அசகான்

ஆள்கூறுகள்: 2°23′33″N 102°32′41″E / 2.39250°N 102.54472°E / 2.39250; 102.54472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசகான்
Asahan
மலாக்கா
Map
அசகான் is located in மலேசியா
அசகான்
      அசகான்
ஆள்கூறுகள்: 2°23′33″N 102°32′41″E / 2.39250°N 102.54472°E / 2.39250; 102.54472
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்ஜாசின்
முக்கிம்சபாவ்
உருவாக்கம்1910
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்www.mpjasin.gov.my

அசகான் (மலாய்; ஆங்கிலம்: Asahan, சீனம்: 刨花), மலேசியா, மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியாவில் புகழ்பெற்ற குனோங் லேடாங் மலை, இந்த நகருக்கு அருகாமையில் உள்ளது. ஜாசின் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ஜொகூர், தங்காக் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்து இருக்கும் இந்த நகரம், மலாக்கா - ஜொகூர் மாநிலங்களைப் பிரிக்கும் ஓர் எல்லை நகரமாகும்.

இந்த நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருக்கின்றன. அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் மிகுதியான நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறைத் திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. தோட்டப் புறங்களில் வாழ்ந்தவர்கள் பெரிய நகரங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். அசகான் நகரம் ஒரு சுற்றுலா மையமாக மாறி வருகிறது.[1]

பொது[தொகு]

2004-ஆம் ஆண்டு, மலாக்கா அரசாங்கம் சௌஜானா அசகான் எனும் தன்முனைப்புத் தூண்டுதல் மையத்தை இங்கு நிறுவியது. அரசாங்க அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் அந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. குனோங் லேடாங் மலையின் அடிவாரத்தில், அந்த மையம் அமைந்து இருப்பதால், வெளிப்புற, உடல்நல நடவடிக்கைகளுக்குப் பிரபலம் அடைந்து வருகிறது.[2]

வரலாறு[தொகு]

சௌஜானா அசகான் தன்முனைப்புத் தூண்டுதல் மையம்

1910-ஆம் ஆண்டில், அசகான் நகரில் ஒரு புதிய குடியேற்றம் நிகழ்ந்தது. அசகான் நகருக்கு அருகில் இருக்கும் லேடாங் மலை, மலேசிய மலாய் இலக்கியத்தில் புராணத் தன்மைகளைக் கொண்டது.[3] அதனால், மலாய்க்காரர்கள் அங்கு வந்து குடியேறினார்கள். அவர்கள் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டனர். அதற்கு முன்னர், மலேசியப் பூர்வீகக் குடிமக்கள், அசகான் மலைக் காட்டுப் பகுதிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.

இந்த நகருக்கு அருகாமையில் இருக்கும் பெக்கோ, சின் சின், நியாலாஸ், கீசாங், ஜாசின் போன்ற நகரங்களில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தப் பகுதிகளில் சீனர்கள் குடியேறினார்கள். 1920-களில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமாக, பல ரப்பர் தோட்டங்கள் திறக்கப் பட்டன. தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள், ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். அந்த வகையில் புக்கிட் அசகான் ரப்பர் தோட்டம் உருவாக்கம் பெற்றது. அதன் பின்னர், நூற்றுக் கணக்கான தமிழர்கள் அசகானைச் சுற்றி இருந்த ரப்பர் தோட்டங்களில் குடியேறினர்.

தமிழர்களின் எண்ணிக்கை[தொகு]

நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகளைக் குறிக்கும் புள்ளி மையம்

அசகான் நகரில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் இருந்தனர். சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிமணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வந்தனர். நகராண்மைக் கழகப் பணிகள், பொதுப்பணித் துறையின் வேலைகள், அரசு சார்ந்த தொலைபேசி பணிகளில் முன்பு தமிழர்கள் கணிசமான அளவிற்கு இருந்தனர்.

தற்போது அந்தப் பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சொற்பமான எண்ணிக்கையில் தான் தமிழர்கள் அரசு வேலைகளில் அமர்த்தப் படுகின்றனர். இந்தத் தோட்டங்களில் ஒரு சில வயதான தமிழர்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.

ஓரளவுக்கு கல்வி தகுதியுடைய இளைஞர்கள் மலாக்கா நகரம், ஜாசின், அலோர் காஜா, தங்காக் நகர்களில் பணி புரிகின்றனர். பட்டம் பெற்ற இளைஞர்கள் கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பெட்டாலிங் ஜெயா, சிங்கப்பூர் போன்ற பெரும் நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர்.

குனோங் லேடாங் இளவரசிப் புராணம்[தொகு]

குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை என்பது, முன்பு காலத்தில் லேடாங் மலையில் வாழ்ந்த ஓர் இளவரசியின் புராணக் கதையாகும். லேடாங் மலையில், ஓர் இளவரசி வாழ்ந்து வந்ததாக நம்பப் படுகிறது.[4]

அந்த இளவரசியைப் பற்றி கேள்விப் பட்ட மலாக்காவின் சுல்தான் மகமுட் ஷா (ஆட்சி காலம்: 1488 - 1511), அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அந்த இளவரசி சில நிபந்தனைகளை விதித்தார். அந்த நிபந்தனைகளைச் சுல்தான் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், மலாக்கா சுல்தானகம் அழிவு பெற்றதாகவும் சொல்லப் படுகிறது.[5] 1511-ஆம் ஆண்டு, மலாக்காவைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். சுல்தான் மகமுட் ஷா, பகாங் மாநிலத்திற்குத் தப்பிச் சென்றார்.

அசகான் நீர்வீழ்ச்சி[தொகு]

அசகான் நீர்வீழ்ச்சி அல்லது லேடாங் நீர்வீழ்ச்சி எனும் பெயரில் இங்கு ஒரு பொழுதுபோக்குச் சார்ந்த பகுதி இருக்கிறது. மலாக்கா, ஜொகூர் மாநில மக்கள் வார இறுதியில், இங்கு வந்து பொழுது போக்கிச் செல்கின்றனர். இந்தப் பொழுது போக்குத் தளத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. லேடாங் மலையில் இருந்து பெருகி வரும் தெளிந்த நீரோட்டம் மக்களைக் கவர்கின்றது. இயற்கை விரும்பிகளுக்கு ஓர் அமைதியான இடம்.[6]

இங்கு முகாம் திடல்கள், வனவலம், மலையேற்றம், பாறையேற்றம், பறவைகள் பார்த்தல் போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்து தரப் படுகின்றன. 'சௌஜானா அசகான்’ (மலாய்: Saujana Asahan) எனும் தன்முனைப்புத் தூண்டுதல் மையமும் இங்கு இருக்கிறது. அரசாங்க அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் அந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. குனோங் லேடாங் மலையின் அடிவாரத்தில், அந்த மையம் அமைந்து இருக்கிறது.[7]

அசகான் ரப்பர் தோட்டங்கள்[தொகு]

 • பெக்கோ தோட்டம் - Ladang Bekoh
 • மலாக்கா புக்கிட் அசகான் தோட்டம் - Ladang Melaka Bukit Asahan
 • லிம் சுவி போங் தோட்டம் - Ladang Lim Swi Fong
 • சுவீ சுவான் தோட்டம் - Ladang Swee Chuan
 • ஆயர் தெக்கா தோட்டம் - Ladang Ayer Tekah
 • சபாவ் தோட்டம் - Ladang Chabau
 • சுவீ ஆயிக் தோட்டம் - Ladang Swee Aik
 • கேமே தோட்டம் - Ladang Gemeh
 • சாட் குவான் தோட்டம் - Ladang Chat Guan
 • புக்கிட் அசகான் தோட்டம் - Ladang Bukit Asahan

அசகான் ஆறுகள்[தொகு]

 • மெரிங் ஆறு - Sungai Mering
 • டுவா ஆயர் காங் ரோங் - Sungai Dua Ayer Kang Rong
 • ஆயர் மெர்பாவ் செரத்தூஸ் ஆறு - Ayer Merbau Seratus
 • பாத்தாங் சோங் ஆறு - Sungai Batang Chong
 • உலு ரேலாவ் ஆறு - Sungai Ulu Relau
 • செஞ்சும் ஆறு - Sungai Senyum
 • ஆயர் சீரே ஆறு - Ayer Sireh
 • அசகான் ஆறு - Sungai Asahan
 • ரேலாவ் ஆறு - Sungai Relau

மேற்கோள்[தொகு]

 1. "Visitors can do a variety of activities such as camping, jungle trekking, bathing, 'bird watching', or organising motivational seminars and camps". Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
 2. Government has launched Saujana Asahan, a training center for motivational program and seminars.
 3. Legend of Puteri Gunung Ledang.
 4. Legend has it that until to date, this mountain is being guarded by the legendary Princess who is a fairy.[தொடர்பிழந்த இணைப்பு]
 5. The legend is very captivating, but unfortunately it has a significant impact to the Sultanate reign in Melaka.
 6. One of the Gunung Ledang hiking trails known as the Asahan Trail starts near the Lubuk Kedondong waterworks.
 7. Saujana Asahan, Kolam Air Asahan Melaka is next to Kolam Bekalan Air Melaka.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசகான்&oldid=3925856" இலிருந்து மீள்விக்கப்பட்டது