எஸ். எஸ். ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். எஸ். ராஜேந்திரன்
S. S. Rajendran
பிறப்பு சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன்
பணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
வாழ்க்கைத் துணை பங்கஜம்
விஜயகுமாரி
தாமரைசெல்வி

எஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் (பிறப்பு: 1928)தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும். 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திரைப்படத் துறையில்[தொகு]

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜேந்திரன் 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்[1]. எம். ஜி. ராமச்சந்திரன் ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரன் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் பின்னர் நடிக்க வாய்ப்பின்றி இருந்தவருக்கு கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.

எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் தோன்றி நடித்தார்கள்.

சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் சின்னத்திரையில் தோன்றி நடித்தார். 1980களில் மோகன் பிரபலமாக இருந்த நேரத்தில் அன்பின் முகவரி என்ற படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்தார்.

1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்.

அரசியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழை அருமையாகப் பேசி இலட்சிய நடிகராக வாழ்ந்த எஸ்.எஸ்.ஆர், பாலா. சங்குப்பிள்ளை, வீரகேசரி, செப்டம்பர் 24, 2011
  2. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf
"http://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._ராஜேந்திரன்&oldid=1679730" இருந்து மீள்விக்கப்பட்டது