உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கை உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்

வேளாண்மையில், இயற்கை உரம் (Manure) என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும். இவை கரிம /சேதனப் பொருட்களாலானதாக இருப்பதனால் கரிம /சேதன உரம் அல்லது சேதனப் பசளை (Organic Fertilizer) எனவும் அழைக்கப்படும். ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுப் பொருட்கள், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு, கழிக்கப்பட்ட வைக்கோல், மற்றும் இலை, தழைகள், மண்ணிற்கு இயற்கையாக உரமாகக் கூடிய தாவரங்கள் போன்றவை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்களாகும். இயற்கை உரம் இடுவதால் செடிகளுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் மண்ணின் தன்மையும் மாறாது பாதுகாக்கப்படும்.

விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவுகள் தொழு உரம் அல்லது எரு (animal manure or farmyard manure) எனப்படும். இதில் மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, அவற்றின் சிறுநீர் போன்ற விலங்குகளின் கழிவுகளுடன், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு மீந்திருக்கும் தாவரக் கழிவுகளும் சேர்த்துக் கொள்ளப்படும்[1]. பயிர்களுக்குத் தேவைப்படும் பல முக்கிய ஊட்டச்சத்துக்களை எரு கொண்டுள்ளது. இது தாவரத்தின் வளர்ச்சிக்கு இடப்படும் சத்துப் பொருளாகும்.

தாவரங்கள், அவற்றின் இலை, தழைகளைக் கொண்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் உரமானது பசுந்தாள் உரம் (Green manure) எனப்படும். குறிப்பிட்ட ஒரு பயிர் வேளாண்மைக்கு உட்படுத்து முன்னர், மண்ணுக்கு அதிக ஊட்டம் வழங்கக்கூடிய வேறொரு பயிரைக் குறிப்பிட்ட நிலத்தில் இட்டு, வளர்த்துப் பின்னர், அவற்றை அதே நிலத்தில் உழுது சேர்க்கும்போது, மண்ணுக்குத் தேவையான ஊட்டம், பசுந்தாள் உரமாக வழங்கப்படும்[2]. பொதுவாக நைட்ரசன் ஊட்டக்கூறு அதிகமாகக் கொண்ட அவரையினத் தாவரங்கள் இதில் பயன்படுத்தப்படும்.

இவ்வாறான கழிவுகள் பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மக்கவிடப்பட்டு அல்லது சிதைமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டும் இயற்கை உரமாகப் பயிர்களுக்கு அளிக்கப்படலாம். இது மக்கிய உரம் அல்லது கூட்டெரு (Compost) என அழைக்கப்படும்.

சிலசமயம் இவ்வகையான கழிவுகளில் இருந்தோ, அல்லது சில தாவர வித்துக்களில் இருந்தோ நீரகற்றப்பட்டு, செறிவான உரம் தயாரிக்கப்படும். அது செறிவான கரிம/சேதன உரம் (Concentrated organic fertilizer) எனப்படும்[1].

இயற்கை உர வகைகள்

[தொகு]

விலங்கு எரு அல்லது தொழு உரம்

[தொகு]

விலங்குகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் அல்லது கால்நடை வளர்ப்பு வேளாண்மையில், கால்நடைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளும், அவற்றிற்கான தொழுவங்களிலிருந்து பெறப்படும் கழிவுகளும் இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படலாம். இவ்வகை கழிவுகளில் தாவர வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டக்கூறுகள் கிடைக்கின்றன.

பசுந்தாள் உரம்

[தொகு]

ஒரு பயிர்ச்செய்கையின்போது, பயிர்களால் மண்ணிலுள்ள ஊட்டக்கூறுகள் பயன்படுத்தப்பட்டு, மண்ணின் வளம் குறைகையில், அதனை ஈடு செய்வதற்காக, வேறொரு பயிரை அந்த நிலத்தில் பயிரிட்டு, பயிர் வளர்ந்த பின்னர், அவற்றை அதே நிலத்தில் உழுது, மண்ணுடன் கலப்பதன் மூலம் மண்ணின் வளத்தைக் கூட்டலாம். இவ்வாறு தாவரங்கள் உரமாகப் பயன்படுத்தப்படும்போது, அது பசுந்தாள் உரம் எனப்படும்.

கூட்டெரு

[தொகு]

கூட்டெரு என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும். இதில் தொழு உரம் அல்லது எரு, மற்றும் பசுந்தாள் உரம் போன்ற கரிம /சேதனச் சேர்வைகள் கலந்திருக்கும்.

உயிர்ச்சங்கிலியும் மண் உணவு வலையும்

[தொகு]

உயிர்சார் பொருள்களிலிருக்கும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருள்கள், பக்றீரியாக்களின் உதவியுடன் உருச்சிதைவுக்குட்பட்டு, நிலத்தில் சேர்க்கப்பட்டு, மண் வளத்தைக் கூட்டுவதன் மூலம் இயற்கை உரமாகின்றது. இந்த இயற்கை உரம் தாவரங்களால் பயன்படுத்தப்பட்டு, தாவர வளர்ச்சி நிகழ்கின்றது. தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி, ஒளிச்சேர்க்கை மூலம், ஊட்டப்பொருட்களை தம்முள் செறிவாக்கிக் கொள்கின்றன. மேலும் சில பக்றீரியாக்களின் உதவியுடன் தாவரங்களில் நைதரசன் நிலைப்படுத்தல் நிகழ்கின்றது. பின்னர் தாவரங்களை விலங்குகள் உணவாக உட்கொள்கின்றன. அந்த விலங்குகளின் கழிவுகள் மீண்டும் இயற்கை உரமாக மண்ணுக்கு வழங்கப்படும்போது, மண்ணின் வளம் மீண்டும் கூட்டப்படுகின்றது. இவ்வாறு உயிரினங்களுக்கிடையிலான ஓர் உயிர்ச்சங்கிலியும், மண் உணவு வலை (soil food web) யும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Organic farming". TNAU Agritech Portal. Tamilnadu Agricultural University, Coimbatore. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2013.
  2. http://dictionary.reference.com/browse/green+manure

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_உரம்&oldid=3696927" இலிருந்து மீள்விக்கப்பட்டது