வைக்கோல்
வைக்கோல் (Straw) கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புல், கூலம், போன்றவற்றின் தாள்செறிந்த தட்டாகும். இது வெட்டித் துண்டாக்கப்பட்டு உலர்த்தி ஆடு, மாடு, செம்மறி, குதிரை போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படும். என்றாலும், இது கினியா பன்றி, முயல் போன்ற வீட்டு விலங்குகளின் தீவனமாகவும் பயன்படுகிறது. பன்றிகள் வைக்கோலைத் தின்று பிற தாவர்வுண்ணிகளைப் போல நன்கு செரித்துக் கொள்ள முடிவதில்லை.
வைக்கோல் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் மேயமுடியாத மழைக்காலங்களிலும் தீவனமாகிறது. கால்நடைகள் தொழுவத்திலோ கொட்டகையிலோ கட்டிவைத்துள்ள போதும் வைக்கோல் தீவனமாகிறது.
புல்லரிசி, பார்லி, கோதுமை போன்றவற்றின் தாள்கள் பச்சையாகவே அறுத்து உலர்த்தி தீவனம் ஆக்கி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன; என்றாலும் அவை அறுவடைக்குப் பின் நெல்மணிகளை போரடித்து உதிர்த்ததும் நேரடியாக தாளாகவே முதன்மையான தீவனமாக கால்நடைகளுக்குப் பயன்படுகின்றன. கதிருடன் பச்சையாக வெட்டித் தீவனமாக்கிய வைக்கோலினும் தாள்வைக்கோலில் ஊட்டச் சத்து மிகவும் குறைவாகவே உள்ளது.
தாளும் கதிரும் சேர்ந்த வைக்கோலில் தான் தரமான ஊட்டச் சத்து உள்ளது. ஏனெனில், கதிரில் தான் தாளைவிட ஊட்டச் சத்து மிகுந்துள்ளது.[1]:194 எனவே உழவர் முற்றிய கதிர் உள்ள தாளை வயலில் அறுவடை செய்து வெட்டித் துண்டுகளாக்கி ஈரம் முழுவதும் வற்றும்படி மணிகள் உதிராதபடி உலர்த்துவர். பிறகு அவற்றைக் கட்டுகளாகக் கட்டி சிப்பங்கள் ஆக்கிப் போர்களில் அல்லது கிடங்குகளில் தேக்கிவைப்பர். .[1]:194
வைக்கோலை அறுவடைக்குப் பிறகு கவனமாக வானிலை ஊறுகளில் இருந்து பேணவேண்டியுள்ளது. வறட்சிக் கால அறுவடைகளில் கதிரளவை விட தாள் அளவு கூடுதலாகி விடுவதால், மிகக் குறைந்த ஊட்டச் சத்துள்ள வைக்கோலையே தருகின்றன. மிக ஈரமான வானிலைகளில் வயலில் வைக்கோல் மட்கி விடுவதால் அவற்றைக் கட்டுகளாக்கிச் சிப்பம் கட்ட இயலாமல் போகிறது. எனவே அறுவடை காலத்தின் சில வாரங்கள் உழவருக்கு வானிலை மிக அறைகூவலான காரணியாகி விடுகின்றன. நல்ல வானிலைக் காலத்தில் உழவர் அறுப்பு, கதிரடிப்பு, கட்டுகட்டுதல் பணிகளில் முனைப்பாக ஈடுபடுவர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இதை நமக்கு உணர்த்துகிறது. ஈர வைக்கோல் போரில் போரில் வைக்கோல் மட்கிவிட வழிவகுக்கும். இதனால் தீவனம் நஞ்சாகி கால்நடைகளை நோய்வாய்ப்படச் செய்யும்.
அறுவடைக்குப் பின் வைக்கோல் நனையாமல் பேணப்படும். மட்குதலும் காளான் பீடிப்பும் வைக்கோலின் ஊட்டத்தைக் குறைப்பதோடு கால்நடைகளுக்கு நோய்களையும் ஏற்படுத்தும். வைக்கோலின் இணைவாழ்வுப் பூஞ்சை மாடுகளிலும் குதிரைகளிலும் நோய்களை உருவாக்கும்.[2]
உயர்தர பெரும வைக்கோலின் அறுவடை உகந்தநிலப் பயிரீடு, வளமானவயல், உகந்த வானிலை ஆகிய காரணிகளைச் சார்ந்துள்ளது. இந்நிலைமைகளில் பயிரிடும் பண்ணைகளில் வானிலை கேடுறும்வரை விரைவும் செறிவும் மிக்க செயல்பாடுகள் அமையும்.
தமிழகத்தில் நெற் பயிர் அறுவடைக்குப் பின் நெல் தாள் உலர்த்தப்பட்டு கால்நடைகளுக்குக் (குறிப்பாக மாடுகளுக்கு) உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வைக்கோல் என்று அழைக்கப்படுகிறது. வைக்கோல், அதன் உலர்ந்த நிலையிலேயே கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகையால், உழவர்கள் வைக்கோல் ஈரப்படாமலும் மழையில் நனையாமலும் காக்க முயல்வர். அப்படி ஈரப்பட்டாலும் வெயிலில் ஓரிரு நாட்கள் காய வைப்பதன் மூலம் வைக்கோலை உலர வைத்து கால்நடைகளுக்கு உண்ணத் தர முடியும். ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்ட வைக்கோலை வைக்கோல் போர் அல்லது வைக்கோல் படப்பு என்பர். அவ்வாறு குவித்து வைத்த வைக்கோல் காற்றில் பறந்து விடாமல் காக்க, வைக்கோல் போரை சுற்றி வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிரியை சுற்றி வைப்பர். வைக்கோல் போர்களைக் கூல (தானிய) மூட்டைகளை பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் கிடங்காகவும் உழவர்கள் பயன்படுத்துவர். இது தவிர வைக்கோலைக் குடிசைகளின் மேலும் இட்டு கூரை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவதும் உண்டு
உட்கூறுகள்
[தொகு]வட்டாரம் சார்ந்து வழக்கமாக வைக்கோல் பலவகைத் தாவரக் கலவையால் ஆனதாக அமையும். இவற்றில் மேய்ச்சல் புல், புல்லரிசிப் புல் (உலோலியம் சிறப்பினங்கள்), திமோத்தி, புரோம், பெர்முடா, பூஞ்செடிப் புல்லினங்களும் இன்னும்பிற சிறப்பினங்களும் அடங்கும். தீவன வைக்கோலாக அல்பால்பா, சிவப்பு, வெள்ளைக் கிராம்பு, மிதவெப்ப மண்டலக் கிராம்பு போன்ற பருப்புவகைப் பயிர்த் தட்டுகளும் பயன்படுகின்றன. பருப்புவகைத் தீவன வைக்கோல் பூக்கும் முன்பேனைளந்தட்டுகளை வெட்டி உலர்த்தித் தீவனமாக்கப்படுகின்றன. சில மேய்ச்சல் நிலப் பூடுகளும் தீவனமாகப் பயன்படுகின்றன. என்றலும், சில பூடுகள் சில கால்நடைகளுக்கு நஞ்சாகின்றன.
வைக்கோலின் வேதி உட்கூறுகள்
[தொகு]விவரிப்பு | நீர் | சாம்பல் | அல்புமினாயிடுகள் | கரட்டு நாரிழை | காலகமில்லாத பொருள் அளவு | கொழுப்பு |
---|---|---|---|---|---|---|
புதர் வைக்கோல்- மலினவகை | 14.3 | 5.0 | 7.5 | 33.5 | 38.2 | 1.5 |
புதர் வைக்கோல்- சராசரிவகை | 14.3 | 6.2 | 9.7 | 26.3 | 41.6 | 2.3 |
புதர் வைக்கோல்- சிறப்புவகை | 15.0 | 7.0 | 11.7 | 21.9 | 42.3 | 2.2 |
புதர் வைக்கோல்- முதன்மைவகை | 16.0 | 7.7 | 13.5 | 19.3 | 40.8 | 2.6 |
செங்குளோவர் வைக்கோல்- மலினவகை | 15.0 | 5.0 | 7.5 | 33.5 | 38.2 | 1.5 |
செங்குளோவர் வைக்கோல்- சராசரிவகை | 16.0 | 5.3 | 12.3 | 26.0 | 38.2 | 2.2 |
செங்குளோவர் வைக்கோல்- சிறப்புவகை | 16.5 | 5.3 | 12.3 | 26.0 | 38.2 | 2.2 |
செங்குளோவர் வைக்கோல்- முதன்மைவகை | 16.5 | 7.0 | 15.3 | 22.2 | 35.8 | 3.2 |
புரத நாரிழை | ||||||
புற்கள் | ||||||
திமோத்திவகை | 14.3 | 5.0 | 7.5 | 33.5 | 38.2 | 1.5 |
செந்தலைப் புல் | 8.9 | 5.2 | 7.9 | 28.6 | 47.5 | 1.9 |
கென்டகிவகை நீலப் புல் | 9.4 | 7.7 | 10.4 | 19.6 | 50.4 | 2.5 |
பூஞ்செடிப் புல் | 9.9 | 6.0 | 8.1 | 32.4 | 41.0 | 2.6 |
புதர்ப் பூடு | 20.0 | 6.8 | 7.0 | 25.9 | 38.4 | 2.7 |
புரோம்வகைப் புல் | 11.0 | 9.5 | 11.6 | 30.8 | 35.2 | 1.8 |
யான்சன்வகைப் புல் | 10.2 | 6.1 | 7.2 | 28.5 | 45.9 | 2.1 |
பருப்பினங்கள் | ||||||
அல்பால்பா | 8.4 | 7.4 | 14.3 | 25.0 | 42.7 | 2.2 |
செங்குளோவர் | 20.8 | 6.6 | 12.4 | 21.9 | 33.8 | 4.5 |
Crimson clover | 9.6 | 8.6 | 15.2 | 27.2 | 36.6 | 2.8 |
பசும்பட்டாணி | 10.7 | 7.5 | 16.6 | 20.1 | 42.2 | 2.9 |
சோயா அவரை | 11.3 | 7.2 | 15.4 | 22.3 | 38.6 | 5.2 |
பார்லி | 10.6 | 5.3 | 9.3 | 23.6 | 48.7 | 2.5 |
ஓட்சு | 16.0 | 6.1 | 7.4 | 27.2 | 40.6 | 2.7 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Deere and Company (1957), "23: Hay conditioners", The Operation, Care, and Repair of Farm Machinery (28th ed.), Moline, Illinois, USA: Deere and Company, அமேசான் தர அடையாள எண் B000FNB7WM, இணையக் கணினி நூலக மைய எண் 965865819.
- ↑ Jones, Steven M.; Russell, Mark, Managing Fescue for Horses FSA3042 (PDF), ஆர்கன்சா பல்கலைக்கழகம் Division of Agriculture, archived from the original (PDF) on 2013-12-29, பார்க்கப்பட்ட நாள் 2019-10-24,
Cattle grazing fescue often develop a chronic, unthrifty condition, especially apparent during the summer months. In addition, some cattle occasionally develop lameness and lose portions of their feet and tails during fall and winter. Some mares grazing fescue have reproductive problems during the last trimester of pregnancy.
- ↑ The American Peoples Encyclopedia. Chicago, Illinois: Spencer Press, Inc. 1955. pp. 10-291/10-292.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Hay தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கிமூலத்தில் உள்ள ஆக்கங்கள்:
- "Hay". New International Encyclopedia. (1905).
- "Hay (fodder)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
- "Hay". Encyclopedia Americana. 1920.
- "Hay". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).
- Hay Harvesting in the 1940s instructional films, Center for Digital Initiatives, University of Vermont Library