உள்ளடக்கத்துக்குச் செல்

அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா)
பக்கவாட்டப் பரவுச் சோதனை

அறுதியீட்டு நோயெதிர்ப்பியல் (Diagnostic immunology; Immunodiagnostics) என்பது முதன்மையாக எதிர்ப்பி-எதிர்ப்பான் வினைகளை அடிப்படையாகக் கொண்டுப் பிணிகளைக் கண்டறியும் செயல்முறையியலாகும். நோயெதிர்ப்பியலை நோயறியும் செயல்முறைகளுக்கு உபயோகப்படுத்தும் கருத்தாக்கம் ஊனீர் இன்சுலின் அளவுகளைக் கண்டறியும் சோதனை மூலம் 1960 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது[1]. பின்பு, இரண்டாவதாக 1970 ஆம் ஆண்டில் தைராக்சின் சோதனை இம்முறையில் உருவாக்கப்பட்டது[2].

மிகக் குறைந்த அளவுகளில் உள்ள (உயிர்)வேதிப்பொருட்களைக் கண்டறிய இத்தகு நோயெதிர்ப்பியல் அறுதியீட்டு முறைகள் பெரிதும் பயன்படுகின்றன. கண்டறிய வேண்டிய எதிர்ப்பிகளுக்கெதிரான எதிர்ப்பான்களை கதிரியக்கக் குறியீடு, ஒளிரும் குறியீடு அல்லது வேதி வினைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கும் நொதி ஆகியவற்றைக் கொண்டுப் பிணைத்து பரிசோதனைகளில் ஆய்விகளாக (probes) உபயோகப்படுத்த முடியும். கர்ப்பச் சோதனைகள், நோயெதிர்ப்பிய படிவுகள் (immunoblots), நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (ELISA), நோயெதிர்ப்புத் திசுவேதியியல் (immunohistochemistry) ஆகியவற்றில் இத்தகுத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. இச்சோதனைகளின் அறுதியிடும் வேகம், துல்லியம், எளிமை ஆகியப் பண்புகள் நோயறிதல், தீநுண்மங்களைக் கண்டறிதல், சட்டவிரோதமான மருந்துகளைச் (போதைப் பொருட்கள்) சோதித்தல், ஏற்புடைய இரத்தப் பிரிவுகளை ஆராய்தல் போன்றவற்றில் விரைவுச் சோதனை முறைகளை உருவாக்க, மேம்படுத்த உதவுகின்றன. என்றாலும், சில எதிர்ப்பிகளிலுள்ள புரத (அமினோ அமில) ஒற்றுமைகள் தவறான நேர்முறைகளைத் (முடிவுகளைத்) தரலாம். எதிர்ப்பான்களின் பிற சம்பந்தமில்லாத எதிர்ப்பிகளுடன் குறுக்குப் பிணையும் தன்மை (cross-reactivity) இத்தகுப் பரிசோதனைகளில் பிறழ்வினைகளை (தவறுகளை) உருவாக்கலாம்[3].

தற்பொழுது நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா), பக்கவாட்டப் பரவுச் சோதனை ஆகிய இரண்டும் முதன்மையான உபயோகப்படுத்தப்படும் அறுதியீட்டு நோயெதிர்ப்பியல் சோதனை வடிவங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. RS Yalow and SA Berson (1960). "Immunoassay of Endogenous Plasma Insulin in Man". Journal of Clinical Investigation 39 (7): 1157–1175.. https://archive.org/details/sim_journal-of-clinical-investigation_1960-07_39_7/page/1157. 
  2. RJ Ekins (1970). "Radioimmunoassay of Thyroid and Steroid Hormones". British Journal of Radiology 43 (515): 828. 
  3. Miller JJ, Valdes R (February 1991). "Approaches to minimizing interference by cross-reacting molecules in immunoassays". Clin. Chem. 37 (2): 144–53. பப்மெட்:1993317. https://archive.org/details/sim_clinical-chemistry_1991-02_37_2/page/144.