தாபோ நானிங்
தாபோ நானிங் | |
---|---|
Taboh Naning | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°27′N 102°10′E / 2.450°N 102.167°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | அலோர் காஜா |
உருவாக்கம் | 1641 |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | ரிசுவான் யூசோப் Mohd Redzuan Md Yusof (2018 - 2023) |
• சட்டமன்ற உறுப்பினர் | சுல்கிப்லி மொகமட் சின் Zulkiflee Mohd Zin (2018 - 2023) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 78xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +6065 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | M |
தாபோ நானிங் (ஆங்கிலம், மலாய் மொழி: Taboh Naning) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். மலேசிய வரலாற்றில் ஆழமான வரலாற்றுச் சுவடுகளைப் பின்னணியாகக் கொண்ட நகரம். இங்கேதான் 1831-இல் இருந்து 1834 வரை, பிரித்தானியர்களுக்கு எதிரான ஒரு நிலவுரிமைப் போர் நடந்தது.[1]
தாபோ நானிங் நகரம்
- மலாக்கா மாநகரத்தில் இருந்து 41 கி.மீ. தொலைவிலும்;
- ஜாசின் நகரத்தில் இருந்து 43 கி.மீ. தொலைவிலும்;[2]
- ஆயர் குரோ வடக்கு-தெற்கு விரைவுசாலையின் கட்டணச் சாவடியில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும்;
அமைந்துள்ளது. தாபோ நானிங் நகரத்திற்கு மிக அருகில் இருப்பது அலோர் காஜா நகரமாகும்.
வரலாறு
[தொகு]தாபோ நானிங் எனும் கிராமப்புற நகரம், தற்சமயம் மலாக்கா மாநிலத்தில் ஒரு சின்ன பகுதியாக இருந்தாலும், 16-ஆம் நூற்றாண்டில் ஒரு மாநிலமாகவே இருந்து இருக்கிறது. நெகிரி செம்பிலான் மாநிலம் உருவாவதற்கு தாபோ நானிங் தான் மூலக்காரணம்.
மினாங்கபாவ் கலாசாரம்
[தொகு]இந்தோனேசியா, சுமத்திராவில் இருந்து குடியேறிய மினாங்கபாவ் மக்கள் தாபோ நானிங்கைத் தோற்றுவித்தனர். மினாங்கபாவ் மக்கள், அடாட் பெர்பாத்தே எனும் கலாசார முறையைப் பின்பற்றுகிறார்கள். தங்களுக்கு உண்டாங் என்பவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.[3]
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மினாங்கபாவ் கலாசாரமே முதன்மை வகிக்கின்றது. மினாங்கபாவ் கலாசாரம் சுமத்திராவில் இருந்து வந்ததாகும்.[4] மினாங்கபாவ் என்பது Menang Kerbau எனும் மலாய்ச் சொல்லில் இருந்து வந்தது. Menang என்றால் வெற்றி. Kerbau என்றால் எருமை.[5] வெற்றி பெறும் எருது என்று பொருள் படுகிறது.
மினாங்கபாவ் இனத்தவர் கட்டும் வீடுகளின் கூரைகள் மிக அழகாகவும், ஒய்யாரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கும். மினாங்கபாவ் மக்களின் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்தது.[6] நெகிரி செம்பிலான் மாநிலத்தில், பெரும்பாலான வீடுகள் மினாங்கபாவ் கலாசாரப் பின்னணியைக் கொண்டவை. அதே அமைப்பில் சிரம்பான் நகராண்மைக் கழக இல்லம், நெகிரி செம்பிலான் மாநில இல்லம், நெகிரி செம்பிலான் மாநில அரும்பொருள் காட்சியகம் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.
பெண்மைக்கு முதன்மை
[தொகு]மினாங்கபாவ் கலாசாரத்தின்படி ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் முதன்மையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன.[7] பெண்களின் சொற்களுக்கு ஆண்கள் மரியாதை செய்ய வேண்டும். இதற்கு Adat Perpatih என்று பெயர். இது மிகவும் பழமை வாய்ந்த பண்பு வழக்கம்.
பல நூற்றாண்டுகளாக, 'பெண்மைக்குத் தான் முதன்மை' எனும் பழக்க வழக்கத்திற்கு மினாங்கபாவ் மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.[8] சமூக குடும்ப நிகழ்ச்சிகள், சமூகக் கலாசார ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பெண்களுக்குத்தான் முதல் வாய்ப்புகள். பெண்களை முன் வைத்து, ஆண்கள் அவர்களின் பின்னால் துணையாக நிற்பார்கள்.
விவாகரத்து
[தொகு]பெண்களுக்கு முதன்மைத் தன்மை வழங்கப்படுவதை மாற்றி அமைக்க, மலேசியாவில் பிரித்தானியர்களும், இந்தோனேசியாவில் டச்சுக்காரர்களும், பெரும் முயற்சி செய்தார்கள். இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை. மினாங்கபாவ் மக்களின் இரத்தத்துடன் ஊறிப் போன அந்தக் கலாசாரத்தை மாற்றி அமைக்க அவர்களால் முடியவில்லை.
பொதுவாக, மினாங்கபாவ் பெண்கள் தங்களின் கணவர்மார்களை அவ்வளவு எளிதாக விவாகரத்துச் செய்ய மாட்டார்கள். விவாகரத்து என்பது ஒரு தப்பான செயல் என்று மினாங்கபாவ் பெண்கள் கருதுகின்றனர். இந்தக் கலாசாரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில், இன்னும் பரவலாக இருந்து வருகிறது.
தமிழ்-மினாங்கபாவ் குடும்பங்கள்
[தொகு]அண்மைய காலங்களில் அந்த நிலைமை மாறி விட்டது. மேற்கத்திய கலாசாரத்தின் ஊடுருவல்களால் விவாகரத்து என்பது சாதாரணமாகி வருகிறது. தமிழர்கள் பலர் மினாங்கபாவ் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.
கோலா பிலா, பகாவ், ஜெலுபு போன்ற இடங்களில் தமிழ் - மினாங்கபாவ் குடும்பங்களைப் பார்க்கலாம். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, கணினித்துறை வல்லுநர்களாகப் பணி செய்கின்றனர். அவர்கள் இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
சின்ன வயதிலேயே தமிழர்கள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சற்றுக் கூடுதலாக உள்ளது. அப்படி திருமணம் செய்து கொள்ளும் பலருக்கு முறையான பதிவுகள் இல்லை. பெரும்பாலான இளம் தம்பதியினர் சிரம்பான் நகருக்கு குடிபெயர்கின்றனர். இது ஒரு சமுதாய பிரச்னையாகவும் மாறி வருகின்றது.
அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]தாபோ நானிங்கிற்கு அருகிலுள்ள உள்ள நகரங்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dol Said violently protested the British army invasion in Naning and had revealed great war strategy in the Naning War 1834.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Distance from Taboh Naning to Jasin.
- ↑ Mohd Shah bin Mohd Said al-Haj, Tambo Alam Naning, DBP, 2000, பக்கம்: 146.
- ↑ The Minangkabau (also called the Minang) come from West Sumatra Province.
- ↑ The word Minangkabau can actually be interpreted as a compound of the words menang (win) and kerbau (buffalo).
- ↑ Traditional Minangkabau homes have roof leaves that soar outwards like the horns of the buffalo.
- ↑ With no men, this leaves women to take care of the home and economic life of their communities.
- ↑ In their matrilineal culture, the family name and the family wealth is inherited by the daughter.