உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் விவிலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக் கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும்.

திருவிவிலியம் (The Holy Bible) அல்லது விவிலியம் என்னும் எழுத்துப் படையலின் ஒரு பெரும் பகுதி யூத சமயத்தாருக்கும் கிறித்தவர்களுக்கும் பொதுவானது. கிறித்தவர்கள் அப்பகுதியைப் "பழைய ஏற்பாடு" என்று கூறுவர். "புதிய ஏற்பாட்டில்" இயேசு கிறிஸ்துவின் வரலாறும் போதனையும் அடங்கியுள்ளன. யூதர்கள் மட்டுமே ஏற்கின்ற பழைய ஏற்பாடு ("Old Testament") என்னும் விவிலியப் பகுதி "எபிரேய விவிலியம்" (Hebrew Bible) என்றும் கூறப்படுவதுண்டு.

இயேசுவின் வாழ்வில் விவிலியம்[தொகு]

விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். "மனித மொழியில் அமைந்த கடவுளின் வார்த்தை" என விவிலியத்தைக் கிறித்தவர் போற்றுவர்.

கிறிஸ்து பிறந்த காலத்தில், இன்று பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகின்ற விவிலியப் பகுதி மட்டுமே முழு விவிலியமாக இருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியையே இயேசு யூதர்களின் தொழுகைக் கூடத்தில் வாசித்தார் (காண்க: லூக்கா 4:16-28); தொழுகைக் கூடங்களில் வாசிக்கக் கேட்டார். இயேசு யூத ஆன்மிக நெறியை அறிந்து, அதைக் கடைப்பிடிக்க துணையாக இருந்தது இந்த விவிலியம் தான்.

இயேசு கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு, அவர் புரிந்த அதிசய செயல்களைப் பார்த்து அனுபவித்த மக்கள், அல்லது அந்த அனுபவத்தைப் பிறர் வழி பெற்றவர்கள் அந்த அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்தனர். இவ்வாறு எழுந்த நூல்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கியுள்ள நூல்களின் எண்ணிக்கை 27 ஆகும்.

தமிழ் விவிலியத்தின் பல பெயர்கள்[தொகு]

விவிலியம் அல்லது Bible என்னும் சொல்லுக்கு மூலமாகிய கிரேக்கச் சொல் Biblion என்பதாகும். பிப்ளோசு (Biblos) என்பது இன்றைய இலெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். புத்தகம் எழுதப் பயன்படும் "பப்பைரசு" (papyrus) என்னும் ஒரு வகை நாணல் புல் விற்கப்பட்டது அந்த பிப்ளோசு நகரத்தில்தான். Papyrus என்னும் சொல்லிலிருந்தே paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது என்பதும் கருதத்தக்கது.

பப்பைரசு விற்கப்பட்ட பிப்ளோசு நகரத்தின் பெயரால் Biblion என்னும் சொல் கிரேக்க மொழியில் நுழைந்து, புத்தகத்தை (Book) குறிப்பதாயிற்று. Biblion என்பது பன்மையில் Biblia என்றாகும். இந்தச் சொல் இலத்தீன் மொழியில் ஒருமையில் வழங்கி, The Book என்னும் பொருள் தருவதாயிற்று. கிறித்தவர்கள் தம் சமய நூலாகிய விவிலியத்தை ஒப்புயர்வற்ற ஒன்றாகக் கருதி, எந்த ஓர் அடைமொழியுமின்றி "நூல்" (The Book) என்றே அழைக்கலாயினர்.

கிறித்தவம் தமிழகத்தில் பரவியபோது, "பைபிள்" என ஆங்கிலத்தில் குறிப்பிடும் நூல் தொகுப்புக்கு இணையான தமிழ்ச் சொல்லை உருவாக்கும் தேவை எழுந்தது. பல கிறித்தவ சபையினர் இணைந்து உருவாக்கி 1995 இல் வெளியான தமிழ் பொது மொழிபெயர்ப்பின் தலைப்பு திருவிவிலியம் என அமைந்துள்ளது.[1]

ஆனால் மேலைநாட்டுக் கிறித்தவம் தமிழ்ப் பண்பாட்டைச் சந்தித்த 16ஆம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் விவிலியம் பல பெயர்களால் வழங்கப்பட்டது என வரலாற்றிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து மொழி வள்ர்ச்சியும் மொழி வழக்கு மாறுபாடுகளும் ஏற்பட்டதையும் வரலாறு கூறுகிறது.

வேதம்[தொகு]

விவிலியத்தைக் குறிக்க முதன்முதலில் ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் பயன்படுத்திய சொல் வேதம் என்பதாகும். வேதம் என்னும் சொல்லுக்கு சமயம் என்னும் பொருளும் வேத நூல் என்னும் பொருளும் உண்டு என்பதால் அந்த இரு பொருள்களையும் பிரித்துப் பார்க்கும் தேவை ஏற்பட்டது. மறைப்பணியாளர் என்றிக்கே என்றீக்கசு (1520-1600; தமிழகத்தில் 1547-1600) என்பவரும் அவருக்குப் பின் ”தத்துவ போதகர்” இராபர்ட் தெ நோபிலி (1577-1656; தமிழகத்தில் 1606-1656) என்னும் மறைப்பணியாளரும் வேதத்தை இவ்வாறு புரிந்துகொண்டதாகத் தெரிகிறது.

எனினும் சமயத்தைக் குறிக்க "மார்க்கம்", மதம் என்னும் சொற்களையும் அவர்கள் கையாண்டதும் உண்டு.

வேதபுத்தகம்[தொகு]

இந்திய சமய-கலாச்சார மரபை வடமொழி, தமிழ் போன்ற மொழிகளில் இயற்றப்பட்ட நூல்கள் வழி ஊன்றிக் கற்ற இராபர்ட் தெ நோபிலி, வேதம் என்னும் சொல் இருக்கு முதலாகிய பண்டைய சமய நூல்களைக் குறிக்கப் பயன்பட்டதை அறிந்திருந்ததால்தான் கிறித்தவ சமய நூலாகிய விவிலியத்திற்கு வேதம் என்றே பெயர் அளித்தார் எனத் தெரிகிறது. அவர் எழுதிய "நித்திய சீவன சல்லாபம்" என்ற நூலில் வேதம் என்னும் சொல் ”கடவுள் அருளும் வெளிப்பாடு” எனவும், அந்த வெளிப்பாடு எழுத்து வடிவம் பெறும் நிலையைக் குறிப்பதாகவும் பொருள்படுகிறது.

அச்சுக்கலை தமிழகத்தில் காலூன்றிய 16ஆம் நூற்றாண்டில் தத்துவபோதகரோ, அவருக்கு முன் என்றீக்கசோ விவிலியத்தை நேரடியாக மொழிபெயர்த்து அச்சேற்றவில்லை. அவர்கள் மொழிபெயர்த்த விவிலியப் பகுதிகளின் கைப்படிகளும் காலத்தால் அழிந்துபட்டன.

மத்தேயு நற்செய்தியும் யோவான் நற்செய்தியும் தமிழில் பெயர்க்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த ஏடுகளோ அவற்றின் படிகளோ இன்று கிடைக்கவில்லை. மத்தேயு நற்செய்தியிலுள்ள "பேறுபெற்றோர்" ("பாக்கியவான்கள்") என்னும் பகுதியும் (அதிகாரம் 5), "இயேசு கற்பித்த இறைவேண்டல்" ("கர்த்தர் கற்பித்த செபம்") என்னும் பகுதியும் (அதிகாரம் 6) தமிழில் பெயர்க்கப்பட்டது உறுதி.

இம்மறைப்பணியாளர்கள் எழுதிய பிற நூல்களில் விவிலியத்தைக் குறிக்க அவர்கள் கையாண்ட சொல்லாட்சி காணக் கிடக்கிறது. அந்த ஆய்வின் அடிப்படையில், முதன்முதலாக விவிலியத்தைத் தமிழில் வேதம் என அழைத்தோர் இயேசு சபையைச் சேர்ந்த என்றீக்கசு, தெ நோபிலி போன்றோரே என உறுதியாகத் தெரிகிறது.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த சீர்திருத்த சபை கிறித்தவர்கள் விவிலியத்தின் தமிழ் பெயர்ப்பை வேதம் என்றே அழைத்தனர். எடுத்துக்காட்டாக, 1714இல் சீகன்பால்க் முதல்முறையாகத் தமிழ் விவிலியப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டை அச்சேற்றியபோது அதற்கு வேதபொஷ்த்தகம் என்று பெயர் கொடுத்தார். அதில் விவிலியம் என்பது "நூல்" (நூல்தொகுப்பு) என்னும் பொருள் தெரிகிறது.

இவ்வாறு கத்தோலிக்க கிறித்தவரும் சீர்திருத்த சபையினரும் வேதம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதில் ஒற்றுமை இருப்பது தெளிவாகிறது.

மறைநூல்[தொகு]

சீகன்பால்க் வெளியிட்ட விவிலியத் தமிழ் பெயர்ப்பு நல்ல தமிழ் நடையில் இல்லை என்று கடுமையாகக் குறை கூறியவர்களில் ஒருவர் வீரமாமுனிவர் (1680-1747). தமிழகத்தில் 1710இலிருந்து 1747 வரை பணியாற்றிய வீரமாமுனிவர், விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு தாம் இயற்றிய தேம்பாவணி என்னும் காவியத்தில் விவிலியத்தை மறைநூல் என்று பலவிடங்களில் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், கிறித்தவ சமய நம்பிக்கையைக் குறிக்க வேதம் என்னும் சொல்லையும் கையாளுகிறார்.

எடுத்துக்காட்டாக, கிறித்தவ சமய நம்பிக்கை உண்மையானதே என்று மக்கள் கூறிய சான்றுகளைத் தொகுத்தளிக்கின்ற "வேதவிளக்கம்" என்னும் நூலை வீரமாமுனிவர் வெளியிட்ட போது அதில் கிறித்தவ சமயத்தை வேதம் என்றே அழைக்கின்றார். வேதத்தை விளக்கி உரைப்பவர்களை அவர் வேதியர் என்று அழைத்தார். இன்றும்கூட, தமிழ்க் கிறித்தவர் நடுவே வேதியர் என்னும் சொல் இப்பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

சத்தியவேதம்[தொகு]

விவிலியத்தையும் கிறித்தவ சமயத்தையும் வேதம் என்று கூறியதோடு, அது உண்மையான வேதம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் விவிலிய மொழிபெயர்ப்பு சத்திய வேதம் என்னும் தலைப்பில்தான் 1844இல் (பழைய ஏற்பாடு - ஃபெப்ரீசியுசு; புதிய ஏற்பாடு - இரேனியுசு) சென்னையில் வெளியாயிற்று. இந்திய நாட்டில் ஏற்கனவே வேதம் இருந்ததால் அந்த வேதத்திலிருந்து வேறுபட்டதாகவும், எந்தவொரு பொய்ம்மையையும் தன்னுள் கொண்டிராததாகவும் விவிலியம் இருந்தது என்னும் கருதுகோளின் அடிப்படையில்தான் கிறித்தவ மறைப்பணியாளர்கள் விவிலியத்தை உண்மயான வேதம் (சத்திய வேதம்) என்று அழைத்தனர். அவர்கள் விவிலியத்திற்கு அளித்த பெயரிலேயே கருத்தியல் கோட்பாடு நுழைவது இதிலிருந்து தெரிகிறது.

வேதாகமம்[தொகு]

ஆண்டுகள் பல கழிந்தபின், 1857இலிருந்து கத்தோலிக்க கிறித்தவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியாயிற்று. அது பரிசுத்த வேதாகமம் என்ற பெயரில் அச்சாகியது. சீர்திருத்த சபையினரின் பவர் (Bower) மொழிபெயர்ப்பும் அந்தத் தலைப்பிலேயே வெளிவந்தது.

1948இல் யாழ்ப்பாணத்தில் வெளியான விவிலியம் பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இதிலே அடங்கியிருக்கின்றன என்னும் விரிந்த தலைப்பில் வெளிவந்தது. இங்கே பைபிள் என்னும் சொல்லுக்கு வேதபுத்தகம் என்றோ, வெறுமனே வேதம் என்றோ இல்லாமல் வேத + ஆகமம் = வேதாகமம் என்று வருவது கவனிக்கத்தக்கது.

இந்திய மரபில் வேதத்திற்கும் ஆகமத்திற்கும் வேறுபாடு உண்டு. வேதம் என்பது மனிதரால் எழுதப்பட்டதல்ல எனவும், ஆகமங்கள் என்பவை மரபு வழி வந்தன எனவும் ஒரு கொள்கை உண்டு. அதன்படி பார்க்கும்போது, விவிலியத்தை வேதாகமம் என்று அழைப்பது அதற்கு ஆசிரியராக இருப்பவர்கள் கடவுளும் மனிதரும் ஆவர் என்னும் உண்மைய வெளிப்படுத்துவதாக உள்ளது.

திருமறைநூல்[தொகு]

விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகள் "வேதம்", "வேதாகமம்" போன்ற பெயர்களோடு தொடக்கத்தில் அச்சிடப்பட்டு வெளியாயின. ஆனால், 1950களிலிருந்தே கத்தோலிக்க இறையியலார் பலரும் சீர்திருத்த சபை இறையியலார் சிலரும் விவிலியத்தைக் குறிக்க திருமறைநூல் என்னும் சொல்லைப் பயன்படுத்தினர். வேதம் என்னும் வடமொழிச் சொல்லுக்குப் பதிலாகத் தமிழ்ப் பயன்பாட்டில் "மறை" என்ற சொல் கையாளப்பட்டது இவண் கருதத்தக்கது. இந்தப் பின்னணியில்தான் தூய தமிழில் கூற வேண்டும் என்னும் எண்ணத்தில் விவிலியத்தைத் திருமறைநூல் என இறையியலார் மாற்றினர்.

மேலும், எந்தெந்த விவிலிய நூல்கள் அதிகாரப்பூர்வமான பட்டியலில் அடங்கியிருந்தன என்பதைக் குறிக்க திருமுறை (canon) என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. இது சைவ மரபிலிருந்து பெறப்பட்டது என்பது தெளிவு. சைவர்களின் சமய நூல் தொகுப்பு திருமுறை என்றே வழங்கப்படுகிறது.

திருவிவிலியம்[தொகு]

1995இல் வெளியான தமிழ் விவிலியம்: கிறித்தவ சபைகள் இணைந்து வெளியிட்ட பொதுமொழிபெயர்ப்பு.

அண்மைக் காலம் வரை வேதாகமம் என்னும் சொல்லும், திருமறைநூல் என்னும் சொல்லும் விவிலியத்தைக் குறிக்க பயன்பாட்டில் இருந்தன. ஆனால், 1995இல் வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு திருவிவிலியம் என வழங்கப்படுகிறது. இது Holy Bible என்பதின் நேரடி தமிழாக்கமாகவும் தழுவலாகவும் உள்ளது.

Biblia (கிரேக்கம், இலத்தீன்) என்னும் வேரை அடியாகக் கொண்டு எழுந்த விவிலியம் என்னும் புதுச் சொல்லாக்கம் சுமார் 1850களில் இருந்தே தமிழ்ப் பயன்பாட்டில் படிப்படியாக வந்துவிட்டதாலும், மூலத்திற்கு அச்சொல் மிக நெருக்கமாய் ஒலியளவிலும் இருப்பதாலும், இது பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வேதம் என்ற சொல்லால் இந்திய மரபில் ஏற்கனவே திருநூல்கள் குறிக்கப்பட்டதால் அந்தச் சொல்லுக்கு உரிய கலாச்சார வரலாற்றை மதித்து, அதைக் கொச்சைப்படுத்தாமல், அந்த மரபோடு நேர்மையான உரையாடலில் ஈடுபடுவதற்குக் கிறித்தவ மரபிற்கே சிறப்பாக அமைந்த திருவிவிலியம் என்னும் சொற்பயன்பாடு துணையாகும்.

விவிலிய மொழிபெயர்ப்புகள்[தொகு]

விவிலியம் என்பது கிறித்தவர்களின் சமய நூல். அது இரு பெரும் பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியைப் பழைய ஏற்பாடு என்றும் இரண்டாம் பகுதியைப் புதிய ஏற்பாடு என்றும் கிறித்தவர் அழைப்பர். பழைய ஏற்பாட்டு நூல்கள் இயேசு முற்பட்ட காலத்திலும், புதிய ஏற்பாடு அவருக்குப் பிற்பட்ட காலத்திலும் எழுந்தன.

இன்றும் கூட, பழைய ஏற்பாட்டு நூல்கள் யூத மக்களின் சமய நம்பிக்கைக்கு அடித்தளமாக உள்ளன. அந்நூல்களில் பெரும்பான்மை (39) எபிரேய மொழியிலும், ஒரு சில (7) கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டவை ஆகும். கிரேக்க மொழியில் எழுந்த நூல்களை எல்லா யூதர்களும் அதிகாரப்பூர்வமான திருநூல் தொகுப்பில் ஏற்பதில்லை. இந்த வேறுபாடு கிறித்தவர்களுடைய சபைகளிலும் தெரிகிறது.

அதாவது, கத்தோலிக்க கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய மற்றும் கிரேக்க நூல்களைத் திருமுறையில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், புரோட்டஸ்டாண்டு (சீர்திருத்த) சபையினர் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே திருநூலின் பகுதிகளாக ஏற்பர்; கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்பதில்லை. கத்தோலிக்க கிறித்தவர்கள் இந்நூல்களை ”இணைத் திருமுறை நூல்கள்” (Deutero-canonical) என அழைப்பர்; சீர்திருத்த சபையினர் ”விவிலியப் புற நூல்கள் (Apocrypha) என்பர்.

புதிய ஏற்பாட்டு நூல்கள் 27 ஐயும் எல்லாக் கிறித்தவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்நூல்கள் அனைத்தும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை ஆகும்.

கிரேக்க பெயர்ப்பு[தொகு]

எபிரேய மொழி பேசிய யூத மக்களிடையே எழுந்த நூல்கள் என்பதால் பழைய ஏற்பாட்டு நூல்கள் எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன. ஆனால், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் யூதர்கள் சிலர் பாலத்தீன நாட்டுக்கு வெளியே சென்று கிரேக்கப் பகுதிகளில் குடியேறினர். நாளடைவில் அவர்கள் தம் சொந்த மொழியான எபிரேயத்தை மறந்துவிட்டதால் அம்மொழியில் இருந்த தம் திருநூலைப் படிக்க அவர்களால் இயலாமல் போயிற்று. எனவே அவர்கள் பேசிய கிரேக்க மொழியில் விவிலியம் பெயர்க்கப்பட்டது.

இந்த முதல் மொழிபெயர்ப்பு ”எழுபதின்மர் விவிலியம்” (Septuagint, செப்துவசிந்தா) என அழைக்கப்படுகிறது. எழுபது எபிரேய அறிஞர்கள் இந்த மொழிபெயர்ப்பைச் செய்தார்கள் என்னும் மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் எழுந்தது. இத்தோடு கிரேக்க மொழியில் நேரடியாக எழுதப்பட்ட ஏழு நூல்களும் சேர்க்கப்பட்டன.

இலத்தீன் பெயர்ப்பு[தொகு]

பாலத்தீனாவைச் சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த கிறித்தவ மக்கள் நடுவே கிரேக்க மொழி வழக்கத்திலிருந்தது. பின்னர், கிறித்தவ சமயம் உரோமைப் பேரரசின் பகுதிகளில் விரைவாகப் பரவத் தொடங்கியதும் கிரேக்க விவிலியத்தை மக்கள் பேசிய இலத்தீன் மொழியில் பெயர்க்க வேண்டிய தேவை எழுந்தது.

தூய எரோணிமுசு (St. Hieronymus; ஆங்கில வழக்கில் St. Jerome) என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் செய்த இலத்தீன் மொழிபெயர்ப்பு மிகப் புகழ் பெற்றது. இதை "வுல்காத்தா" (இலத்தீன்: Vulgata; ஆங்கில மொழி: Vulgate) மொழிபெயர்ப்பு என அழைப்பர். ”பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப்பு” என்பது அதன் பொருளாகும். இந்த இலத்தீன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில்தான் நீண்ட காலமாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் மொழிபெயர்ப்புகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

வேறு பல பண்டைய மொழிகளிலும் விவிலியம் திருப்பப்பட்டது. எடுத்துக்காட்டாக, சிரிய மொழி விவிலியம் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு), கோப்திய மொழி விவிலியம் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு), எத்தியோப்பிய மொழி விவிலியம் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கத்தோலிக்கரின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகள்[தொகு]

திருவிவிலியம் தமிழில் பெயர்க்கப்பட்ட வரலாறு பல கட்டங்களை உள்ளடக்கியது. கிறித்தவ சமயத்தின் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருந்துவந்தன. உரோமைப் பேரரசு காலத்தில் புழங்கிய நாணயங்கள், மண்பாண்டங்கள் போன்றவை தமிழகத்திலும் கேரளத்திலும் கிடைத்துள்ளன. மேற்கு ஆசிய பகுதிகளாகிய சிரியா, மெசொப்பொத்தேமியா, இன்றைய ஈரான், ஈராக் பகுதிகள் போன்றவற்றிலிருந்து இந்தியாவுக்குத் தரைவழியாகவும் கடல்வழியாகவும் தொடர்பு இருந்தது.

இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவராகிய புனித தோமா இந்தியா வந்தடைந்து, கிறித்தவ சமயத்தைப் போதித்து, மயிலாப்பூரில் கி.பி. 72 அளவில் உயிர் நீத்தார் என்றொரு மரபுச் செய்தி இன்று ”புனித தோமா கிறித்தவர்கள்” (St. Thomas Christians) என்றழைக்கப் படுகின்ற கேரள கிறித்தவர் நடுவே மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.

எனவே, கேரளத்திலும் தமிழகத்திலும் புனித தோமாவும் அவருக்குப் பின் வந்தோரும் கிறித்தவ சமயத்தைப் பரப்பியிருந்தால் தமிழில் விவிலியம் அக்காலத்திலிருந்தே பெயர்க்கப்பட்டதா என்னும் கேள்வி எழுகிறது. கிறித்தவ சமயம் தென்னிந்திய மேற்குக் கடற்கரைப் பகுதியில் கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே பரவியிருந்தது என்பதற்கு உறுதியான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஆனால், தமிழ்க் கிறித்தவ இலக்கியம் உருவான சான்றுகள் கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கின்றன.

இயேசு சபையைச் சார்ந்த மறைபரப்பாளர்கள் முதலில் தமிழகம் வந்தபோது போர்த்துக்கீசிய மொழியில் கிறித்தவ மறையைப் போதிக்க முயன்றார்கள். ஆனால் தமிழ்மொழியின் துணையின்றி மக்களோடு உரையாடல் இயலாது என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டார்கள். மறைப்பணியாளர் என்றிக்கே என்றீக்கசு என்பவரும் அவருக்குப் பின் இராபர்ட் தெ நோபிலி போன்ற சிலர் தமிழை நன்கு பயின்று அதில் தேர்ச்சிபெற்றார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்குத் தமிழிலேயே கிறித்தவ சமயம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க முடியும், அவ்வாறே எடுத்துரைக்கவும் வேண்டும் என்று உறுதிபூண்டனர்.

எனவே திருவிவிலியத்தில் அடங்கியுள்ள உண்மைகளை அவர்கள் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமைப்படுத்தி, மறைக்கல்விக் கையேடுகளையும் விளக்க நூல்களையும் (catechism) எழுதலாயினர். அவற்றில் விவிலியப் பகுதிகள் பல உள்ளன. மேலும், அவர்கள் விவிலியத்தின் முதன்மைப் பகுதியாகிய நற்செய்தி நூல்களைத் தமிழில் பெயர்த்து வழிபாட்டில் பயன்படுத்தினர். ஆனால், அவை காலத்தால் அழிந்துபட்டன. இருப்பினும், அவர்கள் இயற்றிய விவிலிய மறைக்கல்வி நூல்கள் சில நமக்குக் கிடைத்துள்ளன. விவிலியக் கருத்துகளை அழகிய பாக்களாக, குறிப்பாகத் தேம்பாவணி என்னும் காவியத்தில் வடித்தார் வீரமாமுனிவர்.

ஆயினும், விவிலியத்தில் அடங்கியுள்ள எல்லா நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்காத குறை தொடர்ந்து இருந்துவந்தது.

சீர்திருத்த சபையினர் வெளியிட்ட மொழிபெயர்ப்புகள்[தொகு]

13-14 ஆம் நூற்றாண்டுகளில் மார்க்கோ போலோ போன்ற மேலைநாட்டுப் பயணிகளும், மோந்தே கொர்வீனோ, மரிஞ்ஞோல்லி போன்ற கத்தோலிக்க கிறித்தவ மறைப்பணியாளர்களும் தமிழகத்தில் கிறித்தவம் பரவ உதவினர்.

ஆயினும் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 16ஆம் நூற்றாண்டில்தான் தமிழகத்துக்கு முதன்முதல் மேனாட்டுக் கிறித்தவ மறைபரப்பாளர் பெரும் எண்ணிக்கையில் வரத் தொடங்கினர். கத்தோலிக்க கிறித்தவர்களாகிய அவர்கள் கத்தோலிக்க நாடாகிய போர்த்துகலின் ஆதரவோடு இந்தியாவிலும் இலங்கையிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் மறைபரப்பினர்.

அவர்களைத் தொடர்ந்து புரட்டஸ்டாண்டு சபையினர் என்று அழைக்கப்படுகின்ற சீர்திருத்தச் சபையினர் தமிழகத்தில் மறைபரப்ப வந்தனர். இவர்கள் பல பிரிவினராகவும் பல நாட்டவராகவும் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவு அளித்த புரட்டஸ்தாந்த நாடுகள் டென்மார்க், ஓலாந்து, இங்கிலாந்து போன்றவை ஆகும்.

தமிழகத்தில் சீர்திருத்த சபையினர் வந்தபோது கத்தோலிக்க கிறித்தவம் பல இடங்களில் வேரூன்றியிருந்தது. தமிழில் இறைவேண்டல்களும் கிறித்தவ மறைக்கல்வி நூல்களும் கையெழுத்துப் படிகளாகவும் அச்சுப்படிகளாகவும் வழக்கத்தில் இருந்தன. திருப்பலியிலும் பிற வழிபாடுகளிலும் அவை பயன்பட்டன. விவிலியத்தின் சில பகுதிகளும் தமிழாக்கம் பெற்றிருந்தன.

கத்தோலிக்க கிறித்தவ மறைபரப்பாளர்கள் கிறித்தவ சமய உண்மைகளைத் தமிழில் எடுத்துக்கூற புதிய சொல்லாக்கங்களைப் படைத்திருந்தார்கள். குறிப்பாக என்றீக்கசு, தெ நோபிலி போன்றோர் இத்துறையில் சிறப்பான பணி ஆற்றியிருந்தார்கள். சீர்திருத்த சபையினர் விவிலியத்தைத் தமிழில் பெயர்ப்பதற்கு மேற்கூறிய முன்னோடிகள் ஏற்கனவே ஆற்றியிருந்த மொழிபெயர்ப்புப் பணி பெரிதும் துணையாக அமைந்தது.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்களும் இந்தியாவோடும் இலங்கையோடும் வணிகத் தொடர்பு கொண்டு மையங்கள் ஏற்படுத்தினர். அவர்களோடு சீர்திருத்த சபை மறைபரப்பாளரும் வந்தனர். இவ்வாறு வந்த பிலிப்பு பல்தேயுசு (1632-1671) என்பவர் 1657இலிருந்து 1667 வரை இலங்கையில் பணியாற்றியபோது மத்தேயு நற்செய்தியைத் தமிழாக்கம் செய்திருந்தார் எனத் தெரிகிறது. அக்காலத்தில் இலங்கையில் அச்சுக்கூடம் இல்லாதிருந்ததால் அந்நூல் அச்சேறவில்லை.

அ) விவிலியத்தின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு: சீகன்பால்க் பங்களிப்பு


விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார். செருமனியில் 1683இல் பிறந்த சீகன்பால்க் கிறித்தவ மதத்தைப் பரப்ப ஹைன்றிக் புளூட்ஷோ (Heinrich Pluetschau) என்பவரோடு இந்தியா வந்தார். சீகன்பால்க் செருமானியராக இருந்தாலும் டென்மார்க்கு ஆளுநர் 4ஆம் ஃப்ரெடெரிக் என்பவரின் பெயரால் இந்தியா வந்தார். 1620இல் டேனியர்கள் தரங்கம்பாடியில் நிறுவியிருந்த வணிகத் தளத்தை சீகன்பால்க் 1706ஆம் ஆண்டு சென்றடைந்தார். சீர்திருத்த சபையில் லூத்தரன் அமைப்போடு இணைந்த பக்தி இயக்கம் (Pietism) என்னும் பிரிவைச் சார்ந்த சீகன்பால்க் மக்களிடையே கிறித்தவ உணர்வையும் பக்தியையும் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் விவிலியத்தைத் தமிழில் பெயர்த்து, அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்று முடிவுசெய்தார்.

போர்த்துகீசியரின் ஆளுகையின்போது, தமிழில் தம்பிரான் வணக்கம் (1578), கிரிசித்தியானி வணக்கம் (1579), பாவ அறிக்கை நூல் (1580), அடியார் வரலாறு (1586) ஆகிய நான்கு கிறித்தவ நூல்களே கொச்சியிலும் கொல்லத்திலும் அச்சிடப்பட்டிருந்தன. சுமார் 10 ஆண்டுகளே இந்த அச்சுப்பணி நீடித்தது. அடுத்த கட்டமாக 1677-1680 ஆண்டுக் காலத்தில் இராபர்ட் தெ நோபிலியின் ஞானோபதேசம் என்னும் நூலின் முதல் மூன்று காண்டங்களும் பின்னர் நான்காம் காண்டமும் 1677-1678இல் அச்சிடப்பட்டன. இந்த ஆறு தமிழ்க் கிறித்தவ நூல்கள் அச்சிட்டு வெளியானதோடு போர்த்துகீசிய அச்சுப் பணி தமிழகத்தில் முடிவுற்றது.

தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் பக்கம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968 விழா மலரில்
சீகன்பால்க் மற்றும் ஷூல்ஸ் (சூல்சு) தமிழில் பெயர்த்து வெளியிட்ட விவிலியத்தின் முதல் நூலின் படிமம். தரங்கம்பாடி, 1723

இப்பின்னணியில்தான் சீகன்பால்க் தரங்கம்பாடிக்கு அச்சுப் பொறி கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய வற்புறுத்தலின் பேரில் 1712ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு அச்சுப் பொறி வந்துசேர்ந்தது. இங்கிலாந்தில் அமைந்த ஒரு மறைபரப்பு நிறுவனம் அச்சுப் பொறி வருவதற்குத் துணைசெய்தது. சீகன்பால்க் தமிழில் பெயர்த்த புதிய ஏற்பாடு தரங்கம்பாடி அச்சகத்தில் 1715ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பில் சீகன்பால்க் ரூத்து நூல் வரை மட்டுமே முடித்திருந்த வேளையில், 1719இல் காலமானார்.

ஆ) பெஞ்சமின் ஷூல்ஸ் (சூல்சு) பதித்த தமிழ் விவிலியம்


சீகன்பால்க் இறந்த ஒருசில மாதங்களில் பெஞ்சமின் ஷூல்ஸ் (Benjamin Schultze, பெஞ்சமின் சூல்சு) (1689-1760) என்னும் செருமானிய லூத்தரன் மறைபரப்பாளர் தரங்கம்பாடி வந்துசேர்ந்தார். சீகன்பால்க் தமிழில் பெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை ஷூல்ஸ் 1723இல் அச்சேற்றினார். தொடர்ந்து 1726, 1727, 1728 ஆண்டுகளில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதிகளை ஷூல்ஸ் அச்சிட்டு வழங்கினார்.

புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பிலும் ஷூல்ஸ் திருத்தங்கள் செய்தார். புதிய ஏற்பாட்டின் திருத்திய இரண்டாம் பதிப்பு தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து 1724இல் வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் விவிலிய நூல்களின் ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் ஒரு சுருக்கம் தரப்பட்டது புதிய கூறாக அமைந்தது.

மீண்டும் தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து திருத்திய மூன்றாம் பதிப்பு 1758இல் வெளியிடப்பட்டது. அதைத் திருத்துவதில் பல மறைபரப்பாளர்கள் ஒத்துழைத்தனர்.

இ) இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு

தரங்கம்பாடியில் வெளியான இரண்டாம் பதிப்பு 1741-1743 ஆண்டுகளில் இலங்கையில் கொழும்பு நகரில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழரின் மொழி வழக்கத்திற்கு ஏற்ப அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இலங்கையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப் (I.B. Imhoff) என்பவரின் ஆதரவின் கீழ் அது வெளியானது.

ஈ) யொஃகான் ஃபிலிப்பு ஃபெப்ரீசியசின் மொழிபெயர்ப்பு


ஷூல்ஸ் ஆற்றிய பணியைத் தொடரவந்தவர்களுள் முக்கியமான ஒரு மறைபரப்பாளர் யொஃகான் ஃபிலிப்பு ஃபெப்ரீசியசு ஆவார். இவர் 1740இல் தரங்கம்பாடி வந்தார். இவர் சீகன்பால்க் தமிழில் பெயர்த்திருந்த புதிய ஏற்பாட்டைத் திருத்தினார். ஏற்கனவே வெளியான பெயர்ப்புகளைவிட, திருத்தம் பெற்ற இப்பெயர்ப்பு சிறப்பாக அமைந்தது. இது 1772இல் வெளியிடப்பட்டது.

ஃபெப்ரீசியசு பழைய ஏற்பாட்டின் தமிழ்ப் பெயர்ப்பையும் மறுபார்வையிட்டுப் பதிக்க விரும்பினார். அவர் பல மாற்றங்கள் செய்ததால் அவரது பெயர்ப்பு ஓரளவுக்குப் புதிய பெயர்ப்பாகவே மாறியது. கடலூரிலிருந்த மறைபரப்பாளர்கள், டேனிய போதகர்கள், தமிழ் அறிஞர்கள் போன்றோரின் கருத்துகள் பெறப்பட்டன. நூல் 1777-1796 ஆண்டுக்காலத்தில் அச்சேறி வெளியானது.

ஃபெப்ரீசியசின் மொழிபெயர்ப்பு சிறப்பான ஒன்றாக அமைந்ததால் அது தஞ்சாவூரிலும் சென்னையிலும் திருநெல்வேலியின் சில பகுதிகளிலும், குறிப்பாக லூத்தரன் சபையினரிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. எனவே 1813ஆம் ஆண்டு இப்பதிப்பின் 5000 பிரதிகள் செராம்பூரில் அச்சிடப்பட்டன.

உ) இலங்கையில் தமிழ் விவிலியம்


இலங்கையில் 1743இல் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. பழைய ஏற்பாட்டின் முதல் பகுதியாகிய ஐந்நூல்களை (Pentateuch) இலங்கைத் தமிழராகிய பிலிப்பு தெ மெல்லோ (Philip de Mello) மொழிபெயர்த்தார். அது 1790இல் டச்சு ஆளுநரின் பெயரால் அச்சிடப்பட்டது.

ஊ) இரேனியுசையர் விவிலியப் பெயர்ப்பு


சார்லஸ் தியோஃபிலஸ் ஏவால்ட் இரேனியசு (1790-1838) கிறித்தவ மறைபரப்பாளராக 1814இல் இந்தியா வந்தார். 1815இல் கொல்கத்தா விவிலியக் கழகம் ஃபெப்ரீசியசின் மொழிபெயர்ப்பைத் திருத்தியமைத்து வெளியிடக் கருதி, இரேனியசிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இரேனியசு அடிப்படையான சில மொழிபெயர்ப்புத் தத்துவங்களைக் கடைப்பிடித்தார். அவை: எபிரேயம், கிரேக்கம் போன்ற விவிலிய மூல மொழிகளிலிருந்து இலக்குமொழியாகிய தமிழில் விவிலியத்தைப் பெயர்க்கும்போது இலக்குமொழியின் தனித்தன்மையைக் கருத்தில் கொள்ளவேண்டும். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல் என்று மொழிபெயர்க்காமல் மூல மொழியில் சொல்லப்படும் கருத்தை இலக்குமொழியின் பண்புக்கு ஏற்ப எடுத்துக் கூற வேண்டும்.

இந்த அடிப்படையில் இரேனியசு செய்த மொழியாக்கத்தைச் சீர்தூக்கி ஆராய சென்னை விவிலிய சங்கத்தில் துணைக்குழு ஒன்றும் பொதுக்குழு ஒன்றும் இருந்தன. 1824ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் குழுவினர் சென்னையில் கூடி இரேனியசின் மத்தேயு நற்செய்தியை ஆராய்ந்தனர். துணைக்குழு அவரது மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால், 1611இல் உருவான ஜேம்சு மன்னர் ஆங்கில விவிலியத்தை (King James Version) இரேனியசின் தமிழாக்கம் ஒத்திருக்கவில்லை என்று பொதுக்குழு குறைகண்டது. மூலமொழியான கிரேக்கம்தான் மொழிபெயர்ப்பின் அளவுகோலாக இருக்க வேண்டுமென இரேனியசு எடுத்துச்சொன்னார். ஆனால் குழுவினர் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்குப்பின் அவரது புதிய ஏற்பாடும் ஃபெப்ரீசியசின் பழைய ஏற்பாடும் அடங்கிய முழுவிவிலியம் 1840இல் முழுமையாக சென்னையில் அச்சிடப்பட்டது. அச்சின் தரமும் சிறப்பாக அமைந்தது.

எ) இலங்கையில் உருவான பரிசோதனைப் பதிப்பு ("The Tentative Version")

சீகன்பால்க், ஃபெப்ரீசியுசு, இரேனியசு ஆகியோரின் விவிலிய மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து, நான்காவது முயற்சி இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் லேவி ஸ்பால்டிங்கு (Levi Spaulding) என்ற அமெரிக்க மறைபரப்பாளர் முன்னின்றார். முக்கிய பெயர்ப்பாளராக பீட்டர் பெர்சிவல் (Peter Percival) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் தமிழில் அகராதி உருவாக்கிப் புகழ் பெற்றவர். இவரோடு சாமுவேல் ஹச்சிங்க்ஸ் (Samuel Hutchings), ஹோய்சிங்க்டன் (H.R. Hoisington), மிரோன் வின்ஸ்லோ, டேவிட் பூர் (David Poor) முதலியோர் ஒத்துழைத்தனர். தமிழ் நடையைச் சீரமைப்பதில் ஆறுமுக நாவலர் உதவினார். 1840இல் திருப்புதல் பணி தொடங்கி 1848இல் நிறைவேறியது.

இம்மொழிபெயர்ப்பில் பல குறைகள் இருந்ததைச் சென்னை விவிலிய சங்கம் சுட்டிக்காட்டியது. ஜேம்சு மன்னர் ஆங்கிலப் பெயர்ப்பின் முறைப்படி இம்மொழிபெயர்ப்பு அமையவில்லையென்றும், மூலமொழிகளிலிருந்து ஆங்காங்கே பிறழ்வுகள் ஏற்பட்டிருந்தனவென்றும், வடமொழிச் சொற்கள் மிகுந்திருந்தனவென்றும் குறைகாணப்பட்டது. மேலும், கடவுளைக் குறிக்க இம்மொழிபெயர்ப்பில் தேவன் என்னும் சொல் பயன்படுத்தியதையும் பலர் விரும்பவில்லை. இக்காரணங்களால் இம்மொழிபெயர்ப்புக்குத் தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லாமல் போயிற்று.

ஏ) பவர் திருப்புதல் (Bower Version)

சீர்திருத்த சபையார் கண்காணிப்பில் இன்னுமொரு விவிலியத் திருப்புதல் நிகழ்ந்தது. அது பவர் திருப்புதல் (Bower Version) என்று அழைக்கப்படுகிறது.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆக்கப்பட்ட சீகன்பால்கின் மொழிபெயர்ப்பு, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஃபெப்ரீசியுசால் செய்யப்பட்ட அதன் திருத்தம், இரேனியசு செய்த திருத்தம் என்று பல தமிழ் விவிலியத் திருப்புதல்கள் சீர்திருத்த சபைக் கிறித்தவர் நடுவே புழக்கத்தில் இருந்தன. குறிப்பாக, ஃபெப்ரீசியுசின் பெயர்ப்பினை திருநெல்வேலி எஸ்.பி.ஜி. (SPG - Socieyt for the Propagation of the Gospel) சபைகள் சிலவும், தஞ்சை, சென்னை சபைகளும் அனைத்தும், லைப்சிக் லூத்தரன் சபையும் பயன்படுத்தின. இரேனியசின் திருத்தத்தை சி.எம்.எஸ். (CMS - Church Mission Society), எல்.எம்.எஸ். (LMS - London Missionary Society), வெஸ்லியன் சபை (Wesleyan Church), அமெரிக்கன் போர்டு மிஷன் சபை (American Board of Commissioners for Foreign Missions (ABCFM) ஆகியவை பயன்படுத்தின.

இவை தவிர, இலங்கையில் செய்யப்பட்ட பெர்சிவல் திருப்புதலும் பரிசோதனைப் பதிப்பாக இருந்துவந்தது. அது ஃபெப்ரீசியுசு ஆதரவாளர்களுக்கும் பிடிக்கவில்லை, இரேனியசு ஆதரவாளர்களுக்கும் ஏற்புடையதாக இல்லை.

ஃபெப்ரீசியுசு திருப்புதல் ஒருபக்கம், இரேனியுசு திருப்புதல் மறுபக்கம் என்றிருந்ததால், சீர்திருத்த சபைகள் அனைத்தும் ஏற்கும் விதத்தில் ஒரு புதிய திருப்புதல் தேவை என்று உணரப்பட்டது. இது குறித்து சென்னை விவிலிய சங்கம் பல தீர்மானங்களை இயற்றியது. அதாவது, புதிய திருப்புதல் எல்லா முந்தைய திருப்புதல்களின் சிறப்புகளையும் கொண்டதாய் அமைய வேண்டும்; திருப்புதல் குழு ஏற்கப்பட்ட பாடம் (Textus Receptus) என்னும் கிரேக்க புதிய ஏற்பாட்டை மூல பாடமாகக் கொள்ள வேண்டும்; ஃபெப்ரீசியுசு திருப்புதலை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்; எஸ்.பி.ஜி. அமைப்பைச் சார்ந்த மறைபரப்பாளரான ஹென்றி பவர் (1813-1889)என்பவர் முக்கிய மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.

இத்தீர்மானங்களின் அடிப்படையில் ஹென்றி பவர் விவிலியத் திருத்தப் பணியைத் தொடங்கினார். இவர் ஃபிரான்சுவா பூவியே (François Bouvier) என்னும் பிரெஞ்சுப் போர்வீரருக்கும் ஜஸ்டீனா (Justina) என்னும் இந்தியப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தவர். தமிழில் நல்ல புலமை பெற்றவர். 1832-1837 ஆண்டுகளில் இங்கிலாந்தில் கல்வி பயின்றார். இந்தியா திரும்பியபின், 1845இலிருந்து குருவாகப் பணிபுரிந்தார். கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், வடமொழி போன்ற பல மொழிகளைக் கற்ற ஹென்றி பவர் தமிழில் சிறப்பான இலக்கியப் பணி ஆற்றியுள்ளார்.

1858ஆம் ஆண்டு ஹென்றி பவர் விவிலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டு நூல்களை ஒவ்வொன்றாகத் தமிழில் பெயர்த்து அவற்றை மொழிபெயர்ப்புக் குழுவினருக்கும் பிற அறிஞருக்கும் அனுப்பி, அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டார். லூத்தரன் சபை தவிர பிற எல்லா சீர்திருத்த சபைகளும் இம்மொழிபெயர்ப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இராபர்ட் கால்டுவெல், மீரோன் வின்சுலோ போன்ற தலைசிறந்த அறிஞர்கள் மொழிபெயர்ப்பில் உதவினர். யாழ்ப்பாணத்தவர் சில விமரிசனங்களை அனுப்பினர்.

பவர் குழுவினர் உருவாக்கிய புதிய ஏற்பாடு 1864இலும், பழைய ஏற்பாடு 1867இலும் அச்சிடப்பட்டு வெளியாயின. பல கிறித்தவ சபைகள் இணைந்து உருவாக்கியதால் இது ஐக்கிய திருப்புதல் (Union Version) எனவும் அழைக்கப்படுகிறது. லூத்தரன் சபையினர் தவிர ஏனைய சீர்திருத்த சபையினர் இன்றுவரை இம்மொழிபெயர்ப்பைத் தம் வழிபாடுகளின் பயன்படுத்துகின்றனர். லூத்தரன் சபையினர் நடுவே ஃபெப்ரீசியுசின் மொழிபெயர்ப்பு வழங்கிவருகிறது.

பவர் மொழிபெயர்ப்பில் பங்கேற்ற கிறித்தவ மறைபரப்பாளருக்கு உதவியாக முத்தையா பிள்ளை, இராசகோபால ஐயர் ஆகிய தமிழறிஞர்கள் இருந்து தமிழ்நடைக்கு மெருகூட்டினர். முத்தையா பிள்ளை என்பவர் இரட்சணிய யாத்திரிகம் பாடிச் சிறப்படைந்த என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்பவரின் உடன்பிறப்பு என்பது கருதத்தக்கது.

பவர் திருப்பத்திலும் குறைகள் இருந்தன. கடவுளைக் குறிக்க தேவன் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. மோசே, பேதுரு போன்ற விவிலியப் பெருமக்கள் அவன், இவன் என்று குறிக்கப்பட்டனர். மொழிநடையில் ஒருவித அன்னியத் தன்மை காணப்பட்டது. இக்குறைகளை நீக்கும் வண்ணம் புதியதொரு திருப்பம் தேவை என்று உணரப்பட்டது.

ஐ) புதிய சுவடிகள் கண்டுபிடிப்பும் புதிய மொழிபெயர்ப்பின் தேவையும்: லார்சன் திருப்புதல்

பவர் திருப்பத்தில் காணப்பட்ட குறைகளோடு இன்னொரு முக்கிய நிகழ்வும் குறிப்பிடத்தக்கது. விவிலிய பாடங்களை உள்ளடக்கிய பல பழமையான சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததே அந்நிகழ்வு. 4ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த சீனாய்ச் சுவடி (Codex Sinaiticus) 1844இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோலவே, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வத்திக்கான் சுவடி (Codex Vaticanus) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முழுமையாக அச்சேறியது. இன்னொரு பழஞ்சுவடி பேசாவின் சுவடி (Codex Bezae) ஆகும். இச்சுவடிகள் எல்லாம் "ஏற்றுக்கொள்ளப்பட்ட விவிலிய பாடத்திலிருந்து" (Textus Receptus) வேரோட்டமாக மாறுபடவில்லை என்பது உண்மையென்றாலும், பாட வேறுபாடுகளை அறிய மிகவும் பயனுள்ளவை ஆகும்.

எனவே, புதிய தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டும் என்னும் கருத்து எழுந்தது. தமிழில் புலமைபெற்றவரும், பெங்களூரில் இறையியல் பயிற்றுவித்தவருமான எல். ஆர். லார்சன் (L.R. Larsen) என்பவரைத் தலைவராகக் கொண்டு மொழிபெயர்ப்புக் குழு அமைந்தது. லார்சன் டென்மார்க் நாட்டிலிருந்து வந்த மறைபரப்பாளர். அவர் ஜி. எஸ். துரைசாமி பிள்ளை (1883-1965) என்னும் தமிழறிஞரைத் துணையாளராகத் தேர்ந்துகொண்டு 1920இல் மொழிபெயர்ப்பைத் தொடங்கினார்.

தமிழ் நடை, எளிமையோடும் தெளிவாகவும் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பின்னணியில் பவர் திருப்புதல் திருத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் ஒரு சொற்றொடரை நோக்கலாம்.

பவர் திருப்புதல் லார்சன் திருப்புதல்
"மரணமானாலும், ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ் காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டுவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென நிச்சயித்திருக்கிறேன்" (உரோ 8:38-39) "மரணமோ ஜீவனோ தெய்வ தூதரோ, துரைத்தனங்களோ, நிகழ் காரியங்களோ, வருங்காரியங்களோ, வல்லமைகளோ, உயர்வோ, தாழ்வோ வேறெந்த சிருஷ்டியானாலும் சரி, நமது ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள கடவுளின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாதிருக்குமென்று நிச்சயித்திருக்கிறேன்" (உரோ 8:38-39)

ஆனால், லார்சன் திருப்புதல் பலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நல்ல சமாரியன் என்னும் ஏட்டில் தங்கள் எதிர்ப்பைக் கட்டுரை வடிவில் தெரிவித்து வந்தார்கள். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1934இல் வெளியிடப்பட்டன. எதிர்ப்பாளர்களுள் ஈ. ஏசடியான், எஸ்.ஜி. மதுரம் ஐயர், எஸ். பரமானந்தம் ஐயர், அருள் தங்கையா ஐயர், ஜியார்ஜ் எஸ். வேதநாயகம் ஐயர் போன்ற மறைபரப்பாளர் அடங்குவர். அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள்:

 • பவர் திருப்புதலுக்கும் ஜேம்சு அரசன் திருப்புதலுக்கும் ஆதாரமாக இருந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்தை லார்சன் திருப்புதல் கைவிட்டுவிட்டு, நம்பிக்கையான மூலங்களாக அல்லாத சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளை ஆதாரமாகக் கொண்டது.
 • லார்சன் பல வசனங்களை விட்டுவிட்டு, சிலவற்றைச் சேர்த்துவிட்டு, அல்லது மாற்றிவிட்டு தம் திருப்புதலைச் செய்துள்ளார்.
 • உரோமன் கத்தோலிக்க சபை ஆதரவாளரை லார்சன் பின்பற்றுகிறார்.

மேற்கூறிய காரணங்கள் ஆதாரமற்றவை. ஆனால் அவற்றின் அடிப்படையில் மக்கள் லார்சன் திருப்புதலை ஏற்கமுடியாது என்று கருத்துத் தெரிவித்தனர்.

லார்சன் திருப்புதல் தேவன் என்னும் சொல்லுக்குப் பதில் கடவுள் என்னும் சொல்லைப் பயன்படுத்தியது. பராபரன் என்னும் சொல்லைப் பயன்படுத்திய லூத்தரன் சபை இதை ஏற்றது. லார்சன் திருப்புதலில் பல நூற்பெயர்கள் வடமொழியில் அமைந்ததும் குறையாகிப்போய்விட்டது. நாளாகமம், உன்னதப்பாட்டு, புலம்பல், வெளிப்படுத்தின விசேஷம் என்னும் பெயர்கள் லார்சன் திருப்புதலில் முறையே தினவர்த்தமானம், கீதகீதம், பிரலாபப் பாடல், தரிசனம் என்று ஆயின.

ஒ) இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த புதிய விவிலியத் திருப்புதல்கள்

மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத லார்சன் விவிலிய மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டாலும், அதில் இருந்த சிறப்புக் கூறுகளைத் தக்கவைத்துக்கொண்டு, பவர் திருப்புதலின் நடையைப் பின்பற்றி ஒரு புதிய திருப்புதல் உருவாக்க வேண்டும் என்று விவிலிய சங்கம் தீர்மானித்தது. மொழிபெயர்ப்புக்குப் பொறுப்பாக மோனகன் (C.H. Monahan) என்பவர் நியமிக்கப்பட்டார். அயர்லாந்தைச் சேர்ந்த இவர் விவிலிய மூல மொழிகளிலும் இலத்தீனிலும் தேர்ச்சிபெற்றவர். லார்சன் குழுவிலும் பங்கேற்றவர். நெல்லைப் பேராயர் ஸ்டீபன் நீல் (Stephen Neill) இம்முயற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். குழுவில் ஜே. எஸ். மாசிலாமணி, அருள் தங்கையா, எஸ். தேவப்பிரசாதம் போன்ற கிறித்தவத் தமிழ் மறைபரப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இம்மொழிபெயர்ப்பு நடக்கும் வேளையிலேயே பவர் திருப்புதல் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தார்கள். விவிலியச் சுவடிகளில் பாட வேறுபாடுகள் சில உள்ளன என்னும் கருத்தே சிலருக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. தனித்தமிழ் இயக்கம் தீவிரமடைந்த அந்நாள்களில் விவிலியப் பெயர்ப்பு தனித்தமிழில் அமையவேண்டுமா என்னும் விவாதமும் நிகழ்ந்தது. வடசொற்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை என்றொரு கருத்தும் நிலவியது. மொழிபெயர்ப்பு 1949இல் நிறைவுற்றது. 1954இல் நூல் அச்சேறியது.

மோனகன் திருப்புதல் கவனமாகச் செய்யப்பட்ட போதிலும், அதில் ஆங்காங்குச் சில அச்சுப் பிழைகளும் வேறுவகையான பிழைகளும் புகுந்துவிட்டன. அப்பிழைகளைத் திருத்துவதற்கென 1961இல் டி. இராஜரீகம் என்பவர் தலைமையில் ஒரு சிறு குழு உருவாக்கப்பட்டது. திருத்தப்பெற்ற புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளியாயின. இலக்கணப் பிழைகள் தவிர்க்கப்பட்டன; நீண்ட வாக்கியங்கள் இன்றி, சிறு வாக்கிய அமைப்புமுறை கடைப்பிடிக்கப்பட்டது. சொற்றொடர்களும் பெரும்பாலும் தெளிவாகவும் எளிமையோடும் அமைந்தன.

தனித்தமிழ் வழக்கு மோனகன் திருப்பத்தில் உண்டு என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்: "மத்தேயு எழுதின சுவிசேஷம்" மத்தேயு எழுதிய அருட்செய்தி நூல் என்றும், "வேதபாரகர்", "அப்போஸ்தலர்", "தீர்க்கதரிசி", "போர்ச்சேவகர்", "கிருபை" என்ற சொற்கள் முறையே வேத அறிஞர், திருத்தூதுவர், இறைவாக்கினர், படைவீரர், பேரிரக்கம் என்றும் மாறின. விசுவாசம் என்னும் சொல் தவிர்க்கப்பட்டு, பல இடங்களில் நம்பிக்கை என்று மாற்றப்பட்டது.

ஓ) தனியார் மொழிபெயர்ப்புகள்

மேலே குறிக்கப்பட்ட விவிலிய மொழிபெயர்ப்புகளும் திருப்புதல்களும் திருத்தங்களும் கிறித்தவ சபைகளின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றன. சில தனியார்களும் விவிலியத்தைத் தமிழில் பெயர்ப்பதில் ஈடுபட்டுப் பெரும் பணி ஆற்றியுள்ளனர்.

அருள்திரு ஞானப்பிரகாசம் என்பவர் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தா ஒய்.எம்.சி.ஏ. அச்சகத்தில் 1932இல் அச்சிடப்பட்டது.

1950களில் அருள்திரு எச்.டி. ஜெபஞானம் என்பவர் மாற்கு நற்செய்தியை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

கத்தோலிக்க கிறித்தவ சபை வெளியிட்ட விவிலியத் தமிழ் பெயர்ப்புகள்[தொகு]

விவிலியத்தைத் தமிழில் பெயர்ப்பதற்குக் கத்தோலிக்க கிறித்தவர்கள் மேற்கொண்ட முதல்முயற்சிகள் மேலே குறிக்கப்பட்டன. தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்தவ மறை போர்த்துகீசியர் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆங்காங்கே பரவியிருந்தது. மயிலாப்பூரில் புனித தோமா திருத்தூதரின் கல்லறைக்கு மார்க்கோ போலோ, மோந்தே கொர்வீனோ, மரிஞ்ஞோல்லி போன்ற மேலை நாட்டுக் கிறித்தவர்கள் திருப்பயணமாகச் சென்ற வரலாற்றுச் செய்தி உண்டு. போர்த்துகீசியர் இந்தியா வந்தபோது அங்கே கிறித்தவர்கள் ஏற்கனவே இருந்தார்கள் எனக் கண்டு அவர்கள் வியந்ததும் உண்டு.

அ) கத்தோலிக்க தமிழ் விவிலியப் பெயர்ப்புக்குப் பின்னணி

இருப்பினும், 1498இல் போர்த்துகீசியர் இந்தியாவோடு வணிகத் தொடர்பு ஏற்படுத்திய பின்னரே கிறித்தவ சமயத்தைப் பரப்பத் தொடங்கினார்கள். சோழமண்டலக் கடற்கரையில் மீன்பிடிக்கும் தொழிலிலும் முத்துக்குளித்தலிலும் ஈடுபட்டிருந்த பரவர் இனத்தவர் மிகப்பெரும் அளவில் கத்தோலிக்க கிறித்தவ மறையைத் தழுவினார்கள். அவர்கள் நடுவே போர்த்துகீசிய மறைபரப்பாளர் பணி செய்தனர். அவர்களுள் புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) (இந்தியா/தமிழகம்: 1542-1549); என்றீக்கசு ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். பரவ இனக் கிறித்தவர்களுக்குக் கிறித்தவ சமயப் போதனைகளை வழங்க சவேரியாரும் என்றீக்கசும் தமிழில் நூல்கள் உருவாக்கினர். ஓலைச்சுவடிகளில் கிறித்தவ இறைவேண்டல்களும் போதனைச் சுருக்கமும் எழுதப்பட்டு மக்களிடையே பரவின. தம்பிரான் வணக்கம் (1578), கிரிசித்தியானி வணக்கம் (1579), பாவ அறிக்கை நூல் (1580), அடியார் வரலாறு (1586) போன்ற நூல்கள் கொச்சியிலும் கொல்லத்திலும் அச்சிடப்பட்டு, மறைபரப்ப துணையாயின.

திருப்பலியின்போதும், பிற அருளடையாளங்களை நிறைவேற்றும்போதும் அறிக்கையிடும் பொருட்டு விவிலியப் பகுதிகள், குறிப்பாக நற்செய்தி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் அவை அச்சேற்றப்பட்டதாக ஆதாரம் இல்லை; கையெழுத்துப் படிகளாகவே இருந்தன. இவற்றை சீகன்பால்க், ஷூல்ஸ் (சூல்சு) போன்ற பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தி, விவிலியத்தைத் தமிழில் ஆக்கி அச்சேற்றினர்.

ஆ) தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்தவத்தின் தேக்கநிலை (1700-1850)

கத்தோலிக்கர் நடுவே விவிலியம் தமிழில் 17-19 நூற்றாண்டுகளில் அச்சிடப்படாமைக்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு. அக்காலத்தில் கத்தோலிக்க கிறித்தவம் தமிழகத்தில் பரவுவதற்கு போர்த்துகீசிய மறைபரப்பாளரே பொறுப்பேற்றிருந்தனர். அவர்கள் போர்த்துகல் நாட்டின் ஆதரவோடு செயல்பட்டனர். 1498இல் வாஸ்கோதகாமா இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து கடல்வழி கண்டுபிடித்து, கோழிக்கோட்டில் வந்து இறங்கியதிலிருந்து போர்த்துக்கல் இந்திய நாட்டில் வணிகத்தளங்கள், கோட்டைகள் நிறுவத் தொடங்கியது. மறைபரப்பாளர்கள், குறிப்பாக இயேசு சபைத் துறவியர் கத்தோலிக்க கிறித்தவத்தைப் பரப்பத் தொடங்கினர். கோவா, கொச்சி, கொல்லம், பழவேற்காடு, தூத்துக்குடி போன்ற கடலோர நகரங்களில் அவர்கள் காலூன்றினர். அச்சுப்பொறிகள் கோவா, கொச்சி, கொல்லம், புன்னைக்காயல் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டாலும் தமிழில் சில நூல்களே அச்சிடப்பட்டன. 1578-1586 ஆண்டுகளிலும், பின்னர் 1677-1678 ஆண்டுகளிலும் சில நூல்கள் அச்சிடப்பட்டன.

ஆனால், 1605இல் டச்சு நாட்டவர் இந்தியாவில் வணிகத் தளங்கள் ஏற்படுத்தினர். அவர்களும், 1612இல் இந்தியா வந்த பிரித்தானியரும் படிப்படியாகப் போர்த்துகீசிய ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொணர்ந்தனர். இதனால் போர்த்துகீசிய ஆதரவு தமிழ் கத்தோலிக்க நூல் வெளியீட்டுக்கு இருக்கவில்லை. போர்த்துகீசியர் கத்தோலிக்க கிறித்தவத்தை ஆதரித்தனர். ஆனால் அவர்களுக்குப் பின் இந்தியா வந்த டேனியர், டச்சு நாட்டவர், பிரித்தானியர் போன்றோர் சீர்திருத்த கிறித்தவ சபைகளைச் சார்ந்தவர்கள். அவர்கள் காலத்தில் கத்தோலிக்க கிறித்தவர்களின் சமய நூல்கள் வெளிவர வாய்ப்பு இல்லாமல் போனது. விதிவிலக்காக, லூத்தரன் சபையினரான தரங்கம்பாடி மறைபரப்பாளர்கள் கத்தோலிக்கரான வீரமாமுனிவரின் கொடுந்தமிழ் இலக்கணத்தையும் அகராதியையும் அச்சிட்டு வெளியிட்டதைக் குறிப்பிடலாம்.

கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தமிழகத்தில் பரப்புவதிலும், தமிழ்ப்பணி புரிவதிலும் முன்னின்று செயல்பட்ட இயேசு சபை ஐரோப்பாவில் 1773ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது தமிழ் அச்சுப் பணிக்கு ஒரு பேரிடியாயிற்று. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, 1814இல் தான் மீண்டும் இயேசு சபை செயல்படத் தொடங்கியது. அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் கத்தோலிக்க மறைப்பணியும் மொழிப்பணியும் மிகவும் தளர்ச்சியுற்றன.

இ) கத்தோலிக்கரின் அச்சுப் பணி மறுமலர்ச்சியடைதல்: முதல் தமிழ் விவிலியம் அச்சிடப்படுதல்

”பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சங்கம்” (Paris Foreign Missions) என்றொரு அமைப்பு இயேசு சபையினர் ஆற்றிவந்த மறைப்பணியைத் தொடர்ந்தது. இச்சங்கத்தைச் சார்ந்த ஆயர் கிளெமாந்து பொனாந்து (Clément Bonnand, 1796-1861) என்பவரின் தலைமையின்கீழ் புதிய ஏற்பாடு நூல்களாகிய நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் என்னும் நூலும் தமிழில் பெயர்க்கப்பட்டு பாண்டிச்சேரி மிஷன் அச்சகத்தால் 1857இல் வெளியிடப்பட்டன.

இயேசு சபை மறைத் தொண்டர் இழான்-பத்தீட்டு திரிங்கால் (Jean-Baptiste Trincal 1815-1892) என்பவர் 1855ஆம் ஆண்டளவில் மதுரையில் மறைப்பணி ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் பெயர்க்கத் தொடங்கினார். அது 1891இல் புதுவையில் அச்சேறியது. மேலும் திரிங்கால் விவிலியச் செய்தியின் சுருக்கம் ஒன்றினையும் சத்தியவேத சரித்திர சங்க்ஷேபம் என்னும் பெயரில் வெளியிட்டார். திரிங்கால் வெளியிட்ட இன்னொரு சிறப்பான விவிலியப் படைப்பு யேசுக் கிறிஸ்து நாதருடைய பரிசுத்த சுவிசேஷப் பொருத்தம் (Concordance of Four Gospels) என்பதாகும். இதில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனையையும் விவரிக்கின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களின் பகுதிகளும் அருகருகே வைக்கப்பட்டு, ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக அமைந்தன.

பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சங்கத்தைச் சேர்ந்த பொத்தேரோ என்பவர் தலைமையில் சத்திய வேத ஆகமம் என்னும் தலைப்பில் 1904ஆம் ஆண்டு பழைய ஏற்பாட்டின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. இவரே 1910இல் பழைய ஏற்பாட்டின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார். இந்த விவிலியம் வுல்காத்தா (Vulgata = Vulgate) என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பெயர்க்கப்பட்டது.

ஈ) கிரேக்க மூலத்திலிருந்து தமிழ் விவிலியப் பெயர்ப்பு

1956இல் பெங்களூரு தூய பேதுரு குருத்துவக் கல்லூரியின் விவிலியப் பேராசிரியரும் பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சங்கத்தைச் சேர்ந்தவருமான லூசியேன் லெக்ராந்து (Lucien Legrand) என்பவரின் தலைமையில் புதிய ஏற்பாடு கிரேக்க மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது 1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நல்ல, தெளிவான தமிழில் அமைந்த இந்த மொழிபெயர்ப்பு தமிழ்க் கிறித்தவரிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில் 1904இல் மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு மொழிநடையில் திருத்தம் செய்யப்பட்டது. அது பரிசுத்த வேதாகமம் என்னும் பெயரில் 1973ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தினரால் வெளியிடப்பட்டது. 1974ஆம் ஆண்டுமுதல் இந்த விவிலியம் திண்டிவனம் தமிழ்நாடு கத்தோலிக்க மையத்திலிருந்து (TNBCLC) வெளியிடப்பட்டு வந்தது.

அனைத்து கிறித்தவ சபைகளுக்கும் பொதுவான தமிழ் மொழிபெயர்ப்பு[தொகு]

17ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் கத்தோலிக்க திருச்சபையும் சீர்திருத்தசபைகளும் தமக்கென்று தனித்தனி விவிலிய மொழிபெயர்ப்புகளை உருவாக்கியிருந்தன. அச்சபைகளுக்கிடையே அதிக ஒத்துழைப்பும் இருக்கவில்லை. இந்நிலை 1970களிலிருந்து மாறத் தொடங்கியது. கிறித்தவ சபைகள் தமக்குள் உறவுகளை வளர்ப்பதிலும் ஒன்றிணைந்து செயல்படுவதிலும் ஆர்வம் காட்டின.

அ) இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் (1962-1965) அளித்த ஆதரவு

கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்த மட்டில் 1962இலிருந்து 1965 வரை நடந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கிறித்தவ ஒன்றிப்புக்கு ஆக்கப்பூர்வமான உந்துதல் அளித்தது. விவிலியத்தை மொழிபெயர்ப்பதில் கத்தோலிக்க சபை பிற கிறித்தவ சபைகளோடு இணைந்து பொது மொழிபெயர்ப்புகளை வெளிக்கொணர்வதற்கு வத்திக்கான் சங்கம் ஊக்கம் தந்தது. சங்கத்தின் கருத்துப்படி,

இதன் அடிப்படையில் தமிழகக் கத்தோலிக்க திருச்சபை விவிலியத்தைப் பிற கிறித்தவ சபைகளின் ஒத்துழைப்போடு மொழிபெயர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்தது. தமிழகக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் (Tamil Nadu Catholic Bishops' Council) இந்திய வேதாகமச் சங்கமும் (Bible Society of India) ஒன்றிணைந்து, விவிலியத்தின் மூல மொழிகளான எபிரேயம், கிரேக்கம் ஆகியவற்றிலிருந்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணியை 1972இல் தொடங்கின. கத்தோலிக்க கிறித்தவ சபையையும் சீர்திருத்த சபைகளையும் உள்ளடக்கிய மொழிபெயர்ப்புக் குழுவில் 35 விவிலிய அறிஞர்கள் பங்கேற்றனர். மேலும் 84 விவிலிய, மற்றும் தமிழ் அறிஞர்கள் திருத்தப் பணியில் உதவி செய்தனர். முன்னோட்டப் பதிப்புகள் வழியாக ஆயிரக்கணக்கானோரின் கருத்துகள் வரவேற்கப்பட்டு, தரமானவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இருபத்திரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இம்மொழிபெயர்ப்புப் பணியும் அச்சுப்பணியும் 1995இல் நிறைவேறியது. திண்டிவனத்தில் அமைந்துள்ள தமிழக கத்தோலிக்க நடுநிலையமும் (TNBCLC), அனைத்துலக வேதாகம சங்கமும் (United Bible Society - USB) இணைந்து, 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் மதுரையில் இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என அழைக்கப்படுகிறது.[1]

வத்திக்கான் தோற்சுவடி. கிரேக்க மூலம். காலம்: நான்காம் நூற்றாண்டு. காப்பிடம்: வத்திக்கான் அரும்பொருளகம்

ஆ) திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு): சிறப்புக் கூறுகள்

 • விவிலியச் சங்கங்களின் இணையமும் (United Bible Societies) வத்திக்கான் நகரில் அமைந்துள்ள கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் (Secretariate for Christian Unity) இணைந்து 1968இல் வெளியிட்ட பொது மொழிபெயர்ப்பு செய்யும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு திருவிவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
 • விவிலிய நூல்கள் எழுதப்பட்ட எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூல மொழிகளினின்று நேரடியாகத் தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்வதில் பல்வேறு திருச்சபை மரபுகளைச் சேர்ந்த விவிலிய, மற்றும் தமிழ் அறிவில் சிறந்த வல்லுநர்கள் பங்கேற்றனர்.
 • பழைய ஏற்பாடு, எபிரேய பாடமான பிபிலியா எபிராயிக்கா நூலையும் (Biblia Hebraica, Stuttgart Edition - Masoretic Text), புதிய ஏற்பாடு, விவிலியச் சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, USB, third edition) சார்ந்து மொழிபெயர்க்கப்பட்டன.
 • விவிலியத் திருமுறையை (Biblical Canon) சார்ந்தவையாக கத்தோலிக்கர் மட்டுமே ஏற்கின்ற சில (பழைய ஏற்பாட்டு) நூல்கள் அல்லது நூற்பகுதிகள் இணைத்திருமுறை நூல்கள் என அழைக்கப்பட்டு, பழைய ஏற்பாட்டு நூல்களுக்கும் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கும் இடையே சேர்க்கப்பட்டன.
 • தொன்மையும் தரமுமான மூலபாடங்களையே அடிப்படையாகக் கொண்டாலும், மரபு மொழிபெயர்ப்புகளுக்கு மதிப்புத் தரும் வகையில் சில இடங்களில் காலத்தால் பின்னைய பாடங்களும் இடம்பெறுகின்றன. அவை சதுர அடைப்புக்குறிக்குள் இடப்பட்டுள்ளன.
 • ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் மொழிபெயர்க்கத்தக்க சொற்றொடர்கள் வருமிடத்து, மாற்று மொழிபெயர்ப்புகள் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன. மூலச்சொல்லின் பொருள் தெளிவில்லாதபொழுது, பழங்கால மொழிபெயர்ப்புகள், இணைமொழிச் சொற்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்விடத்து மூலச்சொல்லின் பொருள் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது.
 • நீண்ட ஆய்வுக் குறிப்புகளும் விவாதத்துக்குரிய கொள்கை விளக்கங்களும் அடிக்குறிப்புகளில் தவிர்க்கப்படுகின்றன.
 • ஒவ்வொரு நூலிலும் முன்னுரை, துணைத் தலைப்புகள், இணைவசனங்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவை நூல்களைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும்.
 • எல்லாக் கிறித்தவ சபைகளும் பயன்படுத்துவதற்காக உருவான இம்மொழிபெயர்ப்பில் இயல்பான, தரமான, எளிய தமிழ்மொழிநடை இடம் பெற்றுள்ளது. தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு (Dynamic Equivalence) முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வழக்கற்ற சொற்களும், திசைச் சொற்களும் இயன்றவரை தவிர்க்கப்பட்டுள்ளன.
 • கவிதைப்பகுதிகள் முடிந்தவரை கவிதை நடையில் அமைக்கப்பெற்றாலும் பொருள்தெளிவே இன்றியமையாததாகக் கருதப்பட்டுள்ளது.
 • விவிலியத்தில் வருகின்ற ஆள்கள், இடங்கள் போன்றவற்றைக் குறிக்கும் மூலமொழிப் பெயர்ச்சொற்கள் அனைத்தும் ஒலிபெயர்ப்பே செய்யப்பட்டுள்ளன. அவை தமிழில் ஒலிப்பதற்கு எளிமையான, இனிமையான வடிவம் பெற்றுள்ளன.
 • நீட்டலளவைகளுக்கும் நிறுத்தலளவைகளுக்கும் பல இடங்களில் தற்கால வழக்கிலுள்ள மெற்றிக்கு இணை வழங்கப்பட்டுள்ளது.
 • மரபு காரணமாக, விவிலியத்தின் முதல் ஐந்து நூல்கள் (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) கிரேக்கவழி தலைப்புகளையும், மற்ற எல்லா நூல்களும் எபிரேயவழி தலைப்புகளையும் கொண்டுள்ளன.
 • விவிலியத்தில் அடங்கியுள்ள அனைத்து நூல்களின் வசன எண்கள் உலகப் பொது வழக்கு மொழிபெயர்ப்புகளின் (Standard Versions) அடிப்படையில் அமைந்துள்ளன.
 • தமிழின் சிறப்புப் பண்பான மரியாதைப் பன்மையை (Honorific Plural) மனதிற்கொண்டு விவிலியத்தில் பெரும்பாலோர்க்கும் மரியாதைப் பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது. இறைத்திட்டத்திற்கு எதிரானவரைக் குறிப்பிடும்போதும், பழித்துரைக்கும் சூழலிலும், நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்தும் போதும் மரியாதைப் பன்மை தவிர்க்கப்படுகிறது.
 • இரு பாலார்க்கும் பொதுவான கருத்துகள் மூலநூலில் ஆண்பால் விகுதி பெற்று வந்தாலும் இரு பாலார்க்கும் பொருந்தும் முறையில் (Inclusive Language) தமிழ் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மூல மொழியிலும் தமிழ் மொழியிலும் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வு களையப்பட்டு, சமத்துவ உணர்வு வெளிப்படுகிறது.
 • இம்மொழிபெயர்ப்பின் தமிழ் நடையும் மொழிப் பயன்பாடும் இன்றைய வழக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளன. கிறித்தவர் நடுவே வழங்கிவந்த வடமொழிச் சொற்கள் மற்றும் மூலமொழி வடிவங்கள் நல்ல தமிழில் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஞானஸ்நானம் (திருமுழுக்கு), அபிஷேகம் (அருள்பொழிவு), அப்போஸ்தலர் (திருத்தூதர்), பரிசுத்த (தூய) முதலியவற்றைக் கூறலாம்.
 • பொருள் துல்லியம், தெளிவு, எளிமை, மக்கள் மொழிநடை, மனித நேயம், இருபால் சமத்துவநோக்கு ஆகியவற்றைக் கண்முன் கொண்டு செய்யப்பட்ட இம்மொழியாக்கம் கிறித்தவ சமுதாயத்திற்கும் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதற்கும் பயன் நல்கும் நோக்கத்தோடு அச்சிடப்பட்டுள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு), வெளியீடு: தமிழ்நாடு கத்தோலிக்க நடுநிலையம், திண்டிவனம், 1995.
 2. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தமிழ் மொழிபெயர்ப்பு, "இறை வெளிப்பாடு", எண் 22 (பதிப்பு: தேடல் வெளியீடு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2001).
 3. திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு), மேற்குறிப்பு, முன்னுரை.

ஆதாரங்கள்[தொகு]

 • திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு), வெளியீடு: தமிழ்நாடு கத்தோலிக்க நடுநிலையம், திண்டிவனம், 1995.
 • சபாபதி குலேந்திரன், கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு, இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூரு, 1967.
 • சரோஜினி பாக்கியமுத்து, விவிலியமும் தமிழும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 1990; 2000 (திருத்திய இரண்டாம் பதிப்பு).
 • அ. பீட்டர் அபீர், ஆ. அலோசியஸ் சேவியர், விவிலியம் ஓர் அறிமுகம் (திருவிவிலிய விளக்கம் 1, கிறித்தவ ஒன்றிப்பு உரை), அருள்வாக்கு மன்றம், திருச்சி; தமிழ் இறையியல் நூலோர் குழு, அரசரடி, மதுரை, 2005.
 • தமிழ் வேதாகம வரலாறு பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம், 2010

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விவிலியம்&oldid=3637267" இலிருந்து மீள்விக்கப்பட்டது