உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.[1]

கடவுள் நம்பிக்கையுடையவர்களின் எண்ணத்தின் படி, கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளியாகவும், பாதுகாப்பாளராகவும் இருக்கிறார். இயற்கையே கடவுள் என கூறுவோருக்கு கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளராக மட்டுமே இருக்கிறார். ஆனால், பிரபஞ்சத்தை காப்பாவராக அல்ல. கடவுள் அனைத்திலும் உள்ளதாவராய் இருக்கிறார் என்னும் கோட்பாடு உள்ளவர்களின் கருத்து கடவுளே தான் பிரபஞ்சம். நாத்திகத்தில், கடவுள் இருக்கிறார் என நம்பப்படுவதில்லை, கடவுள் தெரியாதவராகவோ அல்லது அறிய முடியாதவராகவோ கருதப்படுகிறார். பல குறிப்பிடத்தக்க தத்துவவாதிகள் கடவுளின் இருப்பிற்கும் இல்லையில் அதற்கு எதிராகவும் வாதங்களை உருவாக்கியுள்ளனர்.

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்து சமயத்தில் கடவுள்

இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.[2]

இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்ட ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத் தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும். வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சிவன், திருமால், பிரம்மன், சக்தி, லட்சுமி, சரஸ்வதி முதலிய ஏராளமான கடவுள்கள் இந்துகளால் வணங்கப்படுகின்றனர்.[3]

இஸ்லாமிய மதத்தில் கடவுள்

இசுலாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்.[2] இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான திருக்குர்ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்குப் பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாகக் கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.[4]

இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்).

“கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும். அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது. அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை.

கிறிஸ்தவ மதத்தில் கடவுள்

கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கையுடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவு பெற்றவர்” (”அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Χριστός, Christos; מָשִׁיחַ, Māšîăḥ -Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 33.3%) உலகின் பெரிய சமயமாகக் காணப்படுகிறது.

கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறிஸ்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும்.[5] உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவுள் தம் மகன் இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.[2]

மெசியா குறித்து கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூதர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கி, அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையும் முடிவில்லா நிலைவாழ்வையும் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறிஸ்தவரின் நம்பிக்கை.

கிறிஸ்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவுளின் அவதாரமாகவும் "உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையும் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையும் ஆசைகளையும் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையும் (பாவம்) செய்யவில்லை. கடவுளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, "கடவுள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்",அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார்"; மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பிActs 1:9–11 இறந்தோரை உயிர்ப்பிப்பது, கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவுதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார்.

பெளத்தத்தில் கடவுள்

பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் பொஊ 6ம் ஆம், 4 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.

பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும். பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது.

அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள்.[6] அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. https://www.jw.org/en/publications/books/good-news-from-god/who-is-god/
  2. 2.0 2.1 2.2 2.3 https://www.everystudent.com/features/connecting.html
  3. https://www.himalayanacademy.com/readlearn/basics/fourteen-questions/fourteenq_1
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-08-02.
  5. https://www.jw.org/en/bible-teachings/questions/jesus-gods-son/
  6. http://www.bbc.co.uk/religion/religions/buddhism/ataglance/glance.shtml
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்&oldid=3944908" இலிருந்து மீள்விக்கப்பட்டது