பலுச்சாரி புடவை

பலுச்சாரி புடவை (Baluchari sari) என்பது வங்காளதேசத்திலும் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திலும் உள்ள பெண்கள் அணியும் ஒரு வகை புடவை ஆகும். இந்த குறிப்பிட்ட வகை புடவை மேற்கு வங்காளத்தில் உருவானது. மேலும், புடவையின் மீது புராண காட்சிகளை சித்தரிப்பதற்காக அறியப்படுகிறது. ஆரம்ப காலங்களில் இது முர்சிதாபாத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது மேற்கு வங்காளத்தின் விஷ்ணுபூரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகலும் மட்டுமே உண்மையான பலுச்சாரி புடவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய ஒரு புடவையைத் தயாரிக்க தோராயமாக ஒரு வாரம் ஆகும்.[1][2] 2011ஆம் ஆண்டில், பலுச்சாரி புடவைக்கு இந்தியாவில் மேற்கு வங்காளத்திற்கான புவியியல் சார்ந்த குறியீடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.[3]
வரலாறு
[தொகு]வங்காளத்தின் துணி வரலாற்றில், பலுச்சாரி புடவைகள் மஸ்லினுக்குப் பிறகு வந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பலுச்சார் என்ற சிறிய கிராமத்தில் பலுச்சாரி புடவை நெசவு நடைமுறையில் இருந்ததால் அது அதன் பெயரைப் பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டில், வங்காள நவாப் முர்சித்குலி கான், அதன் வளமான நெசவு பாரம்பரியத்தை ஆதரித்து, டாக்காவிலிருந்து முர்சிதாபாத்தில் உள்ள பலுச்சார் கிராமத்திற்கு இந்தப் புடவையைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களைக் கொண்டுவந்து தொழில் செழிக்க ஊக்குவித்தார். கங்கை ஆற்றின் வெள்ளத்தால் கிராமம் மூழ்கிய பிறகு, தொழில்துறை பாங்குரா மாவட்டத்லுள்ள விஷ்ணுபூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மல்லபூம் இராச்சியத்தை ஜகத் மல்லன் என்பவன் ஆண்டபோது பலுச்சாரி புடவைகள் டசர் பட்டால் செய்யப்பட்டது.[4][5][6] இந்த செழிப்பான போக்கு பின்னர், குறிப்பாக பிரித்தானிய ஆட்சியின் போது, அரசியல் மற்றும் நிதி காரணங்களால் குறைந்தது. பெரும்பாலான நெசவாளர்கள் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், இது ஒரு அழியும் கைவினைப் பொருளாக மாறியது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், பிரபல கலைஞரான சுபோ தாக்கூர், பலுச்சாரி கைவினைப் பாரம்பரியத்தை மீண்டும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். விஷ்ணுபூர் எப்போதுமே அதன் பட்டுப் பொருட்களுக்கு பிரபலமானது என்றாலும், அவர் ஜாக்கார்ட் நெசவு நுட்பத்தை அறிய அக்சய் குமார் தாசு என்பவரை தனது விஷ்ணுபூருக்குச் சென்று, பட்டு காதி சேவா மண்டலின் அனுமான் தாசு சர்தாவின் நிதி மற்றும் தார்மீக ஆதரவுடன் பலுச்சாரியை அவர்கள் தறிகளில் நெசவு செய்ய கடினமாக உழைத்தார்.
ஒரு காலத்தில் விஷ்ணுபூர் மல்ல வம்சத்தின் தலைநகராக இருந்தது. மேலும், மல்ல மன்னர்களின் ஆதரவின் கீழ் அவர்களின் காலத்தில் பல்வேறு வகையான கைவினைப்பொருட்கள் செழித்து வளர்ந்தன. சுடுமண் செங்கற்களால் செய்யப்பட்ட கோயில்கள் இந்த ஆட்சியாளர்களின் ஒரு சாதனையாகும். இந்த கோவில்களின் பெரும் தாக்கத்தை பலுச்சாரி புடவைகளில் காணலாம். கோவில்களின் சுவர்களிலிருந்து எடுக்கப்பட்ட புராணக் கதைகள் பலுச்சாரி புடவைகளில் நெய்யப்படுவது விஷ்ணுபூரில் ஒரு பொதுவான அம்சமாகும்.[7]

[8] பலுச்சாரி புடவைகள் அல்லது உள்ளூரில் பாலுச்சாரி புடவைகள் என்று அழைக்கப்படுகின்றன. இன்று பெரும்பாலும் மகாபாரதத்திலிருந்தும், இராமாயணத்திலிருந்தும் அதன் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. முகலாயர் காலத்திலும், ஆங்கிலேயர்களின் காலத்திலும், அவர்கள் புடைவையின் புட்டாவில் ஒரு சதுர வடிவில் அலங்கார உருவங்களை வைத்து நெசவு செய்தனர். மேலும் வங்காள நவாப்புகளின் வாழ்க்கையிலிருந்து பெண்கள் ஊக்கா புகைப்பது, நவாப்கள் குதிரை வண்டிகளை ஓட்டுவது போன்ற காட்சிகளை சித்தரித்தனர். மேலும், கிழக்கிந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய அதிகாரிகள் கூட இதில் சித்தரிக்கப்பட்டனர். ஒரு புடவையைத் தயாரிக்க இரண்டு கைவினைஞர்கள் கிட்டத்தட்ட ஒரு வாரம் வேலை செய்ய வேண்டும். முக்கியமாக இதில் பயன்படுத்தப்படும் பொருளான பட்டும், புடவையும் நெசவு செய்த பிறகு மெருகூட்டப்படுகிறது.[9]
இந்த புடவைகளை பெரும்பாலும் வங்காளத்தில் உள்ள மேல்தட்டு மக்களும் ஜமீந்தார் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பண்டிகை காலங்களிலும் திருமணங்களின் போதும் அணிவார்கள்.
கண்காட்சியும் பாராட்டும்
[தொகு]2009, 2010 ஆம் ஆண்டிற்கான 34 தேசிய விருதுகளில் முதன்மையான நெசவு பாணிகளுக்கான குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியிடமிருந்து விருது வென்றதில் பலுச்சாரி புடவையும் ஒன்றாகும்.[10]
புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பாங்குராவின் பலுச்சாரி புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தின் அரங்கினுள் கைவினைப் பொருட்கள், கைத்தறித் துறையின் தயாரிப்புகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன, அவை "திறமையான இந்தியா" என்ற கருப்பொருளைக் கருத்தில் கொண்டு அவற்றின் தனித்துவமான தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[11]
சான்றுகள்
[தொகு]- ↑ "Recreating the age-old Baluchari magic" இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120116120224/http://www.thehindu.com/arts/magazine/article2795487.ece.
- ↑ "Baluchari silk loses its sheen to Benarasi". http://www.dnaindia.com/india/report_baluchari-silk-loses-its-sheen-to-benarasi_1121911.
- ↑ "Journal 41 GI Application 173" (PDF). Controller General of Patents, Designs, and Trade Marks, Government of India. Archived from the original (PDF) on 9 August 2013. Retrieved 11 January 2013.
- ↑ Pandey, Dr.S.N. (1 September 2010). West Bengal General Knowledge Digest (in ஆங்கிலம்). Upkar Prakashan. p. 28. ISBN 9788174822826. Retrieved 26 January 2016.
- ↑ App, Urs (2011-06-06). The Birth of Orientalism (in ஆங்கிலம்). University of Pennsylvania Press. p. 302. ISBN 978-0812200058. Retrieved 26 January 2016.
- ↑ "Traditional trousseau". 20 May 2004 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040728095759/http://www.hindu.com/mp/2004/05/20/stories/2004052001450300.htm.
- ↑ "Baluchari & silk iems". Archived from the original on 25 ஜூலை 2011. Retrieved 12 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Baluchari, Sarees. "Baluchari Silk Sarees". sareesofbengal.com. Archived from the original on 2018-02-02. Retrieved 2021-12-25.
- ↑ "Baluchari saree background". Parinita Sarees. Retrieved 8 February 2018.
- ↑ "Prez to present Shilp Guru Awards to handicraft artisans today". SME Times. 9 November 2012. http://www.smetimes.in/smetimes/news/top-stories/2012/Nov/09/prez-to-present-shilp-guru-awards-to-handicraft-artisans6278046.html.
- ↑ Press Trust of India (14 November 2012). "West Bengal to showcase traditional skills". Business Standard. http://www.business-standard.com/generalnews/news/west-bengal-to-showcase-traditional-skills/79170/.