உள்ளடக்கத்துக்குச் செல்

முடவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடவியல்
படத்தில் கழுத்து எலும்பு முறிவு ICD10 =
MeSHD019637

முடவியல் (orthopedics)அல்லது முடநீக்கியல் துறை, உடல் ஊனங்களைத் திருத்தும் இயலாகும். 1741-இல் பேராசிரியர் நிகோலாய் ஆண்ட்ரோ , (ஆர்த்தோஸ்', ‘பீடிஆஸ்' எனும் இரு கிரேக்கச் சொற்களைக் கொண்டு, குழந்தைகளின் ஊனங்களை நேர் செய்தல்[1]) என்னும் பொருள்படும் 'ஆர்த்தோபீடிக்ஸ்' ( Orthopedics or Orthopedic surgery) என்ற சொல்லை உருவாக்கினார்.

மருத்துவத் துறையில் உடல் ஊனங்களைப் பற்றிய பிரிவை முடவியல் என்றும் முடநீக்கியல் என்றும் கூறலாம். தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில், பண்டைய முடச்சிகிச்சை முறைகளைக் கையாளுபவர்கள், முடவைத்தியர் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்காலத்தில் முடநீக்கியல் அறுவைத் துறை, குழந்தைகள், பெரியோர் ஆகிய எல்லோருடைய ஊனங்களையும் திருத்துவதோடு, ஊனமுண்டாக்கும் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை செய்யும் துறையாகவும் விளங்குகிறது. எலும்புகளின் அமைப்பையும் சிறப்புத் தன்மைகளையும் அறிவுறுத்துவது எலும்பியலாகும்.

Hugh Owen Thomas, நவீன முடவியலின் முன்னோடி[2]

ஊனங்களின் காரணங்கள்

[தொகு]

உடற்குறைகள் பொதுவாகப் பிறவிக்குறைகள் என்றும், பிறந்த பின் உண்டானவை என்றும் பிரிக்கப்படும்.

பிறவிக் குறைகள்

[தொகு]

இவற்றின் சரியான காரணம் இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை. சில மரபுவழி உண்டான பரம்பரைக் கோளாறுகள், மற்றவை கர்ப்பப் பையில் வளரும் சிசு, பருப்பொருள், இரசாயனம் அல்லது இதர காயமுண்டாக்கும் காரணங்களால் தாக்கப்படுவதால் ஏற்படலாம். சில சான்றுகள்:

  1. பாதத் திருப்பம்
  2. பிறவியில் இடுப்பு மூட்டுப் பிசகுதல்
  3. பிறவியில் முழங்கால் வளைதல்

பிறந்த பின்னர் நேரும் குறைகள் (இருக்கைநிலைக் குறைகள் Postural defects) : இவை வழக்கமாகத் தவறான நிலையில் உடலை இருந்துவதால் தோன்றுவன. தன் முயற்சியால் இவற்றைச் சரி செய்யமுடியும். இருக்கை வழிக்கூனல் (Postural Kyphosis), இருக்கை வழி முதுகின் பக்க வளைவு (Postural Scoliosis), இருக்கை வழிச்சப்பைப் பாதம் (Flat Foot) ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

காயங்களால் ஏற்படும் அங்கக் கோணல்கள்

[தொகு]
  1. எலும்பில் முறிவு - தவறாக இணைந்த எலும்பு முறிவுகள்
  2. மூட்டுகள் அடிபடல் - சரிசெய்யப்படாத மூட்டுக் காயங்கள்
  3. நரம்புகள் அடிபடல் : வளைந்த கை - அல்னார் (Unar) மீடியன் (Median) நரம்புகள். தொங்கும் மணிக்கட்டு - ரேடியல் (Radial) நரம்பு, தொங்கும் பாதம் - வெளிப்புறப் பெரொனியல் (Peroneal) நரம்பு.
  4. தசைக் காயங்கள் - தீப்புண்ணால் தோன்றும் தசைச் சுருக்கங்கள், காயத்திற்குப் பின் தசைகளில் கால்சியப் படிவு.

வாத வழி ஊனங்கள்

[தொகு]

இவை மேல் இயக்க நரம்பணு, கீழ் இயக்க நரம்பணு அல்லது புற நரம்பு களில் ஏற்படும் கோளாறுகளால் தோன்றுவன ஆகும். எடுத்துக்காட்டாக, முருக்கு வாதங்கள் (மேல் நரம்பணுக் கோளாறு) : குதி ஏற்றம் (Equinus) ஒரு நல்ல சான்று ஆகும். தொய்வு வாதங்கள் (கீழ் நரம்பணுக் கோளாறு) : இளம்பிள்ளை வாதம் இவ்வகை ஊனக்குறைகளை உண்டாக்கும். தொழுநோய் (புற நரம்புகளின் கோளாறு) : இந்தியாவில் நரம்பு வகைத் தொழுநோய் கை, கால்களின் ஊனங்களை உண்டாக்கும் முக்கிய நோயாகும்.

மூட்டு நோய்கள்

[தொகு]

நம் நாட்டில் முடமாக்கும் முக்கியக் காரணங்களுள், எலும்புருக்கி மூட்டுக் காசநோய் (Tuberculosis of Bones and Joints) மிக முக்கியமானதாகும். எலும்புகளின் பரவலான நோய்கள் என பின்வருவனவற்றைக் கூறலாம். சில வளர்சிதை (Metabolic) மாற்றக் குறைபாடுகளும், சுரப்பி நீர்க் குறைபாடுகளும் எலும்பு ஊனங்களை உண்டாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, உயிர்ச்சத்துக் குறை நோய் (Ricket) வைட்டமின் 'டி' குறைவாலுண்டாகிறது. பாராதைராய்டு அதிகச் சுரப்பு, முதுமைசார் எலும்பரிப்பினாலும் எலும்புகள் வளைந்து ஊனங்கள் ஏற்படுகின்றன.

ஊனங்களின் தடுப்பு முறை

[தொகு]

ஊனங்கள் தடுப்புமுறை மிகவும் முக்கியம், ஊனம் இருப்பின், பிற நோயினால் காரணங்கள் ஆரம்பத்திலேயே அறியப்பட்டுச் சரி செய்யப்பட்டால், நோய்வழி வந்த பல ஊனங்களைத் தடுக்கலாம். ரிக்கெட்ஸ், இளம் பிள்ளைவாதம் (Polio) போன்ற நோய்களில் நோயின் உக்கிரமான நிலையில் சிம்புகளைச் (Splints) சரியாக உபயோகித்தால் கோணல்களை எளிதில் தடுக்கலாம்.

கதிர் மருத்துவம்(Radiography)-முழங்காலில் ஏற்பட்ட காயங்களை அறிதல்
உடல் பாகங்களைச் செயற்கையாக அமைத்தல்
அறுவை மருத்துவம் நடந்த பின்பான எக்சுகதிர் படம்

1999 முதல் 2003 வரை மருத்துவக் குழாம் மருத்துவர்களால் 25 மேற்பட்ட சாதரண நடைமுறை வழிமுறைகள், மனித முடவியலை நீக்கப் பின்பற்றப்படுகின்றன.[3]

ஊனங்களில் திருத்த முறைகள்

[தொகு]

அறுவை இல்லாமல் திருத்தும் முறை முதலில் கையாளப்பட வேண்டும். சிம்புகள் முடநீக்குச் சாதனங்கள் உபயோகித்தலாலும், இயன்முறை மருத்துவத்தாலும் பல உடல் ஊனங்கள் திருத்தப்படுகின்ற

உணர்வகற்றி மருத்துவர் சரிசெய்தல்

[தொகு]

சில திண்மை பெறாத வளைவுகளை - மருத்துவர்கள் உணர்வகற்றி நேர்நிலையில் சுட்டுவார்கள். மேற்கூறிய அறுவை அற்ற முறைகள் பலன் தராதபோது, அறுவை முறைகள் கையாளப்பட வேண்டும்.

மென் திசுக்களின் அறுவைச் சிகிச்சை

[தொகு]

இளம் வயதினருக்கு இம்முறை ஏற்றது. நாட்பட்ட குறைகளில் எலும்பு மாற்றங்கள் இருப்பதால் எலும்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஊனமுற்றோர் வாழ்க்கைப் புனரமைப்பு

[தொகு]

உடற்குறையுடைய குழந்தைகள் உடற்குறையுடன், மனமுதிர்ச்சியும் குறைந்து சமுதாயத்தில் பின் தங்கியவர்களாய்ப் போகின்றனர். பல வருடங்களுக்கு இடைவிடாத மருத்துவக் கண்காணிப்பு அவர்களுக்கு அவசியம். இந்நாட்களில் ஊனமுற்ற குழந்தைகளுக்குப் படிப்பு வசதி தரப்படவேண்டும். பலவிதக் குறைகள் முழுவதும் நீக்கப்பட்டு இவர்கள் நல்ல நிலையடைய முடியும். சில குறைகள் அறுவைச் சிகிச்சை, முடநீக்குச் சாதனங்கள், பயிற்சிச் சிகிச்சை ஆகியவற்றால் முன்னேற்றப்பட்டு அவர்கள் சுயேச்சை நிலை பெற இயலும். மிகவும் உடல் ஊனமானவர்கள் பொருளாதாரச் சுயேச்சை பெற்றுச் சமுதாயத்தில் ஏற்கப்பட்ட தனி நிறுவனங்களில் விரும்பிய பயிற்சியும் பாதுகாப்பான சூழலில் வேலையும் தரப்பட வேண்டும்.

இடப்பெயர்ச்சி மண்டலம்

[தொகு]

மனித உடலின் நல்வாழ்வு செயல்பாடுகளில் இடப்பெயர்ச்சி(Locomotor System)முக்கியமான தொன்றாகும். எலும்பு, தசை, நரம்பு ஆகிய மூன்று திசு மண்டலங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான், நம் உடல் இடப்பெயர்ச்சிப் பணிகளைச் சரிவரச் செய்ய முடிகிறது. இந்த மூன்று திசுமண்டலங்களும் ஒரு பணியை ஒருங்கிணைந்து செய்வதால் இவற்றைக் கூட்டாக இடப்பெயர்ச்சி மண்டலம் என்னும் பெயரால் அழைக்கலாம். இதிலுள்ள மூன்று திசுக்களில் ஏதேனும் ஒன்றில் நோய் ஏற்பட்டாலும், அதனால் மற்றத் திசுக்களும் பாதிக்கப்பட்டு இடப்பெயர்ச்சிக்கு இடையூறு செய்யும் நோய்கள் உருவாகி, மனிதனை முடமாக்குகின்றன. இத்துடன், மூளையில் ஏற்படும் சில நோய்கள், நரம்பு மண்டலத்தைப் பாதித்து அதனால் கால், கைகளில் மூளைவாதம் போன்ற (Cerebral Palsy) வாதங்களை ஏற்படுத்தி ஊனத்தை விளைவிக்கின்றன. ஆகவே முடவியல் நோய்களை ஆராயும்போது, இடப்பெயர்ச்சி மண்டலத்தின் எல்லாப் பகுதிகளின் நோய்களையும் ஆராய்ந்து விளக்குவது அவசியமாகின்றது.

நோய்க்குறிகள்

[தொகு]

நம் உடலில் சாதாரணமாகத் திசுக்களில் 5 வகை மாறுதல்களின் அடிப்படையில் நோய்க்குறிகள் உண்டாகின்றன :

  1. பிறவிக்குறை நோய்கள்
  2. அழற்சி நோய்கள்
  3. காயங்கள் வழி நோய்கள்
  4. தேய்மான (அல்லது நசிவு) நோய்கள்
  5. புற்று நோய்கள்

பெயர்ச்சி மண்டலத்திலும், எலும்பு, தசைநார்த் திசுக்கள் ஒவ்வொன்றிலும் மேற்கண்ட ஐந்து வகை நோய்களைக் காண்கின்றோம். இவற்றுள் ஒரு திசுவின் நோய்கள் மற்றத் திசுக்களையும் பாதித்து விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த அடிப்படையில் காலிலோ, கையிலோ, முதுகெலும்பிலோ உண்டாகும் நோய்கள் இடப்பெயர்ச்சி மூலம் பாதித்து ஊனங்களை உண்டாக்குகின்றன, ஆகவே இவற்றை இடப்பெயர்ச்சி நோய்கள் (Locomotor Diseases) என்றும் குறிப்பிடுகின்றோம். இந்த வகை நோய்கள் பின்வரும் பகுதிகளில், எலும்பு நோய்கள், மூட்டு நோய்கள், தசை நோய்கள், நரம்பியல் நோய்கள் எனும் தலைப்புகளில் விவரிக்கப்படும்.

எலும்பு மண்டலம்

[தொகு]

மனித உடலில் உள்ள பல திசு மண்டலங்களில் எலும்பு மண்டலம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. பெரும்பாலும் தசை, கொழுப்பு மற்றும் மென் திசுக்களாலான உள் உறுப்புகளைக் கொண்ட மனித உடலுக்கு, ஒரு நிமிர்ந்துள்ள வடிவத்தைக் கொடுப்பது அடிப்படையிலுள்ள எலும்புக் கோவையே. மேலும் மூளை, மார்புக்குள் உள்ள இதயம், நுரையீரல், வயிற்றிலும் அடி வயிற்றிலுமுள்ள உள் உறுப்புகளுக்கும் பாதுகாப்பாக எலும்புக்கூடுகள் இருக்கின்றன.

கால் எலும்புகள்

[தொகு]

உடலின் எடையைத் தாங்கவும், உடலை இடப்பெயர்ச்சி செய்வதற்கும் வசதியாகக் காலின் நீண்ட எலும்புகள் நல்ல பலமுள்ளனவாக உள்ளன. அத்துடன் எலும்புகளின் எடையும் அதிகமாக இல்லாமல் குழாய் வடிவத்தில் அமைந்துள்ளன. (படம் 1.2) புரதச் சத்தினாலான நார்த்திசு அடிப்படையில், சுண்ணாம்புச் சத்தினால் வலுவாக்கப்பட்டுச் சற்று நெகிழ்வுத் தன்மையும் (Elasticity) பெற்று எலும்புகள் இயங்குகின்றன.நீண்ட எலும்பின் நடுவில் தண்டுப்பாகமும் (Shaft) இரு முனைகளிலும் வளர்ச்சிக் கணுக்களும், தகடுகளும் (Growth Plates) உள்ளன. எலும்பின் முனைகள் இணைந்து மூட்டுகளாக இயங்குகின்றன.

தட்டை எலும்புகள்

[தொகு]

இவை தலையிலும், மார்பிலும், கீழ் இடுப்பிலும் (Pelvis - கூபகம்), மூளை, இதயம், நுரையீரல் மற்ற உறுப்புகளையும் பாதுகாக்கும் வகையில் பெட்டக முறையில் அமைந்துள்ளன. இவற்றிலுள்ள எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow) இரத்த அணுக்கள் உருவாகின்றன. இவை முதிர்ந்த நிலையிலும், வளர்ச்சி முன்னிலையிலும் காணப்படுகின்றன.

ஒழுங்கற்ற உருவ எலும்புகள்

[தொகு]

காலில் கணுக்கால் பாதம் போன்ற இடங்களிலும், கையில் மணிக்கட்டிலும் இந்த வித எலும்புகள் பலவிதச் சிறிய மூட்டுகளை ஏற்படுத்திப் பலவித அசைவுகளுக்கு உதவுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bois-Regard, Nicolas Andry de; Library, Classics of Medicine (2 November 1980). "Orthopædia, or, The art of correcting and preventing deformities in children". Classics of Medicine Library – via Google Books.
  2. "From Bonesetters to Orthopaedic Surgeons: A History of the Specialty of Orthopaedics" (PDF). Archived from the original (PDF) on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  3. Garret Jr., William E (2006). "American Board of Orthopaedic Surgery Practice of the Orthopaedic Surgeon: Part-II, Certification Examination Case Mix". The Journal of Bone and Joint Surgery (Needham, MA) 88 (3): 660–667. doi:10.2106/JBJS.E.01208. பப்மெட்:16510834. https://www.abos.org/media/289/ABOS%20Board%20data.pdf. பார்த்த நாள்: November 30, 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடவியல்&oldid=3567970" இலிருந்து மீள்விக்கப்பட்டது