மு. ஆனந்தகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. ஆனந்தகிருஷ்ணன் (பிறப்பு-12-7-1928) பொறியாளராகவும் கல்வியாளராகவும் அறிவியல் ஆலோசகராகவும் உயர்தொழில்நுட்ப வல்லுநராகவும் தமிழ் இணைய வளர்ச்சியில் முன்னோடியாகவும் விளங்குபவர்.

இளமையும் கல்வியும்[தொகு]

தமிழ் நாட்டில் வாணியம்பாடியில் மிக எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை நகராட்சிப் பள்ளியிலும் ஆறாம்வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இசுலாமிய உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., மறைமலையடிகள், தந்தை பெரியார் போன்றோர்களைக் கண்டு பழகும் வாய்ப்பும் சூழ்நிலையும் ஆனந்தகிருஷ்ணன் சிறுவராக இருந்தபோது கிடைத்தது. அதனால் மொழிப் பற்றும் சமூகப் பரந்த நோக்கும் அவருக்கு ஏற்பட்டன. பள்ளிப் படிப்பு முடிந்து வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். இண்டர்மீடியட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றதால் சிவில் பொறியியல் படிக்க சென்னைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கட்டிடப் பொறியியலில் நெடுஞ்சாலை சிறப்புப் பாடம் எடுத்து முதல் மாணவராகத் தேர்ந்தார்.

பணி[தொகு]

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலைப் பொறியாளராக 1952 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னையில் நெடுஞ்சாலை ஆய்வு மையத்திற்கு மாற்றல் கிடைத்தது. ஆனந்தகிருஷ்ணனின் அறிவுக்கூர்மையையும் திறமையையும் கண்ட நெருங்கிய நண்பர் ஒருவர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்குமாறு வற்புறுத்தினார். அக்கருத்தை ஏற்று அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க முடிவு செய்து விண்ணப்பம் போட்டார். அரசு உதவித் தொகையும் அவருக்குக் கிடைத்தது.

அமெரிக்கக் கல்வி[தொகு]

1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக் கழக மாணவர் ஆனார்.எம்.எஸ் படிப்பு முடிந்ததும் ஆய்வுப் படிப்பும் படித்தார்.1960ஆம் ஆண்டில் பி.எச்.பட்டம் பெற்று டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் ஆனார்.

கான்பூர் ஐ.ஐ.டி வாழ்க்கை[தொகு]

ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கான்பூர் இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் உருவானதிலும் வடிவமைக்கப் பட்டதிலும் ஆனந்தகிருஷ்ணனின் பங்களிப்பு இருந்தது. அதுபோல கல்வி பாடத்திட்டங்கள் அமைப்பதிலும் முனைப்பாகச் செயல்பட்டார். அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக் கழகங்களின் கல்வித் திட்டங்கள் அடிப்படையில் இங்கும் அமைக்கப்பட்டன. நாட்டில் முதன் முறையாக செமஸ்டர் முறையைக் கொண்டுவந்தனர். வகுப்பறைக் கணிப்புமுறை, கிரேடிங் முறை, கிரடிட் முறை என முதன்முதல் செயல்படுத்திய பெருமை கான்பூர் ஐ.ஐ.டி.க்கும் ஆனந்தகிருஷ்ணனுக்கும் உண்டு. மாணவர்களுக்காக அவர் நடத்திய பாடங்கள் பல வகையாக இருந்தன. அவர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்தார்.கான்பூர் ஐ.ஐ.டி யின் டீன் பதவியும் பொறுப்பு இயக்குநர் பதவியும் இவரைத் தேடிவந்தன. அவற்றையும் ஏற்றுப் பணி புரிந்தார்.

அமெரிக்க இந்தியத் தூதரகத்தில்[தொகு]

இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பத்தை, வளர்ந்த மேலை நாடுகளுக்கு இணையாக வளர்த்தெடுக்க இந்திய அரசு விரும்பியது. எனவே இந்தியத் தூதரகங்களில் 'அறிவியல் ஆலோசகர்' என்னும் பதவியைப் புதிதாக உருவாக்கினர். வாசிங்டன் அமெரிக்கத் தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராக ஆனந்தகிருஷ்ணன் அமர்த்தப்பட்டார். 1974 சூன் திங்களில்வாசிங்டன் போய் பதவியை ஏற்றார். 1974 ஆம் ஆண்டு மே மாதத்தில் அணுக்குண்டு வெடிப்புச் சோதனையை பொக்ரானில் நடத்தியதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது அந்தச் சூழலை ஆனந்தகிருஷ்ணன் திறம்பட கையாண்டார். ஏ டி எஸ் எப் என்னும் அமெரிக்காவின் விண்கோளைப் பயன்படுத்தி ஆயிரத்து ஐந்நூறு கிராமங்களுக்கு தொலைக் காட்சிகளை காட்ட முயற்சி செய்து வெற்றி பெற்றார். ரிமோட் சென்சிங் என்னும் துறையிலும் ஆனந்தகிருஷ்ணன் தம் முத்திரையைப் பதித்தார். இந்தியத் தூதரக அறிவியல் ஆலோசகராக இருந்த காலத்தில் அமெரிக்காவின் வெளி விவகார அமைச்சர் என்றி கிசின்ஜருடன் நெருக்கமாகப் பழகுகிற வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

ஐக்கிய நாடுகள் அவை[தொகு]

புதிய தொழில் நுட்பப் பிரிவின் தலைவர் என்னும் பதவியை ஏற்க ஐ.நா.அவையிலிருந்து அழைப்பு வந்தது. 1978 ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்பொறுப்பை ஏற்றார். 1979 இல் ஐ,நா அவை நடத்திய மிக முக்கிய மாநாடு வியன்னாவில் நடைபெற்றது. பல நாடுகளிலிருந்து அறிவியல் அறிஞர்கள் நோபல் பரிசு பெற்ற விற்பன்னர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். அம்மாநாடு நடைபெறுவதற்கு முன் சீனா சோவியத்து ரசியா, ஆப்பிரிக்க நாடுகள் போன்ற ஏறத்தாழ முப்பத்தாறு நாடுகளுக்குச் சென்று அம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஐ.நா.வின் வரலாற்றில் வியன்னா மாநாடு ஒரு மைல் கல் ஆகும். வியன்னா மாநாட்டிற்குப் பின் ஐ.நா.அவையின் அறிவியல் தொழில் நுட்ப நடுவம் என்னும் பிரிவின் துணை இயக்குநராக உயர்வு பதவிக்கு அமர்த்தப்பட்டார். இவ்வாறாக பத்து ஆண்டுகளுக்கு மேல் ஐ.நா.அவையில் ஆனந்தகிருஷ்ணனின் பணி தொடர்ந்தது. முந்தைய பத்தாண்டுகளில் உலக நாடுகளில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை ஆராய்ந்து அறிக்கையை ஐ.நா.விடம் அளித்தார். உலக வங்கி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வளரும் நாடுகளில் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் பெறவும் அதற்கான தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் அந்நாடுகளுக்குப் பயணம் செய்து உலக வங்கித் திட்டத்தை வகுத்தளித்தார். இத்தாலி பிரேசில் ஆகிய நாடுகளின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காகப் பலமுறை அந்நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1996ஆம் ஆண்டில் ஆனந்தகிருஷ்ணனுக்கு பிரேசில் நாட்டு அதிபர் தேசிய விருதை அளித்து பெருமைப் படுத்தினார்.

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர்[தொகு]

1990 ஆம் ஆண்டு மே ஒன்பதாம் தேதியில் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஆனார். அறிவியல் தொழில் நுட்பத்தில் உலகத்தரத்துக்கு இணையாக பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தார். அடுத்ததாக தேர்வு முறைகளையும் மாற்றினார். முழுமையான உள் மதிப்பீடு என்னும் பெயரில் மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிடும் முறையை அறிமுகம் செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு முடிவுகளை விரைவுப் படுத்த "மார்க் சென்சார் ரீடர்"என்னும்கருவியை பிரிட்டனிலிருந்து வரவழைத்தார். ஆனந்தகிருஷ்ணனின் அரிய சாதனை என்று சொல்லும் வகையில் ஒற்றைச் சாளர முறையைக் கொண்டுவந்தார்.இதன்படி பொறியியல் கல்லூரிகளில் சேரும் போதே மாணவர்கள் தம் விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதியைக் கண்டு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மிகவும் பாராட்டி மகிழ்ந்தார்கள். ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டு முறையுடன் கிராமப் பகுதி மாணவர்களுக்கென பதினைந்து விழுக்காடு பொறியியற் கல்லூரிகளில் இடம் தர திட்டம் கொண்டுவந்தார். பெட்ரோலியம் கிரானைட் போன்ற சிறப்புத் துறைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசி அவர்களின் தேவைக்கேற்ப திறமைசாலிகளை உருவாக்கித் தருவதாக உறுதிமொழி அளித்தார். திறமையும் தகுதியும் இல்லாதவர்களுக்கு அண்ணா பல்கலையில் இடம் இல்லை என்று தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.அண்ணா பல்கலைக்கழக ஆறாண்டுப் பதவிக் காலத்தில் எல்லாவகைத் தரப்பு மக்களும் ஆனந்தகிருஷ்ணனைப் பாராட்டினர்.

உயர்கல்வி மன்றம்[தொகு]

1996 ஆம் ஆண்டு சூலை மாதம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஆனந்தகிருஷ்ணன் பதவியேற்றார். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் 'சென்டர்ஸ் ஆப் எக்ஸலன்ஸ்' உருவாக்கினார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்களை அரசின் குறுக்கீடு இல்லாமல் செய்துகொள்ள ஆவன செய்தார். வேலை வாய்ப்புகளைத் தேடித் தரும் துறைகளை மாணவர்கள் படிக்கவும் அதற்கு ஏற்ப துணைப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் ஆறு ஆண்டுகள் இப்பணியில் இருந்தார்.

பிற பொறுப்புகளும் பதவிகளும்[தொகு]

1997 இல் தமிழ் நாடு அரசு உருவாக்கிய 'தகவல் தொழில் நுட்பப் பணி முனைப்புக் குழுவில் ஆனந்தகிருஷ்ணன் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். மின்னணு ஆளுமை தொடர்பாக தமிழக முதல்வரின் ஆலோசராக நியமிக்கபட்டார்.1999ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ் இணையம் மாநாடு சென்னையில் நடந்தபோது ஒருங்கிணைப்புப் பணியைத் திறம்படச் செய்தார். தமிழ் இணையம் -2000 மாநாடு சிங்கப்பூரில் நிகழ்ந்தபோது ஆனந்தகிருஷ்ணன் உத்தமம் என்னும் அமைப்புக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் இணையம் 2001 மாநாடு கோலாலம்ப்பூரில் மேலும் ஓராண்டுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெற்ற விருதுகள்[தொகு]

 • மினசோட்டா பல்கலைக் கழகத்தின் "ஆர்டர் ஆப் ஸ்கி-யு-மா விருது (1958)
 • இந்தியன் இன்வேன்சன் பிரமோசன் விருது (1972)
 • எஞ்சினீரிங் பெர்சனாலிட்டி விருது (1992)
 • எம். கே. நம்பியார் மெமோரியல் விருது (1993)
 • அமெரிக்காவில் தமிழ்நாடு பௌண்டேசன் வழங்கிய தி.என் எப் எக்சல்லன்ஸ் விருது (1993)
 • மீனம்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி வொகேசனால் சர்விஸ் விருது.
 • ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் "த நேசனல் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி அவார்ட் பார் எக்ஸலன்ஸ்" (1995)
 • சென்னை ரோட்டரி சங்கத்தின் "பார் த ஸேக் ஆப் ஆனர்" விருது (1995)
 • சென்னை தெலுங்கு அகாதமியின் உகாதி புரஷ்கார் விருது (1996)
 • பிரேசில் நாட்டின் பெருமைமிகு விருதான "நேஷனல் ஆர்டர் ஆப் சயண்டிபிக் மெரிட்" (1996)
 • இணையம், கணினி ஆகியவற்றில் தமிழ்ப் பயன்பாட்டுக்கு பங்களிப்புக்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன விருது.
 • பத்மசிறீ விருது-இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.(2002)
 • சிறந்த தலைமை விருது-மின்னசோட்டா பல்கலைக்கழக விருது.(2003)
 • பிளாட்டினம் விழா விருது-இந்தியன் செராமிக் சொசைட்டி.(2004)
 • போர்ச்சுகல் ’இக்சஸ்’ சிறந்த சாதனை விருது.(2004)
 • சென்னை தி செண்டினேரியன் டிரஸ்ட் வழங்கிய 'மேன் ஆப் தி இயர்' (1999)

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஆனந்தகிருஷ்ணன்&oldid=2759319" இருந்து மீள்விக்கப்பட்டது