கோலா பிலா
கோலா பிலா | |
---|---|
நெகிரி செம்பிலான் | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°44′19.6″N 102°14′57.5″E / 2.738778°N 102.249306°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | கோலா பிலா மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 36,645 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 72xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
இணையதளம் | கோலா பிலா நகராண்மைக் கழகம் |
கோலா பிலா (மலாய்: Bandar Kuala Pilah; ஆங்கிலம்: Kuala Pilah; சீனம்: 瓜拉庇勞); என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், கோலா பிலா மாவட்டத்தில் (Kuala Pilah District) அமைந்து உள்ள ஒரு நகரம். தவிர இந்த நகரம், அந்த கோலா பிலா மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[1]
கோலா பிலா நகரம் ஒரு பழைய பள்ளத்தாக்கு நகரமாகும். மேலும் முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட பல சீனக் கடை வீடுகள் இந்த நகரத்தில் இன்றும் உள்ளன. தவிர பாரம்பரிய பாணியிலான மலாய்க்காரர்களின் கிராம வீடுகளாலும் இந்த நகர்ம் சூழப்பட்டு உள்ளது.
பிரித்தானிய ஆட்சியின் போது இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்தன. மலேசியச் சீனர்கள் மலேசியாவின் ஈயச் சுரங்கத் தொழிலின் முன்னோடியாக விளங்கியவர்கள். அந்த வகையில் இந்தக் கோலா பிலா நகரமும், கணிசமான அளவிற்கு சீனச் சமூகத்தினரைக் கொண்டு உள்ளது.[2]
கோலா பிலா நகரம், சிரம்பான் மாநகருக்கு கிழக்கே 37.9 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இப்போதைய சிரம்பான் நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகராக மாறுவதற்கு முன்னர், கோலா பிலா நகரம் தான் தலைநகரமாக இருந்தது.[3]
பொது
[தொகு]வார இறுதி நாட்களில் கோலா பிலா நகரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். கோலாலம்பூரில் இருந்து திரும்பும் இளைஞர்கள் வழக்கமாகத் தங்கள் பெற்றோரைப் பார்க்க வருகின்றார்கள். அல்லது தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க வருகின்றார்கள்.
அந்த வகையில் வேலை வாய்ப்புகளைத் தேடி கோலாலம்பூருக்குக் குடிபெயர்ந்தவர்களில் மலாய்க்காரர் இளைஞர்கள் அதிகம்.
அனுதினமும் இரவு 7.00 மணிக்குள், கோலா பிலா நகரத்தின் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டு விடுகின்றன. அதனால் இரவில் இந்த நகரம் வெறிச்சோடிப் போய்க் கிடக்கும். ஆனால் அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
உணவுக் கடைகள் குறைவு
[தொகு]மருத்துவமனைகள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற அரசு அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் பெரும்பாலோர்; கோலா பிலா நகரத்திற்கு அருகிலேயே தங்கி இருக்கின்றனர். அதனால் அதிகாலையில் நகர மையத்தில் பரபரப்பு.
நகரத்தைச் சுற்றிலும் அதிகமாக உணவுக் கடைகள் இல்லை. பெரும்பாலான கடைகள் கோலா பிலா நகரத்திற்கும் பகாவ் நகரத்திற்கும் இடையிலான சாலைச் சந்திப்புகளில் மட்டும் உள்ளன.
கோலா பிலா நகரத்தில் ஒரு திரைப்பட அரங்கம் இருந்தது. ஆனால் 1990-களில் வீடியோ விளையாட்டுக் கடைகள் மற்றும் இணையச் சேவைக் கடைகள் அறிமுகமானதால் அந்தத் திரைப்பட அரங்கம் மூடப்பட்டது.
கோலா பிலா ஓய்வு இல்லம்
[தொகு]பிரித்தானியர்களின் ஆட்சியின் போது, இந்த நகரத்தில் ஓர் ஓய்வு இல்லம் இருந்தது. பிரித்தானிய மலாயா அரசாங்கத்தால் கட்டப்பட்டது. அதன் பெயர் கோலா பிலா ஓய்வு இல்லம் (Kuala Pilah Rest House). அந்தப் பழைய ஓய்வு இல்லம் இன்றும் உள்ளது.
ஆனாலும் இன்றைய காலத்தில், இந்த நகரில் நிறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன. அதனால் இந்த ஓய்வு இல்லம் இப்போது பழைய பெருமையை இழந்து பொலிவின்றிக் காணப் படுகிறது.[4]
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]இந்த நகரத்தில் பழைமை வாய்ந்த பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
சீன மெதடிஸ்ட் தேவாலயம்;
1898-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிம் தோங் தாவோயிஸ்ட் கோயில் (Sim Tong Taoist temple);
1937-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சீக்கிய குருத்வாரா சாஹிப் ஆலயம்;
இந்திய முஸ்லிம் மக்களுக்காக மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல்;
நகரின் மிக முக்கியமான யாம் துவான் ராடின் பள்ளிவாசல்
கோலா பிலா ஸ்ரீ கந்தசாமி கோயில்
[தொகு]கோலா பிலா நகரில் பழைமை வாய்ந்த இந்து கோயில் ஸ்ரீ கந்தசாமி கோயில். வண்ண மயமான வர்ணங்கள் பூசப்பட்ட இந்து கோவில் 1896-ஆம் ஆண்டுக்கும் முந்தைய வரலாற்றைக் கொண்டது.
விஸ்வநாத முதலியார் என்பவரால் உருவாக்கப் பட்டது. அந்தக் கோயில் கட்டப்படும் போது அந்த இடம் ஒரு தென்னந் தோட்டம். 1,253 ஏக்கர் பரப்பளவு கொன்டது. 1907-ஆம் ஆன்டில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[5]
தமிழறிஞர் அ. நாகலிங்கம்
[தொகு]அ. நாகலிங்கம் என்பவர் இந்த ஸ்ரீ கந்தசாமி கோயிலைப் புனரமைப்பு செய்ய உதவிகள் புரிந்து உள்ளார். இவர் இலங்கை வடமாகாணத்தின் காரைநகரில் பிறந்து, மலேசியாவில் வாழ்ந்த தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
அந்தக் காலத்தில் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோலா பிலா நகரில் ஒப்பந்தக்காரராகப் பணியாற்றிய இவரின் உறவினர் டி. கோவிந்தசாமி என்பவரே நாகலிங்கத்தை மலேசியாவுக்குச் செல்லத் தூண்டியவர்.
கோலா பிலா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளீகள்
[தொகு]நெகிரி செம்பிலான்; கோலா பிலா மாவட்டத்தில் (Kuala Pilah District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 170 மாணவர்கள் பயில்கிறார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD1066 | கோலா பிலா | SJK(T) Kuala Pilah[6] | கோலா பிலா தமிழ்ப்பள்ளி | 72000 | கோலா பிலா | 134 | 15 |
NBD1067 | சுவாசே தோட்டம் | SJK(T) Ldg Juasseh[7] | சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | கோலா பிலா | 36 | 8 |
காட்சியகம்
[தொகு]-
கோலா பிலா நகரம்
-
கோலா பிலா ஸ்ரீ கந்தசாமி ஆலயம்
-
கோலா பிலா பள்ளிவாசல்
-
கோலா பிலா நகராண்மைக் கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Majlis Daerah Kuala Pilah dikenali sebagai Majlis Bandaran Kuala Pilah (MBKP) dan ditubuhkan pada bulan Februari 1957". Portal Rasmi Majlis Daerah Kuala Pilah (MDKP). 4 November 2015. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ Malhi, Ranjit Singh (28 November 2021). "HISTORY - Malay chiefs and Chinese tin miners". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "Kuala Pilah was once the capital city of Negeri Sembilan before Seremban". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "Kuala Pilah Attractions - The old Government resthouse sits on a small hill on the edge of the town centre. It appears to have been significantly remodelled". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "Sri Kanthasamy Temple, Kuala Pilah, Negeri Sembilan - A Vel was placed by a Mr Viswanatha Mudaliar at the present site which was then a 1,253 acre coconut plantation" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "கோலா பிலா தமிழ்ப்பள்ளி - SJKT KUALA PILAH - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]