்களை பாதுகாக்க தேவையான முடிவுகளை மன்றம் (கிராம சபை) எடுத்தது.

வரிவிதிப்பு நோக்கங்களுக்காக, பல்வேறு அளவீடுகளானது நிலத்தையும் அதன் உற்பத்தி அளவையும் அளவிட பயன்படுத்தப்பட்டன. சிறிய நிலப்பகுதியானது மா என்றும் பெரிய நிலப்பகுதி வேலி என்றும் அழைக்கப்பட்டது. ஒரு வேலி ஒரு நூறு குழிக்கு சமம். பொருள்களை அளக்க கன அளவுகளாக தூணி, நாழி, சேர் , கலம் போன்ற அளவுகளையும் எடை அளவுகளுக்கு துலம் கழஞ்சு போன்ற அளவைகளைப் பயன்படுத்தினர். தானியங்களை அளக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான முகத்தல் அளவைகளாக அம்பானம், நாழி, பதக்கு, மரக்கால் போன்ற ளவைகள் பயன்படுத்தப்பட்டன. கன அளவைகள் அகன்ற நடுப்பகுதியோடும், சற்று குறுகிய கீழ் மேல் பகுதிகளோடு, மதுப் பீப்பாய் வடிவத்தில் இருந்தன. அவை உலோக பட்டைகளால் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தன. துலாக்கோல் என்ற பெயரில் தராசுகள் வழக்கில் இருந்தன.

உற்பத்தி[தொகு]

கம்பு

பழங்காலத் தமிழகத்தில் பரவலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தணம் போன்றவை பயிரிடப்பட்டன. நெல் முதன்மைப் பயிராக இருந்தது. பல்வேறு வகையான நெற்பயிர்களாக வெண்நெல், செந்நெல், புதுநெல், ஐவனநெல், தோராய் போன்ற நெல் வகைகள் மருத நிலப்பகுதியில் பயிரிடப்பட்டன. செந்நெல் மற்றும் புதுநெல்லலில் பல வேறுபட்ட வகைகள் இருந்தன. மிகவும் வளமான மருத நிலத்தில், ஒரு வேலி நிலத்தில் 1000 கலம் நெல் விளைந்தது. மருத நிலத்தை ஒட்டி அதைச் சார்ந்த பகுதிகளிலும் விவசாயிகள் வாழ்ந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் பலா, தென்னை, பனை, பாக்கு போன்ற மரங்கள் இருந்தன. வீடுகளுக்கு முன்னால் மஞ்சள் செடிகளும் வீடுகளுக்கு பின்னால் பூந்தோட்டங்களும் வளர்க்கப்பட்டன. முல்லை நில மக்கள் பழ மரங்கள் மற்றும் கால்நடைகள வளர்ப்பு ஆகிய பணிகளைச் செய்தனர். கரும்பு உற்பத்தியாளர்கள் கரும்புச் சாறை இயந்திரங்களைக் கொண்டுப் பிழிந்தனர். சில இடங்களில், பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது - பருத்தி மற்றும் தினை ஒரே நேரத்தில் சாகுபடி செய்யப்பட்டன, அதன் பிறகு, அவரையானது அதே நிலத்தில் பயிரிடப்பட்டது. அங்கு, பொதுவாக, உபரி உற்பத்தி இருந்தது. ஒவ்வொரு கிராமமும் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்றவையாக இருந்தன. தேவைப்பட்டால் மட்டுமை அண்டை கிராமங்களில் இருந்து கூடுதல் பொருட்கள் வாங்கப்பட்டன. நெலுக்கு பண்டமாற்றாக உப்பு வணிகர்களான உமணர்களால் உப்பு விற்கப்பட்டது. பழங்கால தமிழகத்தின் நகர மையங்களின் வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக கிராமங்களின் வேளாண் உபரி இருந்தது. மன்னர்களும் இந்த உபரி உற்பத்தியை நம்பியே இருந்தனர், ஏனென்றால் படைவீரர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கான ஊதியமாக தானியங்களே வழங்கப்பட்டன. இந்தக் காரணிகளால் உற்பத்திக்கான தேவை மிகுந்து இருந்தது, இது வேளாண்மையின் வேகத்தை அதிகரித்தது.

உத்திகளும் கருவிகளும்[தொகு]

சங்க காலத்தில் மிகவும் திட்டமிட்ட முறையில் சாகுபடி செய்தனர். உழுதல், விதைத்தல் உரமிடுதல், களையெடுப்பு, நீர்ப்பாசனம் , பயிா் பாதுகாப்பு ஆகியவற்றைச் சரியான முறையில் செய்தால் செல்வராக வாழலாம் என்று அறியப்பட்டது.[6] திருவள்ளுவர் தன் திருக்குறளில், ஒரு நல்ல மகசூலை பெறுவதற்காக இந்த அனைத்து செயல்களையும் கவனமாக செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். நெற் கழநிகள் காளைகளின் உதவியுடன் உழப்பட்டன. கழநியில் தழைகளை விவசாயிகள் தங்கள் கால்களில் மிதித்து மூழ்கடித்தனர். நாற்றுகள் வளர்ந்த பின்னர் அவை இடம் மாற்றி நடப்பட்டன. பயிர் முதிர்ந்தவுடன் அவை அறுவடை செய்யப்பட்டன. இடைக்காலத்தில் அவ்வப்போது களைகள் எடுக்கப்பட்டன. அறுவடையான நெற்பயிரை களத்துக்கு கொண்டுவந்து அவற்றை தரையில் தட்டி நெல்மணிகள் பிரிக்கப்பட்டன. நெல் மணிகள் சேகரிக்கப்பட்டு, அளவிடப்பட்டு, சரியான கொள்கலன்களில் சேமிக்கப்பட்டன. சிறுதானியங்கள் பின்புலம் (புஞ்சை) அல்லது வறண்ட நிலங்கள் கொண்ட குறிஞ்சி நிலப் பகுதிகளில் பயிரிடப்பட்டன. பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது - உதாரணமாக, ஒரே பருவத்தில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன, அதற்குப் பிறகு அவரை பயிரிடப்பட்டது.

விவசாயத்தின் உழவு, அறுவடை போன்றவற்றிற்குத் தேவைப்பட்ட பல்வேறு கருவிகள் தயாரிக்கப்பட்டன. அடிப்படை கருவியான ஏர் மெலி, நாஞ்சில், கலப்பை என்றும் அழைக்கப்பட்டது. ஏரானது மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்பட்டது. மாடு அல்லது எருமை ஆகியவற்றில் பூட்டப்பட்ட இது மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்பட்டது. பயிரிடும் நிலத்தை சமன்படுத்த மரத்தாலான பரம்பு அல்லது மரம் என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. பள்ளியாடுதல் (பலுக்கை ஓட்டுதல்) என்பது களை அகற்றவும் பயிர்களுக்கு உள்ள நெறுக்கத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு மரச் சட்டத்தில் பொறுத்தப்பட்ட உலோக அல்லது மரப் பற்களைக் கொண்டிருக்கும் இந்த சட்டத்தை மாடுகளின் உதவியுடன்வயலில் களையை சுத்தம் செய்யப்பட்டது. கார் காலத்தில் பெய்த மழையின் ஈரம் உலர்தற்குள் நிலத்தைப் பல முறை உழுவர். நன்செய் நிலத்தில் உழும் போது ஏற்படும் கட்டிகளை உடைக்க "தளம்பு" என்ற ஒரு வித கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.[7] விளைந்த கரும்பினை வெட்டி எடுத்து அதிலிருந்து சாறினைப் பிரித்தெடுக்க கரும்பு பிழி எந்திரம் பயன்படுத்தப்பட்டதைப் புறநானூறு காட்டுகிறது[8] விவசாயிகள் ஆழமான கிணறுகளிலிருந்து தண்ணீரைப் பாசணத்துக்கு எடுக்க கபிலை என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினர். ஆழமற்ற கிணறுகளில் இருந்து நீரை மேலேற்ற ஏற்றம் என்ற அமைப்பைப் பயன்படுத்தினர். விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் வேலையில் இளம் பெண்களும்[9] மற்றும் அடித்தட்டு வர்க்க விவசாயிகளும் ஈடுபட்டனர். இளம் பெண்கள் பறவைகளை விரட்ட ஒலி எழுப்பும் கருவிகளைப் பயன்படுத்தினர், குறவன், குறத்தியர் பறவைகள், யானைகள் போன்றவற்றை விரட்ட கவண் என்னும் கவண்வில்லைப் பயன்படுத்தினர். இந்தக் கவணைக் கொண்டு குறிபார்த்து விலங்கைக் கொல்ல இயலும் என்றுக் கூறப்படுகிறது. மேலும் தீப்பந்தங்கள் மற்றும் ஊதல்கள் ஆகியவற்றைக் கொண்டும் காட்டு விலங்குகளை வயல்களில் இருந்து விரட்டப் பயன்படுத்தப்படுத்தப்பட்டன. முற்றிய நெல் மற்றும் சோளக் கதிர்களை அறுவடை செய்ய அரிவாள் பயன்படுத்தப்பட்டது. நெல்லை விவசாய தொழிலாளர்கள் களத்தில் தூற்றி பைகளில் அடைத்து கொண்டுபோய் சேமித்தனர்.

நீர்ப்பாசனம்[தொகு]

முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை, இது உலகின் பழமையான நீர் ஒழுங்கு அமைப்பு என்று கருதப்படுகிறது

சங்க காலத்தின் துவக்கத்தில், மக்கள் விவசாயத்திற்கு தேவைப்பட்ட நீர்த் தேவைக்கு மழையையே பெருமளவு நம்பி இருந்தனர். ஆனால், பெருகிய மக்கள்தொகையால் அதற்கேற்ப அதிகரித்த உணவுத் தேவையானது, நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையே குளங்கள், ஏரிகள், அணைகள் போன்ற முக்கிய நீர் சேமிப்பு அமைப்புகள் ஆகும். பாசனத்திற்கான நீரை ஒழுங்குபடுத்துவதற்காக மதகுகள், மற்றும் அடைப்புகளை அமைத்தனர். சிலசமயம் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர் பாசனத்திற்கு தண்ணீர் திருப்பவும் மண் கரைகள் எழுப்பப்பட்டன. காவிரி, பெரியாறு, தமிரபரணி ஆகிய ஆற்றுப் பகுதிகளில் கால்வாய்களை அமைத்து நேரடி நீர்ப்பாசனம் என்பது சாத்தியமான ஒன்றாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் காவேரி ஆற்றில் கட்டப்பட்ட கல்லணை, உலகிலேயே பழமையான நீர் ஒழுங்கு அமைப்பு என்று கருதப்படுகிறது.[10][11][12] காவேரி, பெண்ணாறு, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகியவை தமிழகத்தின் வயல்களுக்கும் குடிநீருக்கும் நீரைக் கொண்டுவந்த முக்கிய ஆறுகள் ஆகும். குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர் வாய்க்கால்கள் மூலம் பாசனத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. பாலாறு, காவேரி, வைகை ஆற்றுப் படுகைகளில் வசந்தக் காலத்தில் கால்வாய்ப் பாசனம் குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. இரண்டாவது போக விவசாயத்துக்கு, இந்த தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தக் காலகட்ட மக்கள் நிலத்தடி நீர் ஓட்டத்தையும் அங்கு கிணறு வெட்டவும் கற்றிருந்தனர். கிணற்று நீரைப் பாசனத்துக்கு இறைக்க மாடுகளும் எருமைகளும் பயன்படுத்தப்பட்டன. நீர் இருப்பு குறைவாக இருந்து தேவை கூடுதலாக இருக்கும்போது, தண்ணீரை சரியாக விநியோகிப்பது கிராம அதிகாரிகளின் கடமையாக இருந்தது. ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைக் கண்காணித்து காக்கவும், நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் பகல் மற்றும் இரவுக் காவல் காரர்கள் பணியாற்றினர்.

மேற்கோள்கள்[தொகு]

 • Balambal, V (1998). Studies in the History of the Sangam Age. Kalinga Publications, Delhi.
 • Pillay, J.K. (1972). Educational system of the ancient Tamils. South India Saiva Siddhanta Works Pub. Society, Madras.
 • Venkata Subramanian, T.K. (1988). Environment and urbanisation in early Tamilakam. Tamil University, Thanjavur.

குறிப்புகள்[தொகு]

 1. Venkata Subramanian. p. 26.
 2. Balambal. p. 60.
 3. Balambal. pp. 61–62.
 4. Balambal. p. 67.
 5. Venkata Subramanian. p. 37.
 6. Pillay, P.G. pp. 50–51.
 7. " மலங்கு மிளிர் செறுவிற் றளம்பு தடிந்திட்ட
  பழன வாளை ........
  புறநானூறு 61 ஆவது பாடல் 3-4 வரி
 8. " கரும்பி னெந்திரஞ் சிலைப் பினயல
  திருஞ்சுவல் வாளைப் பிறழும் "
  புறநானூறு _322 பாடல் 7- வரி
 9. Pillay, J.K. p. 51.
 10. Balambal. p. 64.
 11. Singh, Vijay P.; Ram Narayan Yadava (2003). Water Resources System Operation: Proceedings of the International Conference on Water and Environment. Allied Publishers. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7764-548-X.
 12. "This is the oldest stone water-diversion or water-regulator structure in the world" (PDF). Archived from the original (PDF) on 2007-02-06. பார்க்கப்பட்ட நாள் 2007-05-27.