உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):புத்தூர், திருப்புத்தூர்
பெயர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்புத்தூர்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருத்தளி நாதர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:சிவகாமி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:ஸ்ரீதளி தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், அருணகிரியார்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் [1], அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் மதுரை-காரைக்குடி அல்லது மதுரை-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 62 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.[2] இத்தலத்தில் பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலட்சுமி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

திருப்புத்தூர் பெயர்க் காரணம்

[தொகு]

திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். இவ்வூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்துள்ளது. தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் இவ்வூரில் தொடர்ந்து தவம் செய்து வந்துள்ளனர். முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களை சுற்றி கரையான் புற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்விடம் முழுவது பல புற்றுகள் காணப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் இவ்விடத்தை புத்தூர் என அழைக்க ஆரம்பித்து நாளடைவில் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயில் ராஜகோபுரம், பிரகாரங்கள், முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர், யோகநாராயணர், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நடராஜர்-சிவகாமி, சந்திரசேகரர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

முன்மண்டபம்

[தொகு]

முன்மண்டபத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், சூரியதேவர், சரஸ்வதி, லட்சுமி, சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த மண்டபத்தில் உள்ள ஆடல்வல்லான் சன்னதியின் தூண்கள் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளன.

உட்பிரகாரம்

[தொகு]

உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், 27 நட்சத்திரங்கள், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரானி, சாமுண்டி, விநாயகர், சேஷ்டாதேவி, பிரகார விநாயகர், வர்ணலிங்கம் ஆகியவை உள்ளன. அப்பிரகாரத்தில் கருவறைக்குப் பின்னர் சரக்கொன்றை மரம் உள்ளது. அருகே வால்மீகி தவமிருந்ததாக ஒரு இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் உள்ளது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

வெளிப்பிரகாரம்

[தொகு]

வெளிப்பிரகாரத்தில் வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும், வன்னிமர விநாயகர் சன்னதியும் உள்ளன. அதே பிரகாரத்தில் யோக பைரவர் சன்னதியும், திருநாகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. அதற்கடுத்து சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது.

ஆலயச் சிறப்பு

[தொகு]

இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார்.

கௌரி தாண்டவத்திருத்தலம்

[தொகு]

திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

திருப்புத்தூர் திருத்தாண்டகம்

[தொகு]

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(காய் காய் மா தேமா அரையடிக்கு)

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
நற்கனகக் கிழிதருமிக்(கு) அருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவன்என் சிந்தை யானே. 3

என்று தொழுதேத்தி, தமது திருப்புத்தூர் திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் புகழ்ந்து பாடியுள்ளார்.[3]

ஸ்ரீயோக பைரவர்

[தொகு]

கிரக தோஷம் போக்கும் ஸ்ரீயோக பைரவர் (ஆதிபைரவர்)பைரவர்

திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர். இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர். பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார். பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன. மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள். பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!

தேரோட்டம்

[தொகு]

2015ஆம் ஆண்டு வைகாசி விகாசத் தேரோட்டம் 31.5.2015 மாலை சிறப்பாக நடைபெற்றது. :மூன்று தேர்களில் முறையே விநாயகரும், சிவபெருமானும், அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்டத்தில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.[4]

கோயில் படத்தொகுப்பு

[தொகு]

கலையழகு படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_026.htm பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருப்புத்தூர் தேவாரத் திருப்பதிகம் (முதல் திருமுறை 26வது திருப்பதிகம்) 1.26 திருப்புத்தூர் 272>282
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், 28, அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009
  3. http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_076.htm பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம் 6.76 திருப்புத்தூர் - திருத்தாண்டகம் -(ஆறாம் திருமுறை) 755>764-திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
  4. திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி தேரோட்டம் தினமணி, 1.6.2015

வெளி இணைப்புகள்

[தொகு]