உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயபிரகாஷ் நாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெய பிரகாஷ் நாராயண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாரத ரத்னா லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண்

ஜெயபிரகாஷ் என்ற புத்தகத்தின் முகப்பில் ஜெயபிரகாஷின் நிழற்படம்.
பிறந்த இடம்: சீதாப்தியரா, சாரன் மாவட்டம், பீகார், இந்தியா[1]
இறந்த இடம்: பாட்னா[1]
இயக்கம்: இந்திய விடுதலை இயக்கம், சர்வோதயா இயக்கம், அவசரநிலை எதிர்ப்பியக்கம்
முக்கிய அமைப்புகள்: இந்திய தேசிய காங்கிரஸ், ஜனதா கட்சி

ஜெயபிரகாஷ் நாராயண்(Jayaprakash Narayan) (தேவநாகரி: जयप्रकाश नारायण; அக்டோபர் 11, 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என அறியப்பட்டவர், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர் மற்றும் 1970களில் இந்திரா காந்தியை எதிர்த்து போராடிய அரசியல் தலைவர். தமது அமைதியான முழு புரட்சி (Total Revolution) என்ற முழக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர்.1998ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.1965ஆம் ஆண்டு தமது பொதுச்சேவைக்காக மக்சேசே பரிசு வழங்கப்பட்டது.

இளமை வாழ்க்கை

[தொகு]

ஜெயபிரகாஷ் நாராயண் 1902, அக். 11-ல் பிகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் காயஸ்த ஜாதியைச் சார்ந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை ஹர்ஸ்தயாள். இவரது தாயின் பெயர் புல்ராணி தேவி. ஜெயபிரகாஷ் நாராயணனின் தந்தை கால்வாய்த்துறையில் மாநில அரசு ஊழியராக இருந்ததால் பணி நிமித்தம் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு மாறுதலில் செல்ல வேண்டியவராக இருந்தார்.[3] எனவே ஜெயப்பிரகாஷ் தனது பாட்டியுடன் சென்று சிதாப்தியராவில் ஆரம்பக்கல்வி பயின்றார். பாட்னாவில் உயர்நிலைக் கல்வியை முடித்தார்.

சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயப்பிரகாஷ், அந்நாளிலேயே பீகாரில் தற்போது ஹிந்தியின் நிலைமை என்ற கட்டுரை எழுதி பரிசு பெற்றார். பிறகு கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். எனினும் விடுதலைப் போரில் ஆர்வம் கொண்டிருந்த அவரால் அங்கு கல்வியைத் தொடர முடியவில்லை. அந்தக் கல்லூரி ஆங்கிலேயரின் நிதியுதவியால் நடத்தப்பட்டது என்பதால், இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார் ஜெயப்பிரகாஷ். அப்போது, தான் பாபு இராசேந்திர பிரசாத்தின் (இந்தியாவின் முதல் ஜனாதிபதி) தொடர்பு ஜெயப்பிரகாஷுக்கு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த பீகார் வித்யாபீடத்தில் ஜெயப்பிரகாஷ் இணைந்தார்.

ஜெயப்பிரகாஷுக்கு இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனினும் அவரது குடும்பப் பாரம்பரியம் காரணமாக மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றை சிறு வயதிலேயே கற்றிருந்தார். மேலைநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த கார்ல் மார்க்ஸ் என்பவரின் மார்க்ஸியம் என்ற தத்துவம் ஏற்படுத்திய தாக்கத்தினால் அதில் ஈடுபாடு ஏற்பட்டது. இந்த உலகின் அனைத்து செல்வ வளமும் எல்லோருக்கும் பொதுவானது என்ற கார்ல்மார்க்ஸின் முழக்கம் ஜெயப்பிரகாஷை கவர்ந்தது. ஆயினும் அவர் காங்கிரஸ் கட்சியில் விருப்பம் கொண்டிருந்தார். காந்தி இந்திய அரசியலில் நுழைந்த சமயம் அது. அவரது அறைகூவலை ஏற்று நாடே ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தது. ஜெயப்பிரகாஷும் விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்தை (1919) எதிர்த்து நடந்த இந்தப் போராட்டம் நாட்டில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1920 ஜெயப்பிரகாஷ் அவரது 18 -வது வயதில், பிரிஜ் கிஷோர் பிரசாத் என்ற சட்ட வல்லுநரின் மகள் பிரபாவதியை மணந்தார். பிரிஜ் கிஷோர் காந்தீயவாதி. அவருக்கு காந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்களது மணவாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. 1922 -ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஜெயப்பிரகாஷ் முடிவெடுத்தார். அப்போது அவருடன் வெளிநாடு செல்ல மறுத்து, சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்றுவிட்டார் பிரபாவதி. அங்கு கஸ்தூரி பாய் காந்தியின் மகளாகவே அவர் உடன் வாழ்ந்தார்.

பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு

[தொகு]

அமெரிக்கா சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு பல பகுதிநேர வேலைகள் செய்து பணம் ஈட்டிக் கொண்டே மேற்படிப்பு படித்தார். உணவகத் தொழிலாளியாகவும் கூட அவர் வேலை செய்திருக்கிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சில நாட்களிலேயே தனக்கு ஆர்வமுள்ள துறை சமூகவியல் தான் என்பதைக் கண்டுகொண்டார். எனவே விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்சு, லெனின், திராட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் ஆகியோரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. காரல்மார்க்ஸின் 'மூலதனம்' நூலினைப் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது. அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் படித்து முடித்தபின், ரஷ்யாவில் முனைவர் பட்டம் படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழல் காரணமாக 1929-ல் இந்தியா திரும்ப நேர்ந்தது.

குடும்ப வாழ்விலிருந்து விலகுதல்

[தொகு]

நாடு திரும்பிய ஜெயப்பிரகாஷுக்கு அவரது மனைவி பிரபாவதியின் மனமாற்றம் அதிர்ச்சி அளித்தது. அவர் காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழ விரும்பினார். அதனை ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் ஜெயப்பிரகாஷ். அவரது உள்ளம் முழுவதும் பொதுவுடைமைக் கொள்கைகள் தீவிரமாகி இருந்தது. ஆயினும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.

அரசியல்

[தொகு]

கம்யூனிச இயக்கத்தை இந்தியாவில் கட்டி எழுப்பிய எம்.என்.ராயின் பல ஆக்கங்களைப் படித்த அவர், தேசிய நீரோட்டத்துடன் இணைய முடியாமல் கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கி நிற்பதை விமர்சித்தார். இந்திய விடுதலைப் போரில் முன்னிற்கும் காங்கிரஸ் கட்சியுடன் மோதும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பற்றை அவர் கண்டித்தார். அதே நேரம் அலகாபாத்தில் இயங்கும் தொழிலாளர் ஆய்வு மையத்துக்கு தலைமை தாங்குமாறு தன்னை ஜவகர்லால் நேரு அழைத்ததையும் அவரால் ஏற்க முடியவில்லை. வசதியான வாழ்விலோ, ஆடம்பரங்களிலோ அவருக்கு சிறிதும் நாட்டமில்லை. எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயப்பிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.

விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு

[தொகு]

காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சமதர்ம சமுதாயம் குறித்தும் சிந்தித்துவந்த ஜெயப்பிரகாஷுக்கு கம்யூனிஸ்ட்கள் விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பப்ட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது, ஆனால் காலம் அதற்கு முரணாக இருந்தது. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்வேகம் மிகுந்த தலைவராக ஜெயப்பிரகாஷ் உருவெடுத்தார். 1932 -ல் தனது தலைமைப் பண்பை அவர் வெளிப்படுத்த அறிய வாய்ப்பு கிடைத்தது.

காங்கிரஸ் அறிவித்த சட்ட மறுப்பு இயக்கம் அரசைச் சீண்டுவதாக இருந்தது. அதையடுத்து காந்தி, ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஜெயப்பிரகாஷ் தலைமறைவாக இருந்தபடி விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார். முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையிலும் சட்ட மறுப்பு இயக்கம் தொடர்வதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த அரசு, இறுதியில் 'காங்கிரஸ் போராட்டத்தின் மூளையாக இருப்பது ஜெயப்பிரகாஷ் என்று கண்டறிந்து, சென்னையில் இருந்த அவரை அதே ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. அவர் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைவாசம்

[தொகு]

நாசிக் சிறைவாசம் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. சிறையில் இருந்த ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மினு மசானி, அச்யுத் பட்வர்த்தன், யூசுப் தேசாய் போன்ற சக சிறைவாசிகளுடன் உரையாடல்களில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷுக்கு பொதுவுடைமை மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் இந்திய அரசியலில் ஒரு புதியபாதையை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் சோஷலிச கட்சி

[தொகு]

சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை ஆனவுடன், ஒத்த சிந்தனையுள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து (1934) காங்கிரஸ் சோஷலிச கட்சியை நிறுவினர். அதன் தலைவராக ஆச்சார்யா நரேந்திரதேவ், செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பொதுவுடைமைக் கொள்கையுடன் தனித்து இயங்கும் ஒரு குழுவாக அக்கட்சி செயல்பட்டது. எனினும் இக்கட்சி, ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

பொதுவுடைமைக் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட்களையும் தேசிய இயக்கமான காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டாலும், இரு இயக்கங்களின் அடிப்படையான சமதர்ம சமுதாயம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியை அமைக்க ஜெயப்பிரகாஷால் இயன்றது. இக்கட்சியின் அரசியல் தாக்கம் இன்றளவும் பேரிடம் வகிக்கின்றது.

புரட்சியாளராக மாற்றம்

[தொகு]

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது 1939-ல் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. போரில் ஈடுபடும் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியப் படைகள் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதில் மோதல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்ப்பட வேண்டும் என்பதே ஜெயப்பிரகாஷின் எண்ணம். காங்கிரஸ் சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆங்கிலேய அரசின் சுரண்டலுக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியர்கள் உதவாது போனால் அவர்கள் வேறு வழியின்றி நம் நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நிலை ஏற்படும் என்பதே ஜெயப்பிரகாஷின் கருத்து. ஆனால் காந்தியின் கருத்து வேறாக இருந்தது. எனினும் காந்தி ஜெயப்பிரகாஷை மதித்தார். இந்நிலையில் ஆங்கிலேய அரசால் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் காந்தி, சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்தார். 9 மாத சிறைவாசத்துக்குப் பின்னர், சிறையிலிருந்து மீண்ட ஜெயப்பிரகாஷ் இவ்விருவரிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றார். ஆனால், பலன் கிட்டவில்லை. அதன்பிறகு 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி துவக்கினார்.

ஜெயப்பிரகாஷ் மீன்டும் கைது செய்யப்பட்டு மும்பை, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தில்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் ஆயுதப்போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் கடிதங்களுடன் இருந்ததாகவும், ஆயுதப்போருக்கு மக்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த காந்தி, ஆயுதப்போருக்கு இந்தியத் தலைவர் ஒருவர் ஆயத்தமாகிறார் என்றால், அதற்கு ஆங்கிலேய அரசின் கீழ்த்தரமான அடக்குமுறை ஆட்சியே காரணம் என்றார்.

விடுதலைப் படை திரட்டுதல்

[தொகு]

காந்தி அறிவித்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது. ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், அங்கிருந்து 5 தோழர்களுடன் சிறைச்சுவரை சுரண்டி ஓட்டையிட்டுத் தப்பினார். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு நேபாளம் சென்ற ஜெயப்பிரகாஷ், 'ஆசாத் தாஸ்தா' எனப்படும் விடுதலைப் படையைத் திரட்ட முயன்றார். அப்போது தொடர்வண்டியில் பஞ்சாப் செல்லும்போது 1943, செப்டம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பரில் இவர் அதிமுக்கியமான அரசாங்கக் கைதி என்று அறிவிக்கப்பட்டார். லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷை ஆங்கிலேய அரசு கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தியது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வந்தது. இதன் விளைவாக 1945, ஜனவரியில், 16 மாதங்கள் கழிந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைப்போரின் இறுதி கட்டத்தில் நாடே கொந்தளித்திருந்த காலம் அது. அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் சிறையிலுள்ள ராம் மனோகர் லோகியாவையும் ஜெயப்பிரகாஷையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காந்தி நிபந்தனையிட்டார். அதன்படி இருவரும் 1946, ஏப்ரல் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை நாடே கொண்டாடியது. 'இந்திய இளைஞர் இதயங்களின் மன்னன்' என்று ஜெயப்பிரகாஷ் புகழப்பட்டார்.

பிரஜா சோஷலிஸ்ட் கட்சி

[தொகு]

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தன்னலம் மிக்க சிலரால் பொதுவுடைமைக் கட்சியினர் புறக்கணிக்கப்பட்டனர். தேசப்பிரிவினை கட்டாயமானது என்றே இக் கட்சியினர் கருதினர். இதுபோன்ற கருத்து வேற்றுமைகளால் காங்கிரஸ் தலைமையிலான விடுதலை போரட்ட மைய நீரோட்டத்திலிருந்து காங்கிரஸ் சோஷலிசக் கட்சியினர் விலகினர். பின்னால் தேசம் பிரிவினை செய்யப்பட்டபோது 1947 நிகழ்ந்த சோகங்கள் பொதுவுடைமைக் கட்சியினரையே அதிரவைத்தன.

நாடு விடுதலை பெற்ற பிறகு, ஆட்சி அதிகாரத்தில் நாட்டமில்லாத சோஷலிஷ கட்சியினர் தனியே எதிர்க்கட்சியாக இயங்கினர். அவர்கள் ஒருங்கிணைத்து 'பிரஜா சோஷலிஸ்ட்' என்ற கட்சியைத் துவக்கினர். காந்தியின் மறைவுக்குப் பின் ஜவகர்லால் நேரு முன்னெடுத்த தொழில்மயமாக்க அடிப்படையிலான பொதுவுடைமைக் கனவினை ஜெயப்பிரகாஷால் ஏற்க முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் நேரு தலைமயிலான காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளமாக இக்கட்சியினர் செயல்பட்டனர்.

சர்வோதயா

[தொகு]

1954 -ல் ஆச்சார்யா வினோபா பாவே துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும் பூமிதான இயக்கத்துக்கும் ஆதரவளிப்பதாக அறிவித்த ஜெயப்பிரகாஷர், ஹசாரிபாகில் அதற்கென ஓர் ஆசிரமத்தை நிறுவினார். கிராமங்களை முன்னேற்றுவதே தனது நோக்கம் என்று அவர் அறிவித்தார். இடையில், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியுடன் சித்தாந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் 1957 -ல் அக்கட்சியிலிருந்து விலகினார். அதன்பிறகு நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்த அவர் சர்வோதயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார்.

1964 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் தனது கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

முழுப் புரட்சி

[தொகு]
5 சூன்,1975இல் பாட்னா காந்தி மைதானத்தில் மாணவர் பேரணியில் ஜெபி முழக்கம் சம்பூரண கிராந்தி - முழுமையான புரட்சி

1970 -களில் பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அம்மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள அரசியல் தலைவர்களுள் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நரேந்திர மோடி உள்பட பலர் இக்காலத்ததில் வார்க்கப்பட்டவர்களாவர்.

1974 ஆம் ஆண்டு,அவர் தலைமையேற்ற மாணவர் இயக்கம் பரவலான மக்கள் இயக்கமாக மாறியது.இந்த இயக்கத்தின்போதே அவர் முழுமையான புரட்சிக்கு குரல் கொடுத்தார்.1974-இல் சனநாயகம் வேண்டும் குடிமக்கள்(Citizens for Democracy) என்ற அரசுசாரா அமைப்பையும் 1976ஆம் ஆண்டு குடியுரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (People's Union for Civil Liberties)என்ற அரசுசாரா அமைப்பையும் . தோற்றுவித்தார்.

நெருக்கடி நிலை

[தொகு]

அதே காலகட்டத்தில், 25.06.1975 -ல் தனது பதவிக்கு வந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நெருக்கடி நிலை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நிலையில், ஜெயப்பிரகாஷும் கைதானார். சண்டிகார் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்ட அவர் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானார். நாடு முழுவதும் கொந்தளித்த நிலையில், அதே ஆண்டு நவம்பரில் ஜெயப்பிரகாஷர் விடுதலை ஆனார்.

நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயப்பிரகாஷ் பெரும் பங்காற்றினார் பல்வேறு கொள்கை வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரசம், சுதந்திரா, பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட இடதுசாரிகள் அல்லாத கட்சிகளை இந்திரா காந்தியின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுத்தினார் அதன் விளைவாக ஜனதா கட்சி மலர்ந்தது. நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர். எஸ். எஸ். அமைப்பு ஜெயப்பிரகாஷ் ஆசியுடன் தலைமறைவுப் போராட்டம் நடத்தியது.

1977 தேர்தல்

[தொகு]

நெருக்கடி நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், உலக நாடுகளின் எதிர்ப்புகளின் காரணமாக இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். நெருக்கடி நிலைக் காலத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தினார் ஜெயப்பிரகாஷ். இந்தத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியுற்றார்; ஜனதா கட்சியின் சார்பில் மொரார்ஜி தேசாய் 1977, மார்ச்சு-24-ல் பிரதமர் ஆனார்.

இறுதிக்காலம்

[தொகு]

ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷுக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது. ஆட்சியை மாற்றிய போதும் பதவியை நாடாதவர்; தனது தலைமையால் இந்திய ஜனநாயகத்தை மீட்ட ஜெயபிரகாஷ் உடல்நலக்குறைவால் 1979, அக்டோபர் 8-ல் பாட்னாவில் காலமானார்.[3][4] அவருக்கு 1998- ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பாட்னாவில் உள்ள விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 லோக்நாயக் ஜெபி - இளமை வாழ்க்கை
  2. Das, Sandip (2005). Jayaprakash Narayan: A Centenary Volume. Mittal Publications. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183240017. Retrieved 2012-04-25.
  3. 3.0 3.1 Vaidya, Prem. "Jayaprakash Narayan — Keeper of India's Conscience". LiberalsIndia.com. Retrieved 2012-01-06.
  4. Datta-Ray, Sunanda K.. "Inconvenient Prophet". India Today. Archived from the original on 2009-01-31. Retrieved 2012-01-06.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபிரகாஷ்_நாராயண்&oldid=3958423" இலிருந்து மீள்விக்கப்பட்டது