சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
SJK(T) Convent Seremban
அமைவிடம்
 மலேசியா
சிரம்பான், நெகிரி செம்பிலான்

தகவல்
வகை ஆண்/பெண்
இரு பாலர் பள்ளி
தொடக்கம் 1953
நிறுவனர் அயர்லாந்து கன்னிமார்கள்
பள்ளி மாவட்டம் சிரம்பான்
ஆணையம் மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம் NBD 4069
தலைமை ஆசிரியர் திருமதி.சு.இளவேணி

தரங்கள் 1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள் 726
கல்வி முறை மலேசியக் கல்வித்திட்டம்

சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைப் பட்டணமான சிரம்பான் மாநகரில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி ஆகும். மலேசியத் தொலைநோக்கு Sekolah Wawasan பள்ளித் திட்டத்தில் இடம் வகிக்கும் இப்பள்ளி தனது சொந்தக் கட்டடத்தையும் பெற்றுள்ளது.

2010 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளியின் 70 விழுக்காடு மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வரலாறு[தொகு]

1953 ஆம் ஆண்டு அயர்லாந்தில் இருந்து வந்த கன்னித் துறவிகளால் அனாதை மாணவர்களுக்காக கான்வென்ட் தமிழ்ப்பள்ளி சிரம்பானில் தொடங்கப்பட்டது.

இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் சிஸ்டர் கேத்தரின் ஆவார். இப்பள்ளியின் வளாகத்திலேயே கான்வென்ட் ஆங்கில ஆரம்பப் பள்ளியும் கான்வென்ட் இடைநிலைப் பள்ளியும் இயங்கி வந்தன.

அனாதையான தமிழ்ப்பள்ளி[தொகு]

இந்த மூன்று பள்ளிகளும் சிரம்பான் நகர மையத்தில் இருந்தன. நகர மேம்பாட்டிற்காகத் தேசிய ஆரம்பப் பள்ளியும் இடைநிலைப் பள்ளியும் வேறு ஓர் இடத்திற்கு இடப் பெயர்ப்புச் செய்யப்பட்டன. அப்பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப் பட்டன.

அனாதைப் பிள்ளைகளுக்குக் கல்வி போதிக்க உருவாக்கப் பட்ட கான்வென்ட் தமிழ்ப்பள்ளி, அதுவே அனாதையாக்கப் பட்டது. அங்கே பயின்ற மாணவர்களை எந்தப் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று பெற்றோர்கள் தடுமாறினர்.

மாநகர் மன்றத்தின் முடிவு[தொகு]

அதன் பின்னர், கான்வென்ட் தமிழ்ப்பள்ளி பாதுகாப்பு அற்றது எனக் கூறி மாநகர் மன்றம் அப்பள்ளியை மூட ஏற்பாடு செய்தது. சிரம்பான் மாநகர் மன்றத்தின் இந்தத் திடீர் முடிவு மலேசிய இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநகர் மன்றத்தின் முடிவிற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.

கான்வென்ட் தமிழ்ப்பள்ளி சிரம்பான் நகரின் மையப் பகுதியில் இருந்தது. அதனால் அதன் நிலப் பகுதிக்கு நில மேம்பாட்டாளர்களிடையே அதிகக் கிராக்கி ஏற்பட்டது. கான்வென்ட் தமிழ்ப்பள்ளியை மூடுவதற்கு அதுவும் ஒரு மறைமுகக் காரணமாக இருந்தது. இந்தக் கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி தூக்கியது.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மூடு விழா[தொகு]

இந்தக் காலக் கட்டத்தில் பல மலேசிய தமிழ்ப்பள்ளிகள் மூடு விழா கண்டு வந்தன. ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் இந்தோனேசிய, வங்காள தேசத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப் பட்டன.

அதனால் அங்கே காலம் காலமாக வேலை செய்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த தோட்டங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகளும் மூடப் பட்டன.

ஒண்டிக் குடித்தனம்[தொகு]

பல போராட்டங்களுக்கு இடையில் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி வேறு ஒரு பள்ளிக் கட்டிடத்தில் ஒண்டிக் குடித்தனம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. மதிய நேரத்தில் வகுப்புகள் நடத்தப் பட்டன. மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்தக் கட்டத்தில் பெண்கள் மட்டுமே பயின்று வந்த இப்பள்ளியில் ஆண் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

பள்ளி நிர்வாகம்[தொகு]

தலைமையாசிரியர்கள்[தொகு]

2005 ஆம் ஆண்டு முதல் திருமதி. சு. இளவேணி இப்பள்ளியைச் சீர்மையுடன் நடத்தி வருகின்றார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக திருமதி.சீதாதேவி அவர் தம் குழுவினரும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருகின்றனர்.
இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்:

 1. சிஸ்டர் கேத்தரின்
 2. சிஸ்டர் பிலோமீனா
 3. சிஸ்டர் எமிலியென்
 4. லூயிஸ் விக்டோரியா
 5. ஜியோர்ஜியா
 6. அ. லீலாவதி
 7. ச. கிரேஸ் கிருஷ்ணன்
 8. க. அலமேலு
 9. சு. இளவேணி (இப்போதைய தலைமையாசிரியர்)


தொலைநோக்குப் பள்ளி[தொகு]

இப்பள்ளியின் வரலாற்றில் 22.12.2003-இல் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. சிரம்பான் 2ல் உருவாக்கப் பட்ட மலேசியத் தொலைநோக்குப் பள்ளித் திட்டத்தில் இப்பள்ளி இடம் பெற்றது.
அந்த வகையில் சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளிக்குச் சொந்தக் கட்டடமும் கிடைக்கப் பெற்றது.

சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளிக்கு அது ஒரு மறுபிறவி என்றும் சொல்லலாம்.
2005 ஆம் ஆண்டு முதல் திருமதி. சு. இளவேணி இப்பள்ளியைச் சீர்மையுடன் நடத்தி வருகிறார்.

 • தலைமையாசிரியர்: சு. இளவேணி
 • துணைத் தலைமையாசிரியர் (கலைத் திட்டம்): . சா.ஜெயந்தி
 • துணைத் தலைமையாசிரியர் (மாணவர் நலன்): மகேஸ்வரி
 • துணைத் தலைமையாசிரியர் (புறப்பாடம்): சுபா
 • துணைத் தலைமையாசிரியர் (மாலைப் பள்ளி): சங்கர்
 • பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்: சீதாதேவி

இரு நேரப்பள்ளி[தொகு]

2010 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் இப்பள்ளியில் 70 விழுக்காடு மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றனர். யு.பி.எஸ்.ஆர் தேர்வு என்பது மலேசியத் தொடக்கப் பள்ளிகளில் ஆறாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வாகும்.

சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தையும் தேசிய நிலையில் இரண்டாம் இடத்தையும் வாகை சூடியுள்ளது.

2011 ஆம் ஆண்டு இப்பள்ளியில் 726 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 47 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளி இரு நேரப் பள்ளியாகச் செயல் பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

பொது[தொகு]

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு உயர்ப் பதவிகளில் பணி புரிகின்றனர். மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் டாக்டர் மரியா, டாக்டர் சரஸ்வதி முதலியோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். குமாரி ரூபா ஸ்ரீ என்பவர் ஒரு பிரபலமான வழக்குரைஞராக இருக்கிறார். மலேசிய நாட்டில் தலை சிறந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக கான்வென்ட் தமிழ்ப்பள்ளி உள்ளது.