ம. கோ. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். ஜி. இராமச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
பிறப்பு ஜனவரி 17, 1917
நாவலப்பிட்டி, இலங்கையின் கொடி இலங்கை
இறப்பு டிசம்பர் 24, 1987
தமிழ்நாடு, இந்தியாவின் கொடி இந்தியா
பணி நடிகர், அரசியல்வாதி
வாழ்க்கைத் துணை தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி
பிள்ளைகள் கிடையாது

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.

பொருளடக்கம்

[தொகு] தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு] இளமைப்பருவம்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2]

அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

[தொகு] இல்லறம்

எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். அவர் தங்கமணியை மணந்தார். தங்கமணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த இல்லற வாழ்க்கையால் தங்கமணி கற்பமானார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.[3]

[தொகு] செல்லப் பிராணிகள்

எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரை நியமித்திருந்தார்.[4]

[தொகு] திரைப்பட வாழ்க்கை

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

[தொகு] அரசியல் வாழ்க்கை

ம.கோ.இரா-வின் அம்பாசடர் கார்

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடை பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும்,தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988 இல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியிலிருந்த போதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[5] இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[6] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

[தொகு] திட்டங்கள்

சத்துணவுத் திட்டம் இலவச வேட்டி சேலை திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[7]

[தொகு] தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு

1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

[தொகு] எம்.ஜி.ஆர் பற்றி பிரபாகரன்

விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றே எம்.ஜி.ஆர் தன்நிலையை பற்றி பிரபாகரனிடம் கூறியுள்ளார்.

[8]

[தொகு] எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்

1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

[தொகு] நெடுமாறனின் நினைவுகள்

பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.[9]

[தொகு] எழுத்துகள்

[தொகு] நாடோடி மன்னன் புத்தகம்

எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.[10] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார்.

[தொகு] சுயசரிதைத் தொடர்

‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.[4]

[தொகு] சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

[தொகு] விருதுகள்

  1. பாரத் விருது - இந்திய அரசு
  2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
  3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
  4. பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
  5. சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
  6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

[தொகு] திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. இதயக்கனி - அறிஞர் அண்ணா
  2. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
  3. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
  4. மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
  5. பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
  6. மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
  7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
  8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
  9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
  10. கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
  11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
  12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

[தொகு] பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
  2. கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
  3. நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
  4. பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
  5. மக்கள் திலகம் - தமிழ்வாணன்
  6. வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
  7. புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
  8. இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
  9. மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
  10. ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்

[தொகு] நினைவிடம்

தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர் நினைவிடம்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] ஆதாரங்கள்

  1. எம்.ஜி.ஆர். வாழ்கை
  2. எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்" (in தமிழ்). பி. பி. சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. Retrieved 2006-11-08. 
  3. வாழ்க்கைக் குறிப்பு
  4. 4.0 4.1 எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
  5. எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்". பி.பி.சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. Retrieved 2006-11-08. "திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்." 
  6. [The nurturing hero Changing images of MGR Sara Dickey (2005). Appeared in Tamil Cinema: The cultural politics of India’s other film industry]
  7. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: ஜெயலலிதா
  8. * எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன்
  9. * பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்
  10. * நாடோடி மன்னன் திரைப்படம் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] அரசியல் குறிப்புகள்

[தொகு] திரைப்பட வாழ்க்கை

[தொகு] பொது

"http://ta.wikipedia.org/w/index.php?title=ம._கோ._இராமச்சந்திரன்&oldid=1121196" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்