இந்திய தேசிய காங்கிரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| இந்திய தேசிய காங்கிரஸ் | |
| தலைவர் | சோனியா காந்தி |
|---|---|
| நிறுவல் | 1885 |
| தலைமையகம் | 24, அக்பர் சாலை, புது தில்லி - 110011 |
| கூட்டணி | தேசிய முற்போக்குக் கூட்டணி |
| கொள்கை நிலை | Social Democratic / Populist |
| வெளியீடுகள் | காங்கிரஸ் சந்தேஷ் |
| வலைத்தளம் | http://www.congress.org.in |
| இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க | |
இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) (காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக INC) இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 14வது இந்திய நாடாளுமன்றத்தில் (2004 - 2009), 145 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. இடது முன்னணியின் ஆதரவுடன் நடைபெறும் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு கால பகுதிகளாக பிரிக்கலாம்.
[தொகு] விடுதலைக்கு முன்பான கால பகுதி
1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஸ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த காங்கிரஸ் பால கங்காதர திலகர், கோபால கிருஸ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பல சிறந்த தலைவர்களை உருவாக்கியது.