உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர் மருத்துவம் (Radiation therapy) என்பது அயனியாக்கும் கதிரைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மருத்துவ முறையாகும். இது பொதுவாக புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ முறையில் ஒரு பகுதியாகும். எக்சு-கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. புற்றுநோய் கட்டியில் உள்ள உயிரணுக்களைக் கொல்வதனால் அல்லது கட்டுப்படுத்துவதால், இப்பண்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுகின்றது. மேலும் இது அறுவை மருத்துவம் நடக்கும் போதே, முற்றும் அகற்றப்படாத புற்று அணுக்களுக்கு கதிர்வீச்சின் மூலம் மருத்துவம் மேற்கொள்ளும் முறையென்றும் கூறலாம்.

வகைகள்[தொகு]

அறுவைக்கு முன்[தொகு]

அறுவைக்கு முன் கதிர்மருத்துவம் (Preoperative RT ) என்பது சில சிக்கலான அறுவை மருத்துவத்தின் போது , புற்றுநோய் பெரிதாக இருப்பதாலோ அல்லது புற்று நோய்கண்ட திசுக்களை மிக அடுத்து முக்கியமான உறுப்புகள் இருப்பதாலோ அறுவை சிகிச்சை மேற்கொள்வது கடினமாக உள்ளது. இந்நிலையினை எளிதாக்க அறுவைக்கு முன் கதிர் வீச்சின் மூலம் புற்றின் பருமனளவை சிறிதாக்க அல்லது குறைக்க முடியும். புற்றின் பருமனளவு குறைந்த நிலையில் அறுவை மருத்துவர்களால் எளிதாக புற்றினை அகற்றமுடியும். இதுவே அறுவை மருத்துவத்திற்கு முன் கதிர் மருத்துவம் எனப்படுகிறது.[1][2]

அறுவைக்குப் பின்[தொகு]

அறுவை மருத்துவத்திற்கு பின் கதிர் மருத்துவம்(Postoperative RT) என்பது புற்று நோயினை அறுவை மூலம்அகற்றிய பின்னும் மருத்துவர் சில புற்று அணுக்கள் அகற்றப்படாமல் இருக்கக் கூடும் என்று சந்தேகப்படும் போது ,அவ்வணுக்களை முற்றிலும் அழிக்க ,அறுவைக்குப் பின் அந்த இடத்தில் கதிர் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் விடுபட்ட சில புற்று அணுக்களும் அகற்றப் படுகின்றன.இம்முறையே அறுவைக்கு பின் கதிர்மருத்துவம் எனப்படுகிறது.[3][4][5]

கதிர்மருத்துவத்தில் 5எச்[தொகு]

கதிர்மருத்துவத்தின் போக்கை மாற்றும் ஐந்து காரணிகள்:

 1. உயர் அழுத்த ஆக்சிஜன் (Hyperbaric oxygen)
 2. உயர் வெப்பநிலை (High temperature)
 3. உயர் நேரியல் ஆற்றல் பரிமாற்ற கதிர்வீச்சு (High LET radiation)
 4. உயர் ஆற்றல் கதிர் வீச்சு (High energy radiation - Mev)
 5. உயர் எண்ணிக்கைக் கூறுகள் (Higher fractionation)

கதிர் மருத்துவத்தில் ஐசோடோப்புகளில் விரும்பப்படும் பண்புகள்[தொகு]

 • கரையாத, நச்சுத்தனமை அற்ற கதிர் ஐசோடோப்பாக இருத்தல்
 • பழுது ஏற்படும் போது பொடியாகாத, காற்றில் கலக்காத தன்மை
 • கதிரியக்கத்தின் போது வளிம கதிரியக்க சேய் தனிமம் தோன்றாத பண்பு
 • ஒப்புச் செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டுவது.
 • முடிந்தால் சற்று வளையும் தன்மை.
 • குறைந்த விலை.

கதிர்வீச்சினைப் பொறுத்த வரையில்,

 • α ,β கதிர்வீச்சு இல்லாதிருத்தல்
 • ஒரே ஆற்றலுள்ள γ கதிர் இருத்தல்
 • குறைந்த சிதறல்கள் தோன்றுவது
 • எலும்புகளில் அதிகம் ஏற்கப்படாதிருத்தல்

கதிர் மருத்துவத்தில் 4-ஆர்கள்[தொகு]

கதிர்மருத்துவத்தில் 4R-கள் (4Rs in radiotherapy) என்பது புற்றுநோய் மருத்துவத்தில் பலகூறுகளாக மருத்துவம் மேற்கொள்வதனால் உயிரணுக்கள் நிலையில் ஏற்படும் சிலசாதகமான விளைவுகளை விளக்க உதவுகிறது. பொதுவாக தொலை கதிர்மருத்துவம், வாரம் 5 நாட்கள் வீதம் 6 வாரங்கள் மொத்தம் 42 நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 2 கிரே வீதம் 30 கூறுகளில் மொத்தம் 60 கிரே கதிர் ஏற்பளவு கொடுக்கப்படுகிறது. கதிர்வீச்சு தொடங்கிய சில நாட்களில் ஏற்படும் எதிர் விளைவுகளை மருத்துவர் தெரிந்துகொண்டு, மாற்றி அமைக்க உதவும்.

 • குறை கூற்றளவினை ஏற்ற உயிரணுக்கள், நல்லநிலைக்குத் திரும்புதல் (Repair of sublethal dose):

குறைகூற்றளவினை பெற்ற சில நல்லநிலையிலுள்ள உயிரணுக்களாவது சேதத்தினைச் சமாளித்து நல்ல நிலைக்கு திரும்புவது சாத்தியமானதே. இது முதல் R

 • உயிணுக்களின் சுழற்சியில், சில புற்று அணுக்கள் சாதகமான நிலையில் சேருதல். (Reasssortment)

செல்சுழற்சியில் அதிக உணர்திறன் கொண்ட நிலையில் புற்றணுக்கள் கூடுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

 • புது வரவு (Repopulation):

மேலும் கூறுகளுக்கிடைபட்ட காலம் போதிய அளவு அதிகமாக உள்ளநிலையில் புதிய உயிரணுக்கள் தோன்ற வாய்ப்புண்டு.

 • புதிதாக உயிரணுக்கள் ஆக்சிஜனைப் பெறமுடிவது (Reoxygenation):

புற்று அழிய பிற புற்றணுக்கள் அதிக ஆக்சிஜனைப் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் அவை அதிக உணர்திறன் கொண்டவைகளாக மாறுகின்றன. இது நான்காவது R.

இவ்வாறாக 4R-கள் கதிர்மருத்துவத்தினைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

துன்பம் தவிர்க்கும் கதிர் மருத்துவம்[தொகு]

துன்பம் தவிர்க்கும் கதிர் மருத்துவம் (Palliative radiotherapy) என்பது நோய் முதிர்ந்த நிலையிலுள்ள புற்று நோயாளிகள் மிகவும் வலியாலும் பிறவகையிலும் அதிகமாகத் துன்பப்படுவார்கள். அவர்களை உயிர்பிழைக்கச் செய்வது மிகவும் கடினமான ஒரு செயலாக உள்ளபோது, நோயாளியை நோயின் துன்பத்திலிருந்து விடுவிக்க இம் முறை மருத்துவம் மேற்கொள்ளப் படுகிறது. துன்பம் தவிர்க்கும் மருத்துவமாக, கதிர் மருத்துவத்தின் போது வேதி மருந்துகள் கொடுக்கப்படுவதும் உண்டு.

பக்க விளைவுகள்[தொகு]

கதிர்வீச்சு சிகிச்சையில் குறைந்த அளவு கதிர்வீச்சின் போது வலிநிவாரண சிகிச்சைகளின் போது குறைந்த அளவிலோ அல்லது பக்க விளைவுகளின்றியோ இருக்கலாம் எனினும் அதிக அளவு அல்லது நீண்ட கால சிகிச்சையின் மூலம் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பெரும்பாலான பக்க விளைவுகள் யூகிக்கக்கூடியதாகும் எனினும் உடலின் மற்ற பகுதிகள் பாதிக்கப்படாமல் பார்த்துகொள்ளப்படுகிறது.பொதுவான பக்க விளைவுகளாவன சோர்வு மற்றும் தோல் எரிச்சல் ஆகியவையாகும்.இந்த பாதிப்புகள் சிகிச்சை முடிந்து சில நாட்கள் தொடரலாம்.

உடனடி பக்க விளைவுகள்[தொகு]

குமட்டல் மற்றும் வாந்தி[தொகு]

இது கதிரியக்க சிகிச்சையின் ஒரு பொதுவான பக்க விளைவு அல்ல.வயிறு அல்லது வயிறு சம்மந்தமான சிகிச்சைக்கு பிறகோ அல்லது தலை கழுத்து பகுதி சிகிச்சைக்கு பின்னர் மட்டும் ஒரு சில மணி நேரங்களுக்கு இந்த பதிப்புகள் இருக்கலாம்.எனினும் ஒரு சில நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான பயம் காரணமாகவும் ஏற்படலாம்.

தோல் பரப்புகளில் சேதம்[தொகு]

சில நேரங்களில் உள்ளுறுப்புகளில் சிகிச்சை அளிக்கும் போது தோல் பகுதிகளும் பாதிக்கப்படலாம்.சிகிச்சை முடிந்து சில வாரங்கள் தோல் பகுதி சிவந்தும் அரிப்பும் ஏற்படலாம்.

வாய், தொண்டை மற்றும் வயிற்றில் புண்கள்[தொகு]

தலை மற்றும் கழுத்து பகுதியில் சிகிச்சை அளிக்கும் போது தற்காலிக வாய் மற்றும் தொண்டை புண் ஏற்படும்.பெரிய அளவில் பதிப்புகள் ஏற்படும் போது விழுங்கும் போது வலி ஏற்படலாம்.

குடல் அசௌகரியம்[தொகு]

சிறுநீரகம் அல்லது குத புற்றுநோய் சிகிச்சையின் போது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படலாம்.

மலட்டு தன்மை[தொகு]

கருப்பைகள் மற்றும் விரைப்பைகளில் அதிக அளவில் கதிர்வீச்சு செலுத்தப்படும் போது நிரந்தர மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.எனினும் திறமையான குறைந்த அளவு கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இதை தவிர்க்க முடியும்.

காலம் கடந்த பாதிப்புகள்[தொகு]

புற்றுநோய்[தொகு]

10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலம் சென்ற பின்னும், கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துகொண்டவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதய நோய்[தொகு]

மார்பக புற்றுநோய்க்கு கதிர்வீச்சு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துகொள்பவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது.

அறிவாற்றல் சரிவு[தொகு]

5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைளுக்கு தலையில் சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் அறிவாற்றல் குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது.

கதிரியக்க பாதிப்புகள்[தொகு]

அதிக கதிரியக்கங்களால் இரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு மற்றும் நீண்ட கால மலக்குடல் பிரச்சினைகள், சிறுநீர்ப்பை அழற்சி போன்றவை ஏற்படலாம்.

திருந்திய செறிவுடன் கதிர் மருத்துவம்[தொகு]

திருந்திய செறிவுடன் கதிர் மருத்துவத்தில் (Intensity Modulated Radiation Therapy (IMRT)) கதிர்புலம் ஒரே கற்றையாக இல்லாமல் சிறுசிறு கற்றைகளாக மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சிறு கற்றைகளும் கூட, இம் மருத்துவத்தின் போது செறிவில் மாறுபடுகிறது. இப்படிப்பட்ட மருத்துவத்தில் புற்றுக் கண்ட திசுக்களுக்கு மட்டும் முப்பரிமாணத்தில் அதிக தேவையான கதிர் ஏற்பளவினைக் கொடுக்கமுடிகிறது. அதேநேரம் புற்றைச் சுற்றியுள்ள நல்லதிசுக்களுக்கு கணிசமான அளவு கதிர்ஏற்பளவினைக் குறைக்க முடிகிறது. இவையாவும் விரைவாகச் செயல்படும் கணினியால் சாத்தியமாகிறது.

சுழல் கதிர் மருத்துவம்[தொகு]

சுழல் கதிர் மருத்துவம் (Rotation therapy) என்பது புற்றுநோய்க்கு கதிர் மருத்துவம் மேற்கொள்ளப்படும் போது கடைபிடிக்கப்படும் ஒரு முறையாகும். புற்று உடற்பரப்பிலிருந்து அதிக ஆழத்தில் இல்லாத போது ஒரே கதிர் புலத்துடன் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. புற்று உடலின் நடுப்பகுதியில் அமையுமானால், ஓரிணை எதிரெதிர் புலங்கள் பயன்படுகின்றன. இதனால் புற்றிற்கு அதிக ஏற்பளவும் தோல்பகுதியில் குறைந்த ஏற்பளவும் பெறப்படுகின்றன. சிற்சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு புலங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தோற்பகுதியில் கணிசமான அளவு ஏற்பளவு குறைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சுழல் மருத்தவம் அல்லது சுழல் கதிர் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக சிறப்பான கதிர் மருத்துவக் கருவிகள் உள்ளன. ஒரே மைய அமைப்புடன் (Isocentric mount) கூடிய இக்கருவிகளில், புற்றுநோய் காணுமிடம் ஒரே மையத்தில் இருக்குமாறு அமைத்து, கதிர் மூலத்தினையோ, நோயாளியின் மேசையினையோ, புலத்தேர்வியினையோ சுழற்றினாலும் கதிர்வீச்சின் மைய அச்சு புற்றுவழியாகவே செல்லும். புற்றைச் சுற்றி கதிர் புலம் சுழலுமாறு இருக்கும். இம்முறையில் மேற்கொள்ளப்படும் கதிர் மருத்துவம் சுழல் கதிர்மருத்துவம் எனப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-21. பார்க்கப்பட்ட நாள் 2013-02-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 2. http://www.highbeam.com/doc/1G1-170778701.html[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 5. http://www.questia.com/read/100328981/confronting-cancer-how-to-care-for-today-and-tomorrow
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_மருத்துவம்&oldid=3547737" இலிருந்து மீள்விக்கப்பட்டது