உள்ளடக்கத்துக்குச் செல்

மஸ்லின் துணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்காவில் 18 ஆம் நூற்றாண்டில் உயர்தர மஸ்லின் ஆடையோடு ஒரு பெண்.
1783 இல் மேரி ஆண்டோனிடி தனது புகழ்பெற்ற மஸ்லீன் ஆடையோடு
1855 ஆண்டில் மஸ்லீன் துணியால் தைக்கப்பட்ட ஒரு ஐரோப்பிய ஆடை.

மஸ்லீன் (Muslin) என்பது ஒரு வெற்று நெசவால் நெய்யப்பட்ட ஒரு பருத்தி ஆடையாகும் [1][2] இது உலகின் மிக மென்மையான, லேசான கைத்தறி ஆடை ஆகும்.[2][3] இதன் பெயர் ஈராக்கின் மோசுல் நகரின் பெயரில் இருந்து வந்தது. முதன்முதலில் இவ்வகைத் துணிகள் மோசூல் நகரில் உற்பத்திசெய்யப்பட்டதால் இப்பெயர் பெற்றது. [2][3][4][5] மிகவும் மென்மையான, கைகளால் நூற்கப்பட்ட நூலால் நெய்யப்பட்ட ஆரம்பகால மஸ்லின் துணியானது தற்போதைய வங்காளத்தின் டாக்காவைச் சுற்றிய பகுதியில் நெய்யப்பட்டதாகும்.[3] இது 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவால் மிகுதியாக இறக்குமதி செய்யப்பட்டது.[3] தரம்வாய்ந்த மஸ்லின் துணி முன்காலத்தில் சின்தோன் என அழைக்கப்பட்டது.[6]

வங்காளத்தின் பாரம்பரிய நூற்புக் கலையான மஸ்லின் துணி நெய்வதை, மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள் என்னும் பட்டியலில் 2013 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சேர்த்துள்ளது.[7] ஓர் ஆடையின் நுண்மையான மற்றும் லேசான தன்மையின் அடிப்படையில் அதற்கு அலகுகள் தரப்படுவது உண்டு. அந்த வகையில் காதர் பருத்தித் துணிகளின் அலகு 30-லிருந்து தொடங்கும். மஸ்லினின் அலகோ 400-லிருந்து 600 வரை என்பதிலிருந்து அதன் மென்மைத் தன்மையை அறியலாம். சிறு மோதிரத்துக்குள் மொத்த மஸ்லின் துணியையும் நுழைத்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு அவை மெலிதாக இருக்கும் என்பது மஸ்லின் துணி பற்றி பிரபலமாக நிலவும் ஒரு செவிவழிச் செய்தி. டாக்கா மஸ்லின் சேலைகள் ஒரு தீப்பெட்டிக்குள்ளோ, சிற்றுண்டி பெட்டியிலோ அடைத்துவிடும் அளவுக்கு லேசாக, நுணுக்கமாக நெய்யப்பட்டவை. மால்-மால் என்ற பெயரில் நெய்யப்பட்ட மிகவும் நுண்மையான மஸ்லின் ஆடைகள் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தை உருவாக்கிது ஆகும். மஸ்லின் துணியில் தைக்கப்பட்ட ஓர் சட்டையின் எடை 10 கிராம்தான் இருக்கும். இந்த மஸ்லின் துணியை இயந்திர நெசவால் உருவாக்க முடியவில்லை. அரிதான இந்தக் கலை மீட்கப்பட்டுள்ளது. [8]

குறிப்புகள்[தொகு]

  1. muslin (noun), Oxford English Dictionary, Third Edition, March 2003
  2. 2.0 2.1 2.2 muslin (noun), Webster's Unabridged Dictionary
  3. 3.0 3.1 3.2 3.3 muslin, Encyclopaedia Britannica
  4. The Fairchild Books Dictionary of Textiles, A&C Black, 2013, pp. 404–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60901-535-0
  5. muslin (noun), etymology, Oxford English Dictionary, Third Edition, March 2003
  6. Oxford English Dictionary, 1st ed. "sindon, n."
  7. "Jamdani recognised as intangible cultural heritage by Unesco", The Daily Star, 5 December 2013, பார்க்கப்பட்ட நாள் 2013-12-04
  8. "சென்னைக்கு வந்த அரிய மஸ்லின் ஆடைகள்". தி இந்து (தமிழ்). 4 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்லின்_துணி&oldid=3578015" இலிருந்து மீள்விக்கப்பட்டது