இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1967

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1967

← 1962 மே 6, 1967 1969 →
  President Zakir Husain 1998 stamp of India (cropped).jpg Justice K. Subba Rao.jpg
வேட்பாளர் சாகிர் உசேன் கோக்கா சுப்பா ராவ்
கட்சி சுயேச்சை சுயேச்சை
சொந்த மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேசம்

தேர்வு வாக்குகள்
4,71,244 3,63,971

முந்தைய குடியரசுத் தலைவர்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
கட்சி சார்பற்றவர்

குடியரசுத் தலைவர் -தெரிவு

சாகிர் உசேன்
காங்கிரசு

இந்தியக் குடியரசின் நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1967 ல் நடைபெற்றது. 1962 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சாகிர் உசேன், இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

பின்புலம்[தொகு]

மே 6, 1967ல் இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1962 முதல் குடியரசுத் தலைவராக இருந்து வந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் அவ்வளவு சுமூகமான உறவு இல்லாததால் அவர் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதை இந்திரா விரும்பவில்லை. எனவே ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டார். அவருக்கு பதிலாக துணைக் குடியரசுத் தலைவர் சாகிர் உசேனைக் குடியரசுத் தலைவராக்க இந்திரா விரும்பினார். இந்திராவோடு சிறிது காலமாக வேறுபாடு கொண்டிருந்த காமராஜர் தலைமையிலான காங்கிரசு மூத்த தலைவர்கள் குழு (சிண்டிகேட்) சாகிர் உசேன் குடியரசுத் தலைவர் ஆவதை விரும்பவில்லை. காங்கிரசுள் ஏற்பட்ட உட்கட்சி வேறுபாடுகளாலும், 1967ல் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கு ஏற்பட்டிருந்த பின்னடைவுகளாலும் ஊக்கம் கொண்ட எதிர்க்கட்சியினர் காங்கிரசின் வேட்பாளருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்தும் வேலைகளில் இறங்கினர். ஆனால் எதிர்கட்சிகள் பொது வேட்பாளரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டதால் காங்கிரசு உட்கட்சி வேறுபாடுகளை மறந்து சாகிர் உசேனை ஒரு மனதாக வேட்பாளராக ஏற்றுக்கொண்டது.

எதிர்க்கட்சிகள் முதலில் ஜெய பிரகாஷ் நாராயணை அணுகி பொட்டியிடும்படி வேண்டினர். ஆனால் அவர் சாகிர் உசேன் மீது மதிப்பு கொண்டிருந்ததால் மறுத்துவிட்டார். பின்னர் எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோட்டா சுப்பா ராவை அணுகினர். அவர் தன் பதவியிலிருந்து விலகி எதிர்கட்சிகளின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். மேலும் பல சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். கடும் போட்டி ஏற்பட்ட முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் இதுவே. இத்தேர்தலில் 56.2 % வாக்குகளுடன் சாகிர் உசேன் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

முடிவுகள்[தொகு]

ஆதாரம்:[1][2]

வேட்பாளர் வாக்காளர் குழு வாக்குகள்
சாகிர் உசேன் 471,244
கோட்டா சுப்பாராவ் 363,971
குளூபி ராம் 1,369
யமுனா பிரசாத் திரிசூலா 232
பம்பூர்கர் ஸ்ரீநிவாச கோபால் 232
பிரம்ம தியோ 232
கிருஷ்ண குமார் சாட்டர்ஜி 125
கம்லா சிங் 125
சந்திர தத் சேனானி
யு. பி. சுக்னானி
எம். சி. தவர்
சவுதிரி ஹரி ராம்
மான் சிங்
மனோகர ஹோல்கர்
சீத்தாராமைய்யா ராமசாமி ஷர்மா ஹோய்சலா
சத்தியபக்த்
மொத்தம் 838,048

மேற்கோள்கள்[தொகு]