உள்ளடக்கத்துக்குச் செல்

நோயெதிர்ப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோயெதிர்ப்பியல்
ஒரு நுண்ணுயிரை (மஞ்சள்) உண்ணும் நடுவமைச்செல் (நியூட்ரோஃபில், கருஞ்சிவப்பு வண்ணம்)
அமைப்புநோய் எதிர்ப்பாற்றல் முறைமை
உட்பிரிவுகள்நோயெதிர்ப்பு மரபியல் (Immunogenetics), மருத்துவ நோயெதிர்ப்பியல் (Clinical immunology), மூலக்கூற்று நோயெதிர்ப்பியல் (Molecular immunology), உயிரணு நோயெதிர்ப்பியல் (Cellular immunology), தாதுசார் நோயெதிர்ப்பியல் (Humoral Immunology), தடுப்பாற்றலியல் (Vaccinology)
குறிப்பிடத்தக்க நோய்கள்நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம் (Hypersensitivity), தன்னுடல் தாக்குநோய், நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency)
குறிப்பிடத்தக்கச் சோதனைகள்நோயெதிர்ப்புப் படுவமாக்குதல் ([Immunoprecipitation), நோயெதிர்ப்புச் சோதனை (Immunoassay), திரட்சியாக்கல் (Agglutination), ஊனீரியல் (serology), நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (ELISA)
நிபுணர்நோயெதிர்ப்பியலாளர்

நோயெதிர்ப்பியல் (Immunology) என்பது அனைத்து உயிரினங்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக் குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்[1]. உடல் நலமுள்ள, நோய்வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், தன்னுடல் தாக்குநோய்கள், நோயெதிர்ப்புக் குறைபாடு, உறுப்புமாற்ற நிராகரிப்பு ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், வேதிப்பொருள், உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் ஆய்வுக்கூடச் சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். அறிவியலின் பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

"நோயெதிர்ப்பாற்றல்" கருத்துவாக்கம் உருவாகும் முன்னரே பல மருத்துவர்கள் இத்தகுச் செயற்பாடுகளைக் கொண்ட உடல் உறுப்புகளின் பண்புகளை விவரித்திருந்தார்கள். இவை பின்னாளில் நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் கூறுகளாக நிறுவப்பட்டன. தைமசும், எலும்பு மச்சையும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையின் முதன்மையான உறுப்புகளாகும். இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகளாக மண்ணீரல், உள்நாக்கு, நிணநீர்க் குழாய்கள், நிணநீர் முடிச்சுகள், அடினாய்டு சுரப்பிகள், தோல், கல்லீரல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தேவைப்படின், நோயெதிர்ப்பாற்றல் அமைப்பு உறுப்புகளான தைமசு, மண்ணீரல், எலும்பு மச்சையின் ஒரு பகுதி, நிணநீர் முடிச்சுகள், பிற இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகள் ஆகியவற்றை நோயாளிகள் உயிருடன் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்துச் சோதனைகளுக்கு உட்படுத்த முடியும். நோயெதிர்ப்பு அமைப்பின் பல்வேறு கூறுகளும் உயிரணுக்களைச் சார்ந்தவையாக உள்ளதால், எந்தவொரு குறிப்பிட்ட உடலுறுப்புகளுடனும் இவைச் சேர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை. உடல் முழுவதும் பல்வேறு திசுக்களில் இத்தகு உயிரணுக்கள் பொதிந்தும், சுற்றி வந்தும் செயற்படுகின்றன.

மரபார்ந்த நோயெதிர்ப்பியல்

[தொகு]

மரபார்ந்த நோயெதிர்ப்பியலானது கொள்ளை நோயியல் (நோய்ப்பரவு இயல்), மருத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இது உடலமைப்பு, நோய்க்கிருமிகள், நோயெதிர்ப்பு ஆகியவற்றிற்கானத் தொடர்புகளைக் குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. ஏதென்சு நகரில் கிமு 430 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொள்ளைநோய் (பிளேக்கு) குறித்த ஆவணங்களே நோயெதிர்ப்பாற்றல் குறித்த முதல் எழுத்து வடிவப் பதிவுகளாகும்.

மருத்துவ நோயெதிர்ப்பியல்

[தொகு]

மருத்துவ நோயெதிர்ப்பியல் என்பது நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் செயற்பிறழ்வுகளால் உருவாகும் நோய்களைக் குறித்துப் படிப்பதைக் குறிக்கும். பிற அமைப்புகளின் நோயியலிலும், நோய்க் கூறுகளிலும் நோயெதிர்ப்பு வினைகள் பங்கேற்கும் பிணிகளைக் குறித்து அறிவதையும் மருத்துவ நோயெதிர்ப்பியல் துறை உள்ளடக்கியதாகும்[2].

உருவாக்க நோயெதிர்ப்பியல்

[தொகு]
ஒற்றைக் குழியங்கள்

எதிர்ப்பிகளுக்கெதிராக எதிர்த்துச் செயல்படும் உடலின் செயல்வல்லமை ஒரு மனிதரின் வயது, எதிர்ப்பி வகை, தாய்வழிக் காரணிகள், உடலின் எப்பகுதியில் எதிர்ப்பியானது செல்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொறுத்து அமைகிறது[3]. பிறந்து நான்கு வாரங்களாகாத குழந்தைகள் (பச்சைக் குழந்தைகள்) உடலியக்க நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்களாக உள்ளார்கள். ஏனெனில், இவர்களுடைய உள்ளார்ந்த மற்றும் மாறும் நோயெதிர்ப்புத் திறன்கள் பெருமளவு இயற்கையாக ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு புரத எதிர்ப்பிகளுக்கெதிராக எதிர்ப்பினை உருவாக்குகிறது. ஆனால், கிளைக்கோப்புரதங்கள், பல்கூட்டுச் சர்க்கரை எதிர்ப்பிகளுக்கெதிராக இது திறமையாகச் செயற்படுவதில்லை.

நோயெதிர்ப்பியவேதியியல்

[தொகு]
எதிர்ப்பான்-எதிர்ப்பிக் கூட்டுத்தொகுதி
எதிர்ப்பான்-எதிர்ப்பிக் கூட்டுத்தொகுதி

நோயெதிர்ப்பியவேதியியல் என்பது நோயெதிர்ப்பு அமைப்பின் அடிப்படையான மூலக்கூற்று இயங்குமுறைகளைக் குறித்து பயிலும் வேதியியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு எதிர்ப்பான்களின் பண்புகள், எதிர்ப்பிகள், எதிர்ப்பான்கள் - எதிர்ப்பிகளுக்கிடையேயான ஊடாடல்கள் குறித்து அறிந்து கொள்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது[4].

நோயெதிர்ப்பியச் சிகிச்சை

[தொகு]

நோயெதிர்ப்பியத் தொகுதியின் கூறுகளைப் பயன்படுத்தி நோய்களுக்கு (அ) பிறழ்வினைகளுக்குச் சிகிச்சையளிப்பதை நோயெதிர்ப்பியச் சிகிச்சை என்கிறோம். இவ்விதமான சிகிச்சைகள் முதன்மையாக புற்றுநோயைக் குணப்படுத்த கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சைகளுடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படுகிறது. என்றாலும், நோயெதிர்ப்பு ஒடுக்கப்பட்ட நோயாளிகளிலும் (எடுத்துகாட்டாக, எயிட்சு நோயாளிகள்), பிற நோயெதிர்ப்பு குறைந்த நோயாளிகள், தன்னெதிர்ப்பு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களிலும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்

[தொகு]
நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா)

எதிர்ப்பிகள் -எதிர்ப்பான்களுக்கிடையேயானப் பிணைப்பின் தனித்தன்மைப் பல்வேறு அறுதியீட்டுப் பரிசோதனைகளில் (உயிர்)வேதிப்பொருட்களைக் கண்டறிய மிக உபயோகமானதாக உள்ளது. கண்டறிய வேண்டிய எதிர்ப்பிகளுக்கெதிரான எதிர்ப்பான்களை கதிரியக்கக் குறியீடு, ஒளிரும் குறியீடு அல்லது வேதி வினைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கும் நொதி ஆகியவற்றைக் கொண்டுப் பிணைத்து பரிசோதனைகளில் ஆய்விகளாக (probes) உபயோகப்படுத்த முடியும். என்றாலும், சில எதிர்ப்பிகளிலுள்ள புரத (அமினோ அமில) ஒற்றுமைகள் தவறான நேர்முறைகளைத் (முடிவுகளைத்) தரலாம். எதிர்ப்பான்களின் பிற சம்பந்தமில்லாத எதிர்ப்பிகளுடன் குறுக்குப் பிணையும் தன்மை (cross-reactivity) இத்தகுப் பரிசோதனைகளில் பிறழ்வினைகளை (தவறுகளை) உருவாக்கலாம்[5].

இனப்பெருக்க நோயெதிர்ப்பியல்

[தொகு]

நோயெதிர்ப்பியல் துறையின் இப்பிரிவு கருப்பம், கருத்தரிப்பு போன்ற இனப்பெருக்க நிகழ்முறைகளில் நிகழும் நோயெதிர்ப்பிய ஊடாடல்களைக் குறித்து விளக்குகின்றது. கருத்தரிப்பு மருத்துவமனைகளில் முன்சூல்வலிப்பு (pre-eclampsia), குறைப்பிரசவங்கள், அடிக்கடி நிகழும் கருச்சிதைவுகள் குறித்து விளக்கவும் இக்கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

புற்றுநோயெதிர்ப்பியல்

[தொகு]

நோயெதிர்ப்பியல் அமைப்பு, புற்றுநோய் உயிரணுக்களிடையே நிகழும் ஊடாடல்களைக் குறித்துப் பயில்வது புற்றுநோயினைக் கண்டறியும் புதிய நோய் நிர்ணய சோதனைகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை உருவாக்கி, தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிய, சிகிச்சையளிக்க வழிக்கோலுகிறது.

என்புநோயெதிர்ப்பியல்

[தொகு]

எலும்புத் தொகுதி, நோயெதிர்ப்புத் தொகுதிகளுக்கிடையேயான இடைமுகப்பில் நிகழ்பவற்றைக் குறித்து அண்மைக் காலமாகப் ஆராயப்பட்டு வரும்[6][7] என்புநோயெதிர்ப்பு அமைப்பைக்[8][9] குறித்து பயில்வது என்புநோயெதிர்ப்பியலாகும்.

நோயெதிர்ப்பியலாளர்

[தொகு]

நோயெதிர்ப்பியலாளர்கள் (Immunologists) உயிரினங்களின் நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்து (மனித நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்தும்) ஆராயும் அறிவியலாளர்களாவர். ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நோயெதிர்ப்பியலாளர்கள் (Research Immunologists) நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் அதன் இயங்கு முறைகள் குறித்த உயிரிமருத்துவ ஆய்வினை மேற்கொள்ளுபவர்கள். மருத்துவ நோயெதிர்ப்பியலாளர்கள் (Medical Immunologists) நோயெதிர்ப்பு அமைப்பில் சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுடன் நேரடியாக பணிபுரிபவர்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Janeway's Immunobiology textbook Searchable free online version at the National Center for Biotechnology Information
  2. Denman A.M. (1981). "What is clinical immunology?". J Clin Pathol 34: 277-286. https://archive.org/details/sim_journal-of-clinical-pathology_1981-03_34_3/page/277. 
  3. Goldsby RA, Kindt TK, Osborne BA and Kuby J (2003). Immunology (5th ed.). San Francisco: W.H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-4947-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Immunochemistry, Gold Book.
  5. Miller JJ, Valdes R (February 1991). "Approaches to minimizing interference by cross-reacting molecules in immunoassays". Clin. Chem. 37 (2): 144–53. பப்மெட்:1993317. https://archive.org/details/sim_clinical-chemistry_1991-02_37_2/page/144. 
  6. Arron JR, Choi Y (November 2000). "Bone versus immune system". Nature 408 (6812): 535–536. doi:10.1038/35046196. பப்மெட்:11117729. 
  7. Walsh MC, Kim N, Kadono Y, et al (2006). "Osteoimmunology: interplay between the immune system and bone metabolism". Annu. Rev. Immunol. 24: 33 –63. doi:10.1146/annurev.immunol.24.021605.090646. பப்மெட்:16551243. 
  8. Lorenzo J, Horowitz M, Choi Y (June 2008). "Osteoimmunology: interactions of the bone and immune system". Endocr Rev 29 (4): 403–440. doi:10.1210/er.2007-0038. பப்மெட்:18451259. 
  9. Lorenzo J, Choi Y (2005). "Osteoimmunology". Immunol. Rev. 208: 5–6. doi:10.1111/j.0105-2896.2005.00340.x. பப்மெட்:16313336. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயெதிர்ப்பியல்&oldid=3520926" இலிருந்து மீள்விக்கப்பட்டது