ஜூலை 16, 1987 இல் இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றிருந்த ஜெயில் சிங்கிற்கும்இந்தியப் பிரதமரும்காங்கிரசுத் தலைவரான ராஜீவ் காந்திக்கும் விரைவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எனவே 1987 தேர்தலில் ராஜீவ் ஜெயில் சிங்கினை மீண்டும் வேட்பாளாராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு பதில் முன்னாள் தமிழ்நாடு மற்றும் நடுவண் அரசு அமைச்சரும், அப்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்தவருமான ரா. வெங்கட்ராமன் காங்கிரசு வேட்பாளராக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயன்றன. ஜெயில் சிங்கையே தேர்ந்தெடுக்கலாம் என்று பாஜக விரும்பியது. ஆனால் சிபிஐ, சிபிஎம் போன்ற இடது சாரி கட்சிகளுக்கு இதனை ஏற்கவில்லை. எனவே முன்னாள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் 1950களில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான வி. ஆர். கிருஷ்ணய்யர் எதிர்க்கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக் அவருக்கு ஆதரவளிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்து விட்டது. மேலும் அதிமுக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, சிக்கிம் சங்க்ராம் பரிசத் போன்ற மாநில கட்சிகள் வெங்க்ட்ராமனுக்கு ஆதரவளித்தன. இவ்விருவரைத் தவிர மிதிலேஷ் குமார் சின்ஹா என்ற சுயேட்சை வேட்பாளரும் போட்டியிட்டார். வெங்கட்ராமன் 72.2 % வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.