உள்ளடக்கத்துக்குச் செல்

உழவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் உழவு
சோழவந்தான் அருகே நெல்வயலில் மாடுபூட்டி ஏர் உழவு செய்யும் காட்சி
Wikipedia:Media help
Wikipedia:Media help

உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததைத் தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.[2][3]

காலனிய இந்திய விவசாயிகள்

[தொகு]

ஐந்து நூற்றாண்டுகள் அரசாண்ட இஸ்லாமியர் ஆட்சியின்போது கிராமப்புற வாழ்க்கை சிறிதும் மாறவில்லை. ஆனால் ஆங்கிலேயர் அரசாட்சி தன்னிறைவு பெற்றிருந்த கிராமங்களை சிதைத்து மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியது. இந்திய மன்னர்கள் நிலத்திலிருந்து கிடைத்த விளைச்சலில் 1/6 பங்கு அல்லது 1/4 பங்கு என நிலவரியை விளைபொருளாகவே வசூலித்தனர். இதற்கு மாறாக ஆங்கிலேயர், விவசாயி நிலத்தை பயிர் செய்தாலும் அல்லது தரிசாகப் போட்டிருந்தாலும், அந்நிலம் தரக்கூடிய விளைச்சலின் அடிப்படையில் நிலவரி யைக் கணக்கிட்டு ரொக்கமாக வசூலித்தனர். இதனால் பருவமழை பொய்த்த காலத்தில் நிலத்தை உழுது பயிரிடாத போதும் வாடகை போன்று நிலவரியை விவசாயி செலுத்த வேண்டியதிருந்தது. நடைமுறையில் இருந்த சித்ரவதைச் சட்டம் நிர்ணயித்திருந்த நிலவரியை பலவந்தமாக வசூலிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் கையாண்ட சித்ரவதைகளை நியாயப்படுத்தின. இச்சட்டம் 1858ஆம் ஆண்டு பேரரசின் நேரடி ஆளுகைக் குள் இந்தியா கொண்டுவரப்பட்ட பின் ஒழிக்கப்பட்டது. இருப்பினும் நிலவரி கட்டத்தவறிய விவசாயிகளின் கால்நடைகள், வீட்டில் இருக்கும் தட்டு முட்டு சாமான்கள் ஆகியவற்றைப் பறி முதல் செய்யவும், நிலத்திலிருந்து அவர்களை வெளியேற்றவும் வருவாய்த்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.அதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாயினர். அரசு வழங்கிய கடன் மூன்று சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே போதுமானதாயிருந்தது. மீதமுள்ள 97 சதவீதமானவர்கள் வட்டிக் கடைக்காரர்களையே நம்பி இருக்க வேண்டியிருந்தது. இந்த வட்டிக் கடைக்காரர்கள் வருடத்திற்கு 37.5 சதவீதம் முதல் 56.25 சதவீதம் வரை வட்டிவாங்கினர். 1853 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 7 சதவீதமான விவசாயிகள் மட்டுமே வட்டிக் கடைக்காரர்களிடம் செல்லாமல் வரி செலுத்த முடிந்தது. மீதமுள்ளோரில் 49 சதவீதத்தினர் விளைந்த பயிர்களை அடமானம் வைத்தும், 34 சதவீதத்தினர் அறுவடை முடிவடைந்த உடனேயே பயிர்களை விற்றும் நிலவரி செலுத்தினர். ஆங்கிலேயர் வருகைக்கு முன் வட்டிக்கடைக்காரர்கள் நஷ்ட பயத்துடன்தான் கடன் கொடுத்து வந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் கடன் திரும்பாவிட்டால் கடன் கொடுத்தவர்கள் அடமானத்திலிருந்த சொத்தை அபகரித்துக் கொள்ளும் உரிமையை சட்ட ரீதியாகப் பெற்றனர். இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலர் நிலத்தை இழந்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர் ஆயினர். மேலும் நிலம் வேளாண் வகுப்பைச் சாராதவர் கைக்கு பெரும் அளவில் மாற இது வழிவகுத்தது.[4]

இந்திய விவசாயிகள்

[தொகு]

இந்தியாவில் யார் விவசாயி என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் ஒரு வகைதான் பிரதானமான விவசாயி என்பவர். எவர் ஒருவர் ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ அவர் தான் பிரதானமான விவசாயி ஆவார். இவர் தான் முழுமையாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமானத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார். எவரொருவர் ஆண்டொன்றுக்கு 3 முதல் 6 மாத காலம் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ (இதில் 1 முதல் 3 மாத காலம் கேஷூவல் தொழிலாளியாக இருந்திருக்கலாம்) அவர் பகுதிநேர விவசாயி ஆவார். இவர்களுக்கு அடுத்து விவசாயத் தொழிலாளர்கள் என்ற பிரிவினர் உள்ளனர். இவர்களையும் பிரதானமான விவசாயத் தொழிலாளி மற்றும் பகுதிநேர விவசாயத் தொழிலாளி என வகைப்படுத்திடலாம். இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதானமான விவசாயிகளையே உண்மையான விவசாயிகளாகக் கருதுகிறது.[5]

எண்ணிக்கை

[தொகு]

மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிற அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1991 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. திட்டக் கமிஷனின் புள்ளி விவரத்தின் படி 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் விவசாயத் துறையில் 140 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளது.[5]

தற்கொலை

[தொகு]

தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) 2013ஆம் ஆன்டு ஜூன் மாத இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பெண் விவசாயிகள் எண்ணிக்கை இடம் பெறவில்லை. இந்திய அரசும், காவல் துறையும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் பெண் விவசாயிகளை விவசாயிகளாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, அவர்களை விவசாயியின் மனைவியாகவே கணக்கில் கொள்கின்றனர். எனவே, 8 முதல் 10 சதம் வரையிலான பெண் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் தெரிவிப்பது முழுமையான உண்மையல்ல. அதே போல தற்கொலை செய்து கொண்ட தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் எண்ணிக்கையும் இந்த புள்ளி விவரத்தில் இடம் பெறவில்லை. ஏனெனில், பெரும்பாலான தருணங்களில் இறந்து போன தலித் அல்லது பழங்குடியின விவசாயியின் பெயரில் பட்டா இல்லை என்ற காரணத்தை காவல் துறையினர் காட்டுகின்றனர். ஆக மொத்தத்தில், உயிரிழந்த பெண் விவசாயிகள், தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை சேர்க்காத போதும் கூட தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 2,84,694 ஆக உள்ளது. அப்படியானால், கடந்த 9 ஆண்டுகளில் நமது நாட்டில் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சுழன்றும் ஏர் பின்னது உலகு". Archived from the original on 2009-07-20. பார்க்கப்பட்ட நாள் 2009-11-13.
  2. விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை
  3. ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
  4. பேரா. கா. அ. மணிக்குமார் (10 மார்ச் 2013), "காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்", மார்க்சிஸ்ட், பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013 {{citation}}: Check date values in: |date= (help)CS1 maint: date and year (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 5.2 "The Country and The Farmer- P Sainath". People's Democracy. 21 July 2013. Archived from the original on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இதனையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவர்&oldid=3576715" இலிருந்து மீள்விக்கப்பட்டது