முதியோர் மருத்துவம்
ஒரு வயதான பெண்மணி பராமரிப்பு இல்லத்தில் பிறந்தநாள் அணிச்சலைப் பெறுகிறார் | |
குறிப்பிடத்தக்க நோய்கள் | மறதிநோய், மூட்டழற்சி, எலும்புப்புரை, முதுமை மூட்டழற்சி, முடக்கு வாதம், நடுக்குவாதம், தமனிக்கூழ்மைத் தடிப்பு, இதயக் குழலிய நோய், உயர் இரத்த அழுத்தம் |
---|---|
நிபுணர் | முதியோர் மருத்துவர் |
முதியோர் மருத்துவம் (Geriatrics, geriatric medicine[1]) என்பது முதியோர்களின் தனித்துவமான சுகாதாரத் தேவைகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவாகும்[2]. இம் மருத்துவம், முதியோர்களில் நோயைத் தடுப்பதன் மூலமும், நோயைக்கண்டறிந்து, சிகிச்சையளிப்பதன் மூலமும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது[3]. முதியோர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற முதியோர் மருத்துவர் பராமரிப்பில் இருக்க வரையறுக்கப்பட்ட வயது என்று எதுவும் இல்லை. மாறாக, இத்தகைய முடிவு தனிப்பட்ட நோயாளியின் தேவை மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பராமரிப்புகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்படுகிறது. பல நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அல்லது அன்றாட வாழ்க்கைத் தரத்தை அச்சுறுத்தும்படியான, வயது தொடர்புடைய சிக்கல்களைக் கொண்டவர்களுக்கு இத்தகைய கவனிப்பு பயனளிக்கும். குடும்பத்தினருக்குப் பராமரிப்புப் பொறுப்புகள் பெருகி மன அழுத்தமாகவோ அல்லது மருத்துவ ரீதியாகச் சிக்கலானதாகவோ இருந்தால் முதியோர் பராமரிப்பு தேவை என்று கருதலாம்[4].
முதியோர் மருத்துவம், முதுமையியல் (Gerontology) துறையிலிருந்து சற்று மாறுபட்டதாகும். முதுமையியல் என்பது முதுமையடைதல் குறித்த பன்முக ஆய்வு ஆகும், இது (காயம், நோய், சுற்றுச்சூழல் அபாயங்கள் அல்லது நடத்தை ஆபத்துக் காரணிகள் இல்லாத) காலப்போக்கில் உடல் உறுப்புகளின் செயற்பாடுகளில் ஏற்படும் சரிவு என வரையறுக்கப்படுகிறது[5].
ஊட்டச்சத்து குறைபாடு
[தொகு]மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதிய நோயாளிகளில் 12 முதல் 50% வரை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான ஊட்டச்சத்து காரணிகளால் பாதிப்பு அடைகிறார்கள். ஊட்டச்சத்து நிலைமை திறமையான செவிலியர் வசதிகள் கொண்ட நீண்டகாலப் பராமரிப்பு மையங்களில் வாழும் 23 முதல் 50% முதிய நோயாளிகளையும் பாதிக்கிறது[6]. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது உடலியங்கியல், நோயியல், உளவியல் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளின் கலவையாக உள்ளதால், இதனைச் சரி செய்யப் பயனுள்ள செயல் முறைமைகளை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது[7]. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு உணவுகளை உட்கொள்ளும்போது வாசனை மற்றும் சுவை குறைவது, ஊட்டச்சத்து உணவு உட்கொள்ளலை பாதிக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவது ஆகியவற்றை உடலியல் காரணிகளாகக் கூறலாம். அதே சமயம், தற்செயலாக எடை இழப்பு நோய்க்குறியியல் காரணிகளால் ஏற்படலாம். ஊட்டச்சத்து குறைபாடு அறிவாற்றல் செயற்பாடுகளைப் பாதிக்கும் நீடித்த நோய்கள், செரிமானத்தை நேரடியாகப் பாதிக்கும் நிலைமைகள் (உதாரணமாக, மோசமான பற்கள், இரைப்பை குடல் புற்றுநோய்கள், இரைப்பை உணவுக்குழாய் பின்னொழுக்கு நோய்) அல்லது உணவு கட்டுப்பாடுகள் (இதயச் செயலிழப்பு, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம்) காரணமாகவும் ஏற்படலாம். இதற்கு உளப் பிறழ்ச்சி, பசியின்மை மற்றும் துக்கம் உள்ளிட்ட நிலைமைகள் உளவியல் காரணிகளாக இருக்கக்கூடும் [6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marks JW (3 June 2021). "Medical Definition of Geriatric medicine". MedicineNet.
- ↑ "Geriatrics separation from internal medicine". University of Minnesota. Archived from the original on 14 January 2009.
- ↑ "Geriatric Medicine Specialty Description". American Medical Association. பார்க்கப்பட்ட நாள் 5 September 2020.
- ↑ "About Geriatrics | American Geriatrics Society". www.americangeriatrics.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
- ↑ "What is Gerontology?". www.geron.org. பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
- ↑ 6.0 6.1 Evans, Carol (2005). "Malnutrition in the Elderly: A Multifactorial Failure to Thrive". The Permanente Journal 9 (3): 38–41. doi:10.7812/TPP/05-056. பன்னாட்டுத் தர தொடர் எண்:1552-5767. பப்மெட்:22811627.
- ↑ Evans, Carol (Summer 2005). "Malnutrition in the Elderly: A Multifactorial Failure to Thrive" (in en). The Permanente Journal 9 (3): 38–41. doi:10.7812/tpp/05-056. பப்மெட்:22811627.