குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை (மலாய்: Legenda Puteri Gunung Ledang; ஆங்கிலம்: Legend of Gunung Ledang; ஜாவி: ليڬيندا ڤوتري ڬونوڠ ليدڠ ) என்பது, முன்பு காலத்தில் லேடாங் மலையில் வாழ்ந்த ஓர் இளவரசியின் புராணக் கதையாகும்.[1] ஜொகூர், மலாக்கா மாநிலங்களின் எல்லையில் இருக்கும் லேடாங் மலையில், புராண காலத்து தேவதை ஒருவர் காவல் காத்து வருவதாக மலேசியப் புராணக் கதைகளில் இன்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், மலாய் இலக்கியக் களஞ்சியமான செஜாரா மலாயுவில் (Sejarah Melayu) குனோங் லேடாங் இளவரசியைப் பற்றிய ஒரு புராணக் கதையும் எழுதப் பட்டுள்ளது.[2]

புராணக் கதை[தொகு]

மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான்களில் கடைசியாக ஆட்சி செய்தவர் சுல்தான் மகமுட் ஷா. 1488 லிருந்து 1511 வரை இவருடைய ஆட்சி காலம். அவருடைய காலத்தில், லேடாங் மலையின் உச்சியில் ஓர் அழகிய இளவரசி வாழ்ந்து வந்ததாக நம்பப் பட்டது. அந்த அழகு தேவதையின் செய்தி சுல்தான் மகமுட் ஷாவின் காதுகளுக்கு எட்டியது.

சுல்தானின் மனைவியும் காலமாகி விட்டார். இந்தக் கட்டத்தில், லேடாங் இளவரசியைப் பற்றி கேள்விப் பட்ட சுல்தான் மகமுட் ஷா, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஓர் அரச குழுவையும் அனுப்பி வைத்தார். அந்தக் குழுவில் மலாக்கா கடற் படைத்தலைவர் ஹங் துவா, முக்கிய அமைச்சர்களான சாங் செத்தியா, துன் மாமாட் ஆகியோரும் இருந்தனர்.[3]

மலை உச்சியில் ஒரு பூங்காவனம்[தொகு]

லேடாங் மலையின் உச்சியை அடைவதற்கு அரச தூதுக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர். பாதி மலையில் ஏறிக் கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய புயல் காற்று. அதன் பின்னர், ஹங் துவா, சாங் செத்தியா ஆகிய இருவராலும் தொடர்ந்து ஏற முடியவில்லை. துன் மாமாட் மட்டும் தனி ஒருவராக மலை உச்சியை அடைந்தார்.

மலையுச்சியில் ஓர் அழகிய பூங்காவனம் இருப்பதைக் கண்டு துன் மாமாட் பிரமித்துப் போனார். திடீரென்று ஒரு வயதான மூதாட்டி அங்கே வந்து ’யார் நீ’ என்று கேட்டார். அதற்கு ‘நான் மலாக்கா சுல்தானின் தூதுவன், லேடாங் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள சுல்தான் ஆசைப் படுகிறார்’ என்று பதில் கூறினார்.

இளவரசியாரின் நிபந்தனைகள்[தொகு]

அதற்கு அந்த மூதாட்டி, ‘இளவரசியிடம் உங்களுடைய கோரிக்கையைத் தெரிவிக்கிறேன். அதுவரை பொறுமையாக இருக்கவும்’ என்று சொல்லி அங்கிருந்து மறைந்து போனார். கொஞ்ச நேரம் கழித்து அந்த மாது மறுபடியும் தோன்றினார். ’இளவரசியிடம் உங்கள் செய்தியைச் சொன்னேன். சுல்தானுக்கு வணக்கம் சொல்லி, இளவரசியார் சில நிபந்தனைகளையும் விதித்தார்.

அவருடைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க முடியும் என்கிறார்’ என சொன்னார்.[4] இளவரசியார் விதித்த நிபந்தனைகள்:

 • லேடாங் மலையில் இருந்து மலாக்காவிற்கு நடந்து செல்ல தங்கத்திலான ஒரு பாலம்
 • மலாக்காவில் இருந்து லேடாங் மலைக்குத் திரும்பி வர வெள்ளியிலான ஒரு பாலம்
 • ஏழு மண் ஜாடிகளில் ஒரு கன்னிப் பெண்ணின் கண்ணீர்
 • ஏழு மண் ஜாடிகளில் பாக்குச் சாறு
 • ஏழு தட்டுகளில் தெள்ளு (பூச்சி)களின் இருதயங்கள்
 • ஏழு தட்டுகளில் கொசுக்களின் இருதயங்கள்
 • ஒரு கிண்ணத்தில் சுல்தானின் இளைய மகனின் இரத்தம்

இளவரசியாரின் எல்லா நிபந்தனைகளையும் சுல்தான் மகமுட் ஷாவினால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், லேடாங் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.[5] 1511-ஆம் ஆண்டு, மலாக்காவைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். அதன் பின்னர், மலாக்கா சுல்தானகம் ஒரு முடிவிற்கு வந்தது. சுல்தான் மகமுட் ஷாவும் பகாங் மாநிலத்திற்குத் தப்பிச் சென்றார்.

லேடாங் கவிதை[தொகு]

லேடாங் மலையைப் பற்றி மலாய் இலக்கியத்தில் ஒரு கவிதையும் உள்ளது.[6]

 • எவ்வளவுதான் வாழை மரத் தண்டு தழைத்து இருந்தாலும்
 • எவ்வளவுதான் தீயின் புகை உயர்ந்து சென்றாலும்
 • எவ்வளவுதான் லேடாங் மலை நிமிர்ந்து நின்றாலும்
 • இதயத்தின் நம்பிக்கைகள் தான் உயர்வானவை

குனோங் லேடாங் இளவரசியின் கதை, ஒரு புராணக் கதையாக இருந்தாலும், உண்மையாக இருக்கலாம் என்று மலேசிய மக்கள் இன்றும் நம்புகின்றனர்.[7]

மேடை திரை ஆக்கங்கள்[தொகு]

குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதையைப் பற்றி ஒரு மேடை நாடகமும், இரு திரைப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

 • புத்திரி குனோங் லேடாங் - கறுப்பு வெள்ளைத் திரைப்படம் (1961) - நடிகை: எலேயின் எட்லி[8]
 • புத்திரி குனோங் லேடாங் - இசை நாடகம் (2006) - தியாரா ஜெக்குலின்; ஸ்டீபன் ரஹ்மான் ஹியூஸ்[9]
 • புத்திரி குனோங் லேடாங் - வண்ணத் திரைப்படம் (2004) - நடிகை: தியாரா ஜெக்குலின் நடிகர்: எம். நாசிர்[10]

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]