ஜெ. ஜெயலலிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெயலலிதா ஜெயராம்
Jayalalithaa1.jpg
16-ஆம் தமிழக முதல்வர்
பதவியில்
16 மே 2011 – 27 செப் 2014
முன்னவர் மு. கருணாநிதி
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
தொகுதி ஸ்ரீரங்கம்
14-ஆம் தமிழக முதல்வர்
பதவியில்
2 மார்ச் 2002 – 12 மே 2006
முன்னவர் ஓ. பன்னீர்செல்வம்
பின்வந்தவர் மு. கருணாநிதி
தொகுதி ஆண்டிப்பட்டி
தமிழக முதல்வர்[1]
பதவியில்
14 மே 2001 – 21 செப்டம்பர் 2001
முன்னவர் மு. கருணாநிதி
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
தொகுதி போட்டியிட இயலாது
11-ஆம் தமிழக முதல்வர்
பதவியில்
24 ஜூன் 1991 – 12 மே 1996
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் மு. கருணாநிதி
தொகுதி பர்கூர்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 24, 1948 (1948-02-24) (அகவை 67)
மேல்கோட்டை மைசூர், கர்நாடகா
அரசியல் கட்சி அ. தி. மு. க.
இருப்பிடம் சென்னை
சமயம் இந்து

ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவள்ளி ஜெயராம்[2] (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) தமிழக முன்னாள் முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சி மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தவர். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவரைப் "புரட்சித் தலைவி" என இவரது ஆதரவளர்கள் அழைப்பர்.[3] தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர்,[சான்று தேவை] கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர்.

1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக செயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 2014 செப்டம்பர் 27 இல் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[4][5][6][7] பதவியில் இருக்கும் போதே பதவியில் இருந்து அகற்றப்பட்ட முதலாவது இந்திய மாநில முதல்வர் செயலலிதா ஆவார்.[8][9] 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவள்ளி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவள்ளி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். வேதவள்ளி சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

திரையுலகப் பங்களிப்பு[தொகு]

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார். [10] மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அரசியல் பங்களிப்பு[தொகு]

பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா

1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து [11] 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார்.[12]

சட்டமன்றப் பொறுப்புகள்[தொகு]

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்[தொகு]

ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

 1. 1989 முதல் 1991வரை.

தமிழக முதல்வர்[தொகு]

ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.

 1. ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர்.
 2. மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
 3. மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.
 4. 2011 முதல் - செப்டம்பர் 27, 2014 வரை - தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது).

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆண்டு நிலைமை இடம்
1986 வெற்றி போடிநாயக்கனூர்
1991 வெற்றி பர்கூர், காங்கேயம்
1996 தோல்வி பர்கூர்
2002 வெற்றி ஆண்டிப்பட்டி
2006 வெற்றி ஆண்டிப்பட்டி
2011 வெற்றி ஸ்ரீரங்கம்

2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெறும் 2001 சட்டமன்ற தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்களோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.[13] ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.

முதல் அமைச்சர்[தொகு]

முதல் வரை தேர்தல்
1991 1996 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2001 மே 2001 செப்டம்பர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவிவகித்தார்
2002 2006 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2011 செப்டம்பர் 27 , 2014 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.[14] 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலுருந்து விலகினார். [15] 2002, பிப்பரவரி 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார்.[16]

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

அவர் நடித்துள்ள திரைப்படங்களில் சில:

வ.எண். ஆண்டு திரைப்படம் கதாநாயகர் /இணை நடிகர் குறிப்பு
01 1961 சிறிசைல மகாத்மா (Shrishaila Mahatme) ராஜ்குமார் கன்னடப்படம்
02 1961 எபிஸில் ஷங்கர்.வி.கிரி இயக்கிய ஆங்கிலப் படம்
03 1961 மேன்-மனுஷி (Man-Mauji) கிசோர்குமார் கன்னடப்படம். தலைப்பில் பெயரிப்படவில்லை. குமாரி ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
04 1964 முரடன் முத்து சிவாஜி கணேசன்
05 1964 மனே அலியா(Mane Aliya) பால்கிருசுணா கன்னடப்படம்
02 1964 சின்னடா கொம்பே கன்னடப் படம்
03 1965 ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த்
04 1965 ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் பூங்கொடி
05 1965 ஆகஸ்ட் 21 நீ ஜெய்சங்கர்
06 1965 செப்டம்பர் 10 கன்னித்தாய் எம்.ஜி.ஆர்
07 1966 சனவரி 26 மோட்டார் சுந்தரம்பிள்ளை சிவாஜி கணேசன் சிவாஜியின் மகள் வேடம்
08 1966 ஏப்ரல் 14 யார் நீ ஜெய்சங்கர்
09 1966 மே 6 குமரிப் பெண் ரவிசந்திரன்
10 1966 மே 27 சந்திரோதயம் எம்.ஜி.ஆர்
11 1966 சூன் 16 தனிப் பிறவி எம்.ஜி.ஆர்
12 1966 ஆகஸ்ட் 18 முகராசி எம்.ஜி.ஆர்
13 1966 நவம்பர் 11 கௌரி கல்யாணம் ஜெய்சங்கர்
14 1966 நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த் ஏவி.எம்.ராசன்
15 1967 ஜனவரி 13 தாய்க்குத் தலைமகன் எம்.ஜி.ஆர்
16 1967 ஏப்ரல் 14 மகராசி ரவிசந்திரன்
17 1967 மே 19 அரச கட்டளை எம்.ஜி.ஆர்
18 1967 சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை ரவிச்சந்திரன்
19 1967 செப்டம்பர் 7 காவல்காரன் எம்.ஜி.ஆர்
20 1967 நவம்பர் 1 நான் ரவிசந்திரன்
21 1967 கந்தன் கருணை சிவகுமார் வள்ளி வேடம்
22 1967 ராஜா வீட்டுப் பிள்ளை ஜெய்சங்கர்
23 1968 ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்
24 1968 ஜனவரி 15 அன்று கண்ட முகம் ரவிசந்திரன்
25 1968 பிப்ரவரி 23 தேர்த் திருவிழா எம்.ஜி.ஆர்
26 1968 மார்ச் 15 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர்
27 1968 ஏப்ரல் 12) கலாட்டா கல்யாணம் சிவாஜி கணேசன்
28 1968 ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் எம்.ஜி.ஆர்
29 1968 மே 10 மூன்றெழுத்து ரவிசந்திரன்
30 1968 மே 31 பொம்மலாட்டம் ஜெய்சங்கர்
31 1968 சூன் 27 புதிய பூமி எம்.ஜி.ஆர்
32 1968 ஆகஸ்டு 15 கணவன் எம்.ஜி.ஆர்
33 1968 செப்டம்பர் 6 முத்துச் சிப்பி ஜெய்சங்கர்
34 1968 செப்டம்பர் 20 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்
35 1968 அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா சிவாஜி கணேசன்
36 1968 அக்டோபர் 21 காதல் வாகனம் எம்.ஜி.ஆர்.
37 1968 இஜத் (இந்தி படம் தர்மேந்திரா
1969 சூன் 14 குருதட்சணை சிவாஜி கணேசன்
1969 செப்டம்பர் 5 தெய்வமகன் சிவாஜி கணேசன்
1969 நவம்பர் 7 நம் நாடு எம்.ஜி.ஆர்.
1969 அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்.
1970 ஜனவரி 14 எங்க மாமா சிவாஜி கணேசன்
1970 ஜனவரி 14 மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர்.
1970 மே 21 என் அண்ணன் எம்.ஜி.ஆர்.
1970 ஆகஸ்ட் 29 தேடிவந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர்.
1970 செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன் ஏவி. எம். ராசன்
1970 அக்டோபர் 9 எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
1970 அக்டோபர் 29 எங்கிருந்தோ வந்தாள் சிவாஜி கணேசன்
1970 நவம்பர் 27 பாதுகாப்பு சிவாஜி கணேசன்
1971 ஆகஸ்ட் 15 அன்னை வேளாங்கண்ணி ஜெமினி கணேசன்
1971 ஜனவரி 26 குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர்.
1971 ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி சிவாஜி கணேசன்
1971 சூலை 3 சவாலே சமாளி சிவாஜி கணேசன்
1971 ஆகஸ்ட் 12 தங்க கோபுரம் ஜெய்சங்கர்
1971 அக்டோபர் 17 ஆதி பராசக்தி ஜெமினி கணேசன்
1971 அக்டோபர் 18 நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர்.
1971 திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர்
1971 பிப்ரவரி 11 திக்குதெரியாத காட்டில் முத்துராமன்
1972 ஜனவரி 26 ராஜா சிவாஜி கணேசன்
1972 ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர்.
1972 மே 6 பட்டிக்காடா பட்டணமா சிவாஜி கணேசன்
1972 சூலை 15 தர்மம் எங்கே சிவாஜி கணேசன்
1972 செப்டம்பர் 15 அன்னமிட்ட கை எம்.ஜி.ஆர்.
1972 திசம்பர் 7 நீதி சிவாஜி கணேசன்
1973 ஜனவரி 14 கங்கா கௌரி ஜெமினிகணேசன்
1973 மார்ச் 16 வந்தாளே மகாராசி ஜெய்சங்கர்
1973 ஆகஸ்ட் 10 பட்டிக்காட்டு பொன்னையா எம்.ஜி.ஆர்.
1973 ஆகஸ்ட் 15 சூரியகாந்தி முத்துராமன்
1973 அக்டோபர் 25 பாக்தாத் பேரழகி ரவிசந்திரன்
1974 ஜனவரி 11 திருமாங்கல்யம் முத்துராமன் (100ஆவது படம்)
1974 மார்ச் 7 தாய் சிவாஜி கணேசன்
1974 மே 24 ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு சிவகுமார்
1974 மே 24 வைரம் ஜெய்சங்கர்
1974 ஆகஸ்டு 30 அன்புத்தங்கை முத்துராமன்
1974 நவம்பர் 13 அன்பைத்தேடி சிவாஜி கணேசன்
1980 ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல் சரத் பாபு 127ஆவது படம்

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

புனைப் பெயர்கள்[தொகு]

 • இவருக்கு திருமணம் ஆகாததால், செல்வி ஜெ. ஜெயலலிதா என அழைக்கப்படுகிறார்.
 • மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.
 • புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார்.

வழக்குகள்[தொகு]

ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்,

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு[தொகு]

 • ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
 • தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

டான்சி நில வழக்கு[தொகு]

 • சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 • தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
 • சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
 • இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.

பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு[தொகு]

 • கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
 • தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
 • 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு மாணவர்கள் கீழிறங்கும்படி செய்தபின்னர் பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.

நிலக்கரி இறக்குமதி வழக்கு[தொகு]

 • தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
 • தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
 • இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு[தொகு]

 • அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
 • தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
 • செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

பிறந்த நாள் பரிசு வழக்கு[தொகு]

 • 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
 • தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு[தொகு]

சொத்துக் குவிப்பு வழக்கு முதன்மைக் கட்டுரை

 • ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
 • 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 • பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
 • இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 • குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 • 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.
 • 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
 • பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
 • இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[4][5][6].
 • இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.[7][17].
 • மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.[18]

வருமானவரிக் கணக்கு வழக்கு[தொகு]

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்நிலையில் ரூபாய் இரண்டு கோடி வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது.[19]

உசாத்துணைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Hindu — SC unseats Jayalalithaa as CM, Full text of the judgment from official Supreme Court site).
 2. "In school her name was Komalavalli". DNA (7 மே 2006). பார்த்த நாள் 10 நவம்பர் 2013.
 3. Srinivasaraju, Sugata (21 மார்ச் 2011). "The Road To Ammahood". Outlook India. http://www.outlookindia.com/article.aspx?270858. பார்த்த நாள்: 10 நவம்பர் 2013. 
 4. 4.0 4.1 http://www.dinamalar.com/news_detail.asp?id=1080348
 5. 5.0 5.1 http://www.ndtv.com/article/cheat-sheet/jayalalithaa-convicted-of-corruption-by-bangalore-court-598712?pfrom=home-lateststories
 6. 6.0 6.1 http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140927_jayajudgement
 7. 7.0 7.1 "ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு". தி இந்து. 27 செப்டம்பர் 2014. http://tamil.thehindu.com/tamilnadu/article6452701.ece. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2014. 
 8. "Tamil Nadu CM J Jayalalithaa convicted to 4 years imprisonment in disproportionate assets case". டி.என்.ஏ (27 செப் 2014). பார்த்த நாள் 27 செப் 2014.
 9. "Top India politician Jayalalitha jailed for corruption". BBC News Online. 27 September 2014. http://www.bbc.com/news/world-asia-india-29390682. பார்த்த நாள்: 27 September 2014. 
 10. இதயக்கனி
 11. தினமணி
 12. http://www.malaimurasu.com)27.07.2013
 13. "All Jayalalitha nominations rejected". Rediff. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2014.
 14. "Profile: She wanted to study…a film role changed her life – See more at: http://indianexpress.com/article/india/politics/profile-jayalalithaa-the-amma-of-indian-politics/#sthash.UikruR80.dpuf". IndianExpress. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2014.
 15. "The conundrum in an AIADMK stronghold". The Hindu. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2014.
 16. "Jayalalithaa AIADMK nominee in Andipatti". ReDiff. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2014.
 17. நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!
 18. http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கில்-ஜெயலலிதா-விடுதலை/article7193024.ece?homepage=true
 19. http://www.dinamalar.com/news_detail.asp?id=1156673

வெளி இணைப்புகள்[தொகு]

பார்க்கவும்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
மு. கருணாநிதி
தமிழக முதல்வர்
முதல் முறை

1991–1996
பின்னர்
மு. கருணாநிதி
தமிழக முதல்வர்
(முடக்கப்பட்டது)

14 மே 2001–16 செப்டம்பர் 2001
பின்னர்
ஓ. பன்னீர்செல்வம்
முன்னர்
ஓ. பன்னீர்செல்வம்
தமிழக முதல்வர்
இரண்டாம் முறை

2002–2006
பின்னர்
மு. கருணாநிதி
முன்னர்
மு. கருணாநிதி
தமிழக முதல்வர்
மூன்றாம் முறை
(பதவி விலகினார்)

2011-2014
பின்னர்
ஓ. பன்னீர்செல்வம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._ஜெயலலிதா&oldid=1858259" இருந்து மீள்விக்கப்பட்டது