மலேசியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவின் வரலாறு ஆங்கிலம்: History of Malaysia; மலாய்: Sejarah Malaysia) என்பது தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா எனும் நாட்டின் வரலாறு ஆகும். இன்று மலேசிய நாடு ஓர் அரசியல் சட்ட முடியாட்சிக் கூட்டமைப்பாக விளங்குகிறது.

உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையில் மலேசியா அமைந்து உள்ளது. அதனால் உலகம் தழுவிய வணிகச் செயற்பாடுகளையும், பல்வேறு பண்பாடுகளையும் இந்த நாடு சந்தித்து உள்ளது.

பொது[தொகு]

முன்பு காலத்து ஐரோப்பிய குறிப்புகளில் ஒன்றான தொலமியின் (Ptolemy) ‘’ஜியோகிரபியா’’ (Geographia) நூலில் மலேசியாவைப் பற்றி சொல்லப்படுகின்றது. இதில் “தங்க செர்சோனீஸ்” (Golden Chersonese) என்று குறிப்பிடப்படும் இடத்தை ஆய்வாளர்கள் இன்றைய மலாயாத் தீபகற்பம் என அடையாளம் கண்டுள்ளனர்.[1] இந்தியாவில் இருந்து இந்து சமயமும், சீனாவில் இருந்து பௌத்தம், தாவோயிசம் போன்ற மதங்களும் இப்பகுதியின் தொடக்ககால வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தின.

இது சுமாத்திரா தீவைத் தளமாகக் கொண்ட ஸ்ரீ விஜய நாகரிகக் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. 7-ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில், ஸ்ரீ விஜயத்தின் செல்வாக்கு சுமத்திரா, ஜாவா, மலாயா தீபகற்பம், போர்னியோவின் பெரும்பகுதியில் பரவி இருந்தது.

வரலாறு[தொகு]

10-ஆம் நூற்றாண்டு தொடக்கம் முஸ்லிம்கள் இந்தப் பகுதியின் வழியாகச் சென்று வந்து இருக்கிறார்கள். இருப்பினும், 14-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே இஸ்லாம் மதம் இப்பகுதியில் வேரூன்றத் தொடங்கியது. 14-ஆம் நூற்றாண்டில் இசுலாம் மதத்தின் பரவல் காரணமாகப் பல சுல்தானகங்கள் இந்தப் பகுதியில் உருவாகின.

இவற்றுள் முதன்மையானது மலாக்கா சுல்தானகம் ஆகும். இப்பகுதி மக்கள் மீது இஸ்லாம் மதத்தின் தெளிவான செல்வாக்கு இருந்தது. 1511-ஆம் ஆண்டில் மலாக்காவைப் போர்த்துகீசியர்கக்ள் கைப்பற்றினார்கள். அந்த வகையில் மலாயா தீபகற்பத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட முதல் ஐரோப்பிய நாடு போர்த்துகல் ஆகும்.

பிரித்தானியர்கள் ஆதிக்கம்[தொகு]

தொடர்ந்து 1641-இல் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். இருப்பினும் பிரித்தானியர்கள் வேறு மாதிரி பயணித்தார்கள். முதலில் சபா மாநிலத்தில் உள்ள ஜெசல்ட்டன், சரவாக் மாநிலத்தில் உள்ள கூச்சிங், பினாங்கு, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் தளங்களை அமைத்துக் கொண்டார்கள். இறுதியாக இன்று மலேசியாவாக இருக்கும் பகுதி முழுவதும் தங்களின் அதிகாரத்தை விரிவாகியவர்கள் பிரித்தானியர்களே.

1824-ஆம் ஆண்டின் ஆங்கிலேய-டச்சு உடன்படிக்கை பிரித்தானிய மலாயாவுக்கும், டச்சுக் கிழக்கிந்தியாவுக்கும் (இன்றைய இந்தோனேசியா) இடையிலான எல்லையை வரையறுத்தது. மலாயாத் தீபகற்பத்தில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட குடியேற்றப் பகுதிகளின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சீன, இந்தியத் தொழிலாளர்களை மலாயாவுக்கும், போர்னியோவுக்கும் கொண்டு வரப்பட்டார்கள்.[2]

பல்லின மலாயா கூட்டமைப்பு[தொகு]

இரண்டாம் உலகப் போரில் இன்றைய மலேசியப் பகுதி உள்ளிட்ட பல இடங்களை ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. எனினிம் அந்தப் போரில் ஜப்பானியர் தோற்ற பின்னர், மலாயாப் பகுதி மீண்டும் பிரித்தானியரின் ஆதிக்கத்திற்குள் வந்தது. 1942-க்கும் 1945-க்கும் இடைப்பட்ட காலத்தில் மலாயா, வட போர்னியோ, சரவாக் போன்ற பகுதிகளில் தேசியவாதம் எழுச்சி பெற்றது.

மலாயாத் தீபகற்பத்தில், மலாயா கம்யூனிஸ்டு கட்சி பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. இந்தக் கலகத்தை அடக்குவதற்குப் பிரித்தானியர் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்தது. 1957 ஆகஸ்ட் 31-ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. பல்லின மலாயா கூட்டமைப்பு உருவானது.

மலேசியா உருவாக்கம்[தொகு]

1963 ஜூலை 22-இல் சரவாக் பகுதிக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி சபாவுக்கும், சிங்கப்பூருக்கும் தன்னாட்சி வழங்கப்பட்டது. 1963 செப்டம்பர் 16-ஆம் தேதி எல்லாப் பகுதிகளும் இணைந்து மலேசியாவாக மாற்றம் கண்டன.

இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1963-ஆம் ஆண்டில், மலேசிய நாடாளுமன்றம் சிங்கப்பூரை மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Imago Mvndi. Brill Archive. https://books.google.com.my/books?id=2zZCAAAAIAAJ&pg=PA71&dq=%22Golden+Chersonese%22+malay&hl=en&sa=X&ved=0ahUKEwjkjbKA8bLaAhXCnZQKHVGzCGMQ6AEISjAH#v=onepage&q=%22Golden%20Chersonese%22%20malay&f=false. 
  2. Annual Report on the Federation of Malaya: 1951 in C.C. Chin and Karl Hack, Dialogues with Chin Peng pp. 380, 81.
  3. "Road to Independence". US Government. பார்க்கப்பட்ட நாள் 3 August 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியாவின்_வரலாறு&oldid=3459900" இலிருந்து மீள்விக்கப்பட்டது