உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குற்றாலம் குற்றாலநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
குற்றாலம், திருகுற்றாலநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திரிகூட மலை,பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம்..முதலான 21 பெயர்கள்[1]
பெயர்:குற்றாலம், திருகுற்றாலநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சன்னதித் தெரு, குற்றாலம், தென்காசி வட்டம்[2]
மாவட்டம்:தென்காசி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:குற்றாலநாதர், திருக்குற்றாலநாதர்
தாயார்:குழல்வாய்மொழி அம்மன், பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம்:குறும்பலா
தீர்த்தம்:சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி
ஆகமம்:மகுடாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை விசு, அமாவாசை, ஆவணி லம், நவராத்திரி, ஐப்பசி விசு, திருக்கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சித்ரா பௌர்ணமி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர்.
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:கல்வெட்டுகள் 89, நாயக்க மன்னர்களின் செப்பேடுகள்

திருகுற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சிவன் கோயிலாகும்.[2] இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.

கோயில் அமைப்பு

[தொகு]
குற்றாலநாதர் கோயிலின் சித்திர சபைக்கு எதிரேயுள்ள கோயில் குளம்

இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.

  • இறைவன் - குற்றாலநாதர் - திரிகூடநாதர்
  • இறைவி - குழல்வாய் மொழியம்மை

இக்கோயிலில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி சன்னதிகளும், செண்பக விநாயகர், அம்பல விநாயகர். ஆறுமுக நயினார். தட்சணாமூர்த்தி, கன்னி விநாயகர். சந்திரன். வான்மீகிநாதர். சம்புகேஸ்வரர், அண்ணாமலைநாதர். திருமூலநாதர், ராமலிங்கர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கைலாசநாதர், துர்க்கை, பராசக்தி, சைலப்பர், வல்லப விநாயகர், நன்னகர பெருமாள், பாபநாசர்-உலகம்மாள், நெல்லையப்பர்-காந்திமதியம்மாள், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், சகஸ்ரலிங்கம், பால்வண்ணநாதர், சொக்கலிங்கர்-மீனாட்சி, சாஸ்தா, மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, சோமலிங்கர், அகஸ்தியர், வாசுகி, மகாலிங்கம், சங்கரலிங்கம், காசிவிஸ்வநாதர், பெரிய ஆண்டவர் சாஸ்தா, சிவாலய முனிவர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

திருஞான சம்பந்தர் தேவார பதிகம்
வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
அம்பானெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்.

குற்றால மகிமை

[தொகு]
குற்றாலநாதர் கோயிலின் சித்திர சபை

சிவ தலங்களுள் பஞ்சசபைகளில் இது சித்திரசபை எனப்படும்.

பாடல்கள்

[தொகு]
சுற்றாத வூர்தோறுஞ் சுற்றவேண்டாம் புலவீர்
குற்றால மென்றொருகாற் கூறினால்- வற்றா
வடவருவியான் மறுபிறவிச் சேற்றில்
நடவருவி யானே நமை.
திருநாவுக்கரசு நாயனார் திரு அங்கமாலை
உற்றா ராருளரோ - உயிர்
கொண்டு போம் போழுது
குற்றாலத்துறை கூத்தனல் லானமக்
குற்றா ராருளரோ.
மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவாசகம்
திருப்புலம்பல் -சிவானந்த முதிர்வு
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையுங்
குற்றாலத் தர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
பட்டினத்தார்
காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

பராசக்தி பீடம்

[தொகு]

குற்றாலநாதர் மூலவரின் வடதிசையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம் எனப்படும் பராசக்தி பீடம் சிறுகோயிலாக உள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்கு பராசக்தி அரி, அயன், அரன் மூவரையும் பயந்தாள். இவள் சன்னிதானத்தில் தானுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது.

புராணம்

[தொகு]

திருமால் சிவன் ஆனது திருவிளையாடல் புராணம்

கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார்.

அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது.

நன்நகரப்பெருமாள்

[தொகு]

வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார்.

முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்
பத்தியி னெல்லைகாகும் பகவனெ திகிரியாளா
கத்தனே யருள்சூற்கொண்டகந்தரக் கருப்பினானே
நத்தணி செவியகோல நாடுதற் கரியநம்பி
என்று சிவனுக்கும் விஷ்னு வுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி கோயிலுள் சென்றனர்.

தைலமுழுக்கு

[தொகு]

அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.

குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத் தலையிடியும்
எனும் சொல் வழக்கு உள்ளது

கோயிலின் புராணப்பெயர்கள்

[தொகு]

இவ்வூருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகத் தலபுராணத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள்:

  • பிதுர் கண்டம் தீர்த்த புரம்
  • சிவத்துரோகம் தீர்த்த புரம்
  • மதுவுண்டான் உயிர் மீட்ட புரம்
  • பவர்க்க மீட்ட புரம்
  • வசந்தப் பேரூர்
  • முதுகங்கை வந்த புரம்
  • செண்பகாரணிய புரம்
  • முக்தி வேலி
  • நதிமுன்றில் மாநகரம்
  • திருநகரம்
  • நன்னகரம்
  • ஞானப்பாக்கம்
  • வேடன் வலஞ்செய்த புரம்
  • யானை பூசித்த புரம்
  • வேத சக்தி பீட புரம்
  • சிவ முகுந்த பிரம புரம்
  • முனிக்கு உருகும் பேரூர்
  • தேவகூட புரம்
  • திரிகூடபுரம்
  • புடார்ச்சுனபுரம்
  • குறும்பலா விசேட புரம்[1]

கோயிலின் தொன்மை

[தொகு]

மாணிக்கவாசகர் பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை] காலத்தவர் என்பதால் இத்தலம் அதற்கும் முந்தையது ஆகும்.

தேவாரம் பாடல்களில் குறிப்பிட பட்டுள்ளதால் 6 ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் இருந்துள்ளது என்பது சான்றாகும்.

பொ.ஊ. 10 ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரையும், அதற்கு முந்தையக் கல்வெட்டுகளும் பல உள்ளன.

பாண்டிய மன்னன் சடையன் மாறன் (பொ.ஊ. 921–922) காலத்தில் இத்திருக்கோயிலின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததும், குற்றாலம் தேவார நாட்டின் பகுதியாக விளங்கியமையும், ’பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.[4]

கல்வெட்டுகள்

[தொகு]

இத்திருக்கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுகள் உள்ளன.

  • சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்து (பொ.ஊ. 927–943) வட்டெழுத்துக் கல்வெட்டுகள் 10. இம்மன்னன் காலத்துக்கல்வெட்டில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் இம்மன்னன் மதுரை கொண்ட பரகேசரிவர்மன் என்று குறிக்கப்படுகின்றார்.

முதலாம் பராந்தகச் சோழ மன்னனின் கல்வெட்டு பாண்டிய நாட்டில் இத்திருக்கோயிலில் மட்டுமே காணப்படுகின்றது. இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுகளில் சூரிய கிரகண நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இம்மன்னனின் ஆட்சிக்காலத்தினை அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.

  • முதலாம் இராசராசன் எனும் மாமன்னன் காலத்துக்கல்வெட்டுகள் மூன்று உள்ளன. இம்மன்னர் பழுதடைந்த கோயிலினைப் புதுப்பித்தவர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படியெடுத்து தமிழ்க் கல்வெட்டுகளை அமைத்தவர். சேர மன்னரின் கடற்படையைக் காந்தளூர்ச் சாலையில் சோழர்கள் அழித்த செய்தியும் வரலாற்றுக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றது.
  • பாண்டியன் மாறன் சடையன் இரண்டாம் வரகுணபாண்டியன் கல்வெட்டு (கல்வெட்டு எண் 480), பாண்டியன் சடையன்மாறன் இரண்டாம் இராசசிம்மன் கல்வெட்டு (கல்வெட்டு எண் 417) போன்ற கல்வெட்டு செய்திகளும் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய கல்வெட்டுகள் படியெடுக்கும் நிலையில் இல்லை என்று தொல்லியல் துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாண்டியர் கல்வெட்டுகள் 75 இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன.
  • எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மாறஞ்சடையன் பரகேசரி வர்மன் (பொ.ஊ. 765–815) வட்டெழுத்துக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டு.
  • பாண்டியன் மாறவர்மன் காலத்துக் கல்வெட்டுகளில், வடவாரிய நாடு, தென்னாரிய நாடு மக்கள் இத்திருக்கோயில் வழிபாட்டிற்காகச் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன.
  • திரிபுவன சக்கரவர்த்தி என்று புகழப்பட்ட மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் 512 பேர் கொண்ட சபை இருந்தது என்பதும் நீட்டலளவைக்கு ’சுந்தரபாண்டியன் கோல்’ எனும் கருவி பயன்பாட்டில் அக்காலத்தில் இருந்து வந்ததும் தெரியப்படுத்தும் கல்வெட்டுகள் உள்ளன.[4]

பூசைகள்

[தொகு]

பங்குனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் சித்திரை விசு, அமாவாசை, ஆவணி லம், நவராத்திரி, ஐப்பசி விசு, திருக்கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை. ஐப்பசி. மார்கழி மாதம் சித்திரை 5ம் திருநாள் ஐப்பசி 5ம் திருநாள். மார்கழி 5ம் திருநாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தை மாதம் தை மகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

ஆதாரம்

[தொகு]
  • திருக்குற்றாலத் தல வரலாறு கோயில் வெளியீடு தர்மகர்தர் ஷண்முகந்யினார் எழுதியது நான்காம் பதிப்பு ஆண்டு 1951
  1. 1.0 1.1 திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்கம் 35,36
  2. 2.0 2.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  4. 4.0 4.1 திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; பக்கம் 43-53

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]