உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் கல்வி
மலேசிய கல்வி அமைச்சு
கல்வி அமைச்சர்
துணை கல்வி அமைச்சர்கள்
  • பட்லினா சிடேக்
    (Fadhlina Sidek)[1]
    லிம் உய் இங்
    (Lim Hui Ying)
தேசிய கல்வி நிதி (2022)
BudgetMYR 64,122,868,300 (2022 - 2023)[2]
பொதுவான தகவல்கள்
முக்கியமான மொழிகள்மலாய், ஆங்கிலம்
சீனம் (சீனப் பள்ளிகளுக்கு மட்டும்)
தமிழ் (தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும்)
அமைப்பு வகைதேசிய வகை
அமைக்கப்பட்ட ஆண்டு1956
கல்வியறிவு (2009)
மொத்தம்97% (15 வயதிற்கு மேல்)
ஆண்97% மொத்தம், 98% 15-24 வயது
பெண்97% மொத்தம், 98% 15-24 வயது
Enrollment
மொத்தம்5,407,865 மாணவர்கள்
405,716 ஆசிரியர்கள்
(ஆசிரியர் மாணவர் விகிதம் 13:1),
163,746 பாலர் பள்ளிகள்
[1]

1957-ஆம் ஆண்டு மலாயா விடுதலை அடைந்தது. 1963-ஆம் ஆண்டு சிங்கப்பூர், வட போர்னியோவைச் சார்ந்த சரவாக், சபா பெருநிலங்களை இணைத்து; மலேசிய ஒப்பந்தம் (Malaysia Agreement MA63) எனும் ஒருங்கிணைப்பின் கீழ் மலேசியா எனும் புதிய கூட்டமைப்பு நாடு உருவானது.

மலேசியா எனும் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்னர் தீபகற்ப மலேசியா எனும் பெருநிலம் மலாயா என்று அழைக்கப்பட்டது. அந்த வகையில் 1950-ஆம் ஆண்டுகளில், மலாயாவில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 523-ஆகக் குறைந்தது.

2020-ஆம் ஆண்டு சனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல் விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் செயல்பாட்டில் இருந்தன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி பயின்றார்கள்.[3] இந்தப் பள்ளிகளில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இரு பள்ளிகள் மூடப்பட்டு இட மாற்ற பட்டியலில் உள்ளன.

2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் இட மாற்றத்திற்குக் காத்து இருக்கும் தமிழ்ப்பள்ளிகள்:

  • புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Bukit Ijok, Selangor).
  • மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Minyak, Selangor).

2020-ஆம் ஆண்டு சூன் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 79,309 மாணவர்கள் பயின்றனர்.[4]

2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள்:

  • சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பேராக்) (SJKT Ladang Sungai Timah, Perak).
  • பெடனோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Ladang Badenoch, Kedah).

ஆகக் கடைசியாக 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 77,693 மாணவர்கள் பயில்கின்றனர்.[5]

மலேசியாவில் 360 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன

[தொகு]

1956-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட 67 ஆண்டுகளில் மலேசியாவில் 360 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. அதாவது 888 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 528-ஆக குறைந்தது. ஏன் மூடப்பட்டன என்பதன் பொதுவான கருத்துகள். [6][7]

  • மலேசிய நாட்டின் நில மேம்பாட்டுத் திட்டங்கள்.
  • மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து வரும் நிலை.
  • தமிழர்கள் இதர மொழிப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது
  • தமிழர்கள் நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்வு.
  • அரசாங்கம் போதுமான ஆதரவு வழங்கவில்லை.
  • தாய்மொழிப் பள்ளிகளை தேசிய மொழிப் பள்ளிகளாக்கும் பின்னணி

பொது

[தொகு]

2010-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசிய இந்தியர்களில் 84 விழுக்காட்டினர் நகர்ப்புறம் அல்லது புறநகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர்.[[8]] மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு புதிய மைல்கல் ஆகும். இதற்கிடையில் மலேசியத் தமிழர்களின் மொழி உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்தன.

2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி உருவாக்கப்பட்டது. அந்தப் புதிய பள்ளி கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் இடத்தில் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் அவர்களால் திறப்புவிழா கண்டது.

அன்றைய தினம் பாயா பெசார் தமிழ்ப்பள்ளி எனும் பெயர் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டது. 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 525 ஆக உயர்வு கண்டது.

வரலாறு

[தொகு]

மலேசியாவில் வாழும் தமிழர்கள் 1800–1900 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியினரால் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப் பட்டனர். அவர்கள் ஒப்பந்தக் கூலிகளாக உடலுழைப்பு வேலைகளில் அமர்த்தப் பட்டனர்.

ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தனர். காடு மேடுகளை வெட்டிச் சாலைகளை அமைத்தனர். மேடு பள்ளங்களைக் கட்டி ரப்பர் கன்றுகளை நட்டனர்.[2]

அவ்வாறு மலேசியாவிற்கு வந்த தமிழர்கள் அவர்கள் தங்கி இருந்த இடங்களில் கோயில்களை அமைத்தனர். அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்தனர். முதலில் சிறிய கல்விக் குடில்களை அமைத்தனர்.

மலேசியாவில் தமிழ்க் கல்வியின் தொடக்கம்

[தொகு]

1870-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் பணியாற்றிய பல இடங்களில், குறிப்பாக புரோவின்ஸ் வெல்லஸ்லி, ஜொகூர், மலாக்கா, போன்ற இடங்களில் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின.

1800 - 1900 காலகட்டத்தில் கிறிஸ்துவச் சமய அமைப்புகள் தோற்றுவித்த ஆங்கில-தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தனிப்பட்டவர்களும் தமிழ்ப்பள்ளிகளை அமைத்தனர். பொதுவாக இந்தப் பள்ளிகள் யாவும் சிறியவை. ஓர் அறை, ஓராசிரியர் வகுப்பு என்ற நிலையிலேயே அவை இயங்கின. மேலும், நிதி வளம் இல்லாமலும் முறையான பராமரிப்பு இல்லாமலும் அவை செயல் பட்டன.[9]

மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2020

[தொகு]
தீபகற்ப மலேசியாவின் மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசிய மாநிலங்கள் மற்றும் மலேசியக் கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள் திரங்கானு, சபா, சரவாக் மாநிலங்களிலும்; லாபுவான்; புத்திராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை. 2020-ஆம் ஆண்டு மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள்.


மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்

மாநிலம்
கூட்டரசுப்
பிரதேசம்
மாணவர்
சனவரி
2020
பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்
(சனவரி
2019)
Δ%
ஜொகூர் 12,335 70 1,145 12,165 Increase 1.4
கெடா 7,518 59+1 899 7,783 3.5
கிளாந்தான் 36 1 9 8 Increase 28.6
மலாக்கா 2,375 21 332 2,436 2.6
நெகிரி செம்பிலான் 8,648 61 1,097 8,754 1.2
பகாங் 2,599 37 422 2,641 1.6
பேராக் 11,645 134 1,679 11,884 2.1
பெர்லிஸ் 67 1 11 65 Increase 3.1
பினாங்கு 5,397 28 554 5,478 1.5
சிலாங்கூர் 26,506 97+2 2,155 26,591 0.3
கோலாலம்பூர் 3,443 15 335 3,496 1.5
மொத்தம் 80,569 527 8,638 81,321 0.9

மலேசியாவில் முதல் தமிழ் வகுப்பு

[தொகு]

1816ஆம் ஆண்டு ரெவரெண்டு ஆர். அட்சின்ஸ் (Rev.R.Hutchings) என்பவரால் முதன்முதலில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள பிரி ஸ்கூல் (Penang Free School) எனும் ஆங்கிலப் பள்ளியில் ஒரு பிரிவாகத் தமிழ் வகுப்பு திறக்கப் பட்டது.[3] [4] இதுவே மலேசியாவில் முதல் தமிழ் வகுப்பு. இந்த நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது எனலாம்.

1900-ஆம் ஆண்டுகளின் இறுதியில் நாட்டின் விவசாயம் மற்றும் தோட்டப்புற மேம்பாட்டின் காரணமாகத் தென் இந்தியர்களின் வருகை கூடியது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் கூடியது.

தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை தடுமாற்றம்

[தொகு]

பெரும்பாலும் அவ்வாறு கட்டப்பட்ட பள்ளிகள் தோட்ட நிர்வாகத்தினரின் கீழ் செயல்பட்டு வந்தன. பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைத் தோட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. தோட்ட மேலாளர்களின் மெத்தனப் போக்கினால் பல தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை தடுமாறிப் போனது.

தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரம் தேங்கி நின்றதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றில் முறையான ஒரு பயிற்றுத் தன்மை இல்லாதது ஓர் அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம். மொழியின் மீது ஒரு வேர்த் தனம் இல்லாத குறைபாடும் இருந்து வந்தது.

அதன் பின்னர் அமலுக்கு வந்த மலாயா கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் தோன்றுவதற்கு முழுமையான அடையாளங்களைத் தோற்றுவித்தது. ஆக, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சாதகமானச் சூழல்நிலை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் நடந்தது 1930–1937 ஆண்டுகளில்.

அடிப்படை உரிமைகள் இழப்பு

[தொகு]

மலாயாவில் வேலை இருக்கிறது என்று இந்த நாட்டிற்கு வந்த இந்தியர்களின் நிலைமை மிகவும் வேதனையானது. அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை. அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்த மாதிரியான ஒரு நிலைமையும் ஏற்பட்டது.

அமெரிக்க அடிமைகளைப் போல நடத்தப் பட்டனர். 1950-களில் மலாயா வாழ் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மிகுந்த பாதிப்பு நிலை அடைந்தன. இந்தக் கட்டத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டது. மலாயா வாழ் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்தது.

மலாயா வாழ் இந்தியர்கள் என்பதில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். அதன் விளைவாகத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அதிக மானியம் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.

ரசாக் அறிக்கை

[தொகு]

1956 ஆம் ஆண்டு "ரசாக் அறிக்கை (Razak Report) ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதற்கு முன்னர் தமிழ்ப் பள்ளிகள் தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்தன. 1957-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் வழி சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் "தேசிய மாதிரி" எனும் அடைமொழியோடு புதிய வடிவம் கண்டன.

சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் என்பதில் தமிழ்ப்பள்ளிகளும், சீனப்பள்ளிகளும் அடங்கும். 1950-களில் மலாயா எனும் மலேசியாவில் 900 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்பது ஓர் அதிசயமான செய்தி.

ஆனால், 2011-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 523-ஆகக் குறைந்து போய் இருக்கிறது என்பது உலகத் தமிழ் இனத்திற்கே வேதனையான செய்தி.

நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன

[தொகு]

ஒரு காலகட்டத்தில் மலேசிய இந்தியர்கள் தோட்டப் புறங்களையே நம்பி வாழ்ந்தார்கள். அப்போது அவர்களிடம் கல்வியறிவு குறைவாக இருந்தது. அதனால் அவர்களுடைய எசமானர்களை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்களை அடிமைகளாகப் பிரித்தானியர்கள் கருதினர்.

ஆனால், அடுத்து அடுத்து வந்த தலைமுறையினர் நகர்ப்புறத்தை நாடினர். படிப்பறிவைப் பெற்றனர். தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தும் போனது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன.

கூட்டுத் தமிழ்ப்பள்ளி

[தொகு]

மேலும் சில தோட்டங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களே இருந்தனர். அதைச் சரி படுத்த கூட்டுத் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கப் பட்டன்.

மூன்று நான்கு தமிழ்ப்பள்ளிகளைக் கூட்டாக இணைத்து ஒரு மையப் பள்ளியை அமைப்பது தான் ஒரு கூட்டுத் தமிழ்ப்பள்ளி [5] ஆகும். இப்படியும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த மாதிரியான கூட்டுத் தமிழ்ப்பள்ளிகள் 1979–1980 -ஆம ஆண்டுகளில் மிகவும் பிரபலம் அடைந்தன.

கீழே வரும் புள்ளி விவரங்கள் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் எப்படி சன்னம் சன்னமாகக் குறைந்து வந்தன என்பதைக் காட்டும். மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 1957 ஆம் ஆண்டில் 888ல் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குள் 523 ஆகக் குறைக்கப் பட்டன.

ஒரே ஓர் 50 ஆண்டுகளில் 365 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. அந்தக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கு உதவிகள் செய்தவர் அமரர் துன் சம்பந்தன். தமிழகத் தூய்மைச் செம்மல் காமராசரைப் போன்றவர்.

ஐந்தாம் தலைமுறை இந்தியர்கள்

[தொகு]

துன் சம்பந்தன் மறைவு மலேசியர்களுக்கு மட்டும் அல்ல உலகத் தமிழர்களுக்கே ஒரு மாபெரும் இழப்பாகும். 2006-ஆம் ஆண்டு தொடங்கி மலேசியாவில் உள்ள தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு தமிழ்ப்பள்ளியைக் கூட அவர்கள் மூட விடவில்லை.

மலேசியாவின் ஐந்தாம் தலைமுறையினரிடம் புது மாறுதல்கள் தோன்றி வருகின்றன. மலேசியாவில் எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாமல் இருக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்குப் புத்துயிர்

[தொகு]

ஒரு தமிழ்ப்பள்ளி மூடும் கட்டாயம் வந்தால் முதலில் அந்தப் பள்ளியின் கல்வி அனுமதிச் சான்றிதழ் அரசாங்கத்திடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெறப்படுகின்றது. வேறு ஓர் இடத்தில் அல்லது மாநிலத்தில் அந்தப் பள்ளியின் பெயரில் நிலம் வாங்கப்படுகிறது. அரசாங்கப் பணத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பல இலட்சம் ரிங்கிட் செலவு செய்து முதலில் நிலத்தை வாங்கிய பின்னர் பள்ளிக்கூடம் கட்டப்படுகிறது. அதன் பின்னர் அரசியல் தலைவர்களிடமிருந்து மான்யம் கேட்கப்படுகின்றது. அந்த வகையில், ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஒரு புது உயிரும் வழங்கப்படுகின்றது.

புள்ளி விவரங்கள்

[தொகு]
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் புள்ளிவிவரங்கள்[6]
ஆண்டு பள்ளிகள் மாணவர்கள்
1938 547 22,820
1947 741 33,945
1956 877 47,407
1957 888 50,766
1958 874 53,098
1959 840 56,297
1960 815 60,726
1961 784 63,917
1962 745 66,604
1963 720 67,649
1964 704 69,362
1965 700 72,828
1966 695 76,350
1967 686 79,203
1968 666 81,428
1969 662 80,750
1970 657 79,278
1971 647 77,192
1972 635 78,758
1973 631 78,854
1974 618 79,674
1975 612 80,404
1976 606 80,103
1977 606 78,841
1978 600 77,525
1979 596 77,013
1980 589 73,958
1981 583 73,513
1982 579 73,897
1983 575 74,255
1984 571 75,028
1985 566 76,653
1986 555 81,051
1987 553 83,228
1988 548 87,837
1989 548 92,243
1990 547 96,120
1991 544 99,876
1992 543 102,493
1993 541 104,638
1994 539 103,963
1995 538 102,776
1996 531 99,525
1997 530 98,072
1998 530 94,907
1999 526 92,120
2000 524 89,175
2006 523 101,972
2007 523 105,618
2011 523 102,642

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் இணைப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fadhlina Sidek Menteri Pendidikan". kosmo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
  2. "Ministry of Education Malaysia" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  3. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  4. "Perak school ceases operations due to lack of pupils" (in en). The Star. 2020-10-24. https://www.thestar.com.my/news/nation/2020/10/24/perak-school-ceases-operations-due-to-lack-of-pupils. 
  5. "SenaraiSekolah_SEP2023". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  6. "Act 550 – Education Act 1996" (PDF). Archived from the original (PDF) on 23 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 Jan 2021.
  7. Ghazali, Kamila (2010). UN Chronicle – National Identity and Minority Languages. United Nations, accessed 28 Jan 2021.
  8. R. Kurinjivendhan. Malaya Thamizhar Sarithiram. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-234-2354-8.
  9. DS, Dass (1972-01-01). "Tamil Education in West Malaysia and Singapore, 1860 - 1870". M.Ed.Thesis, University Malaya: 22.