உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான் மகமுட் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் மகமுட் சா
Mahmud Shah
மலாக்காவின் 8-ஆவது சுல்தான்
ஆட்சிமலாக்கா சுல்தானகம்:
1488 – 1511
1513 - 1528
முன்னிருந்தவர்சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
பின்வந்தவர்சுல்தான் அகமட் ஷா
துணைவர்1. பகாங் இளவரசி
Princess of Sultan of Pahang
2. ஓனாங் கெனிங் இளவரசி
Princess Onang Kening
3. துன் தேஜா இரத்தின மங்களா
Tun Teja Ratna Menggala
4. துன் குடு
Tun Kudu
5. துன் பாத்திமா
Tun Fatimah
வாரிசு(கள்)1. அலாவுதீன் ரியாட் ஷா II
2. முசபர் ஷா I
3. சுல்தான் அகமட் ஷா
மரபுமலாக்கா சுல்தானகம்
தந்தைசுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
இறப்பு1528
பிந்தான் தீவு
சமயம்இசுலாம்

சுல்தான் மகமுட் சா (மலாய் மொழி: Sultan Mahmud Shah ibni Almarhum Sultan Alauddin Riayat Shah; ஆங்கிலம்: Sultan Mahmud Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் எட்டாவது அரசர். இவர் சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷாவின் மகன் ஆவார். 1488-ஆம் ஆண்டில் இருந்து 1511-ஆம் ஆண்டு வரை மலாக்காவை ஆட்சி செய்தவர்.

அடுத்ததாக அவருடைய மகன் சுல்தான் அகமட் ஷா ஆட்சி செய்தார். அவருக்குப் பின்னர், நாடு கடந்த அரசராக 1513-ஆம் ஆண்டில் இருந்து 1528-ஆம் ஆண்டு வரையில் மலாக்கா சுல்தான் என பொறுப்பு வகித்தார்.[1]:246

ஒரு மன்னராக இருந்த போது, இவர் ஓர் இரக்கமற்ற ஆட்சியாளராக வாழ்ந்தார் என்று அறியப் படுகிறார். 1511-ஆம் ஆண்டு போர்த்துகீசியரால் மலாக்கா கைப்பற்றப்பட்டது. ஒரு நூற்றாண்டு கால மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு சுல்தான் மகமுட் ஷா பிந்தான் தீவுக்குச் (Bintan Island) சென்றார். அங்கு ஒரு சிறிய கூட்டமைப்பின் தலைவரானார்.

1510-களின் பிற்பகுதியில் மலாக்காவில் இருந்த போர்த்துகீசியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்தார். 1526-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் பிந்தான் தீவுக்குப் படை எடுத்துச் சென்று சுல்தான் மகமுட் ஷாவைப் பழிவாங்கினர். அதன் பிறகு, சுல்தான் மகமுட் ஷா, ரியாவுக்கு தப்பிச் சென்று, அங்கு 1528-ஆம் ஆண்டில் காலமானார்.

வரலாறு

[தொகு]

சுல்தான் மகமுட் ஷாவுக்குப் பல மனைவிகள் இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் துன் தேஜா (Tun Teja). இவரின் ஆட்சியின் போது ஆங் துவா (Hang Tuah), கோயா அசான் (Khoja Hassan), ஆங் நாடிம் (Hang Nadim) போன்ற திறமையான மனிதர்கள் அவருக்கு உதவியாக இருந்தார்கள்.

இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.

  1. சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா II
  2. முசபர் ஷா I
  3. சுல்தான் அகமட் ஷா

இவர்களில் முசபர் ஷா I என்பவர், பின்னர் காலத்தில் பேராக் சுல்தானகத்தை உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் ஷா II என்பவர் ஜொகூர் சுல்தானகத்தை உருவாக்கினார்.

லேடாங் இளவரசி

[தொகு]

சுல்தான் மகமுட் ஷா, லேடாங் இளவரசி புராணக்கதையுடன் (மலாய்: Legenda Puteri Gunung Ledang; ஆங்கிலம்: Legend of Gunung Ledang) தொடர்பு உடையவர். லேடாங் இளவரசியாரின் எல்லா நிபந்தனைகளையும் சுல்தான் மகமுட் ஷாவினால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், லேடாங் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.[2]

பெண்டகாரா துன் பேராக்

[தொகு]

அவரின் தந்தையாரின் அகால மரணத்திற்குப் பிறகு, அவர் மிக இளம் வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அந்த நேரத்தில் துன் பேராக் என்பவர் பெண்டகாராவாக இருந்தார். சுல்தான் மகமுட் ஷாவுக்குப் பாதுகாவலராகவும் இருந்தார்.

அவரின் இளமைப் பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளில், ஓர் இரக்கமற்ற மன்னராக அறியப்பட்டார். இருப்பினும் சுல்தானகத்தின் நிர்வாகம்; திறமையும் ஞானமும் மிக்க பெண்டகாரா துன் பேராக்கின் கைகளில் இருந்தது. 1498-இல் துன் பேராக் இறந்த பிறகு, அவருக்குப் பதிலாக புதிய பெண்டகாரா துன் முத்தாகிர் (Bendahara Tun Mutahir) பதவிக்கு வந்தார்.

பெண்டகாரா துன் முத்தாகிர்

[தொகு]

துன் பேராக்கின் மரணம் சுல்தான் மகமுட் ஷாவை மிகவும் பொறுப்பான ஆட்சியாளராக மாற்றியது. இருப்பினும் இறுதி ஆண்டுகளில் அவரின் ஆட்சி கொந்தளிப்பாக மாறியது. அவரின் நிர்வாகம் பயனற்றதாகவும் பலவீனமாகவும் இருந்ததால், துன் முத்தாகிர் லஞ்சம் வாங்கி, அமைச்சர்களுக்கு சலுகைகள் காட்டினார். அதனால் நிர்வாகம் மேலும் சீர்குலைந்தது.

இது அமைச்சர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக சுல்தான் மகமுட் ஷா, பெண்டகாரா துன் முத்தாகிரையும் அவரின் முழுக் குடும்பத்தையும் தூக்கிலிட்டுக் கொன்றார்.[3]

துன் முத்தாகிர் தன் மகள் துன் பத்திமாவை, சுல்தான் மகமுட் ஷாவிற்குத் திருமணம் செய்து கொடுக்க இணக்கம் தெரிவிக்காததால் துன் முத்தாகிரின் மீது பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது. தவிர அமைச்சர்களுக்கு இடையிலான அதிகாரப் போராட்டம் இறுதியில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தது. சுல்தான் மகமுட் ஷாவின் ஆட்சியும் தடுமாற்றம் கண்டது.

சுல்தான் அகமட் ஷா

[தொகு]

ராஜா முதலியாரின் பேச்சைக் கேட்டு பெண்டகாரா துன் முத்தாகிரையும் அவரின் குடும்பத்தைரையும் கொன்றது தவறு என சுல்தான் மகமுட் ஷா பின்னர் உணர்ந்து சுல்தான் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் அகமட் ஷா பதவிக்கு வந்தார். சுல்தான் அகமட் ஷா என்று அழைக்கப்பட்டார்.

இருப்பினும் மலாக்காவைப் போர்த்துகீசியர்களிடம் இருந்து மீட்க முடியாத காரணத்தினால், 1513-ஆம் ஆண்டில், அவரின் தந்தையார் சுல்தான் மகமுட் ஷாவினால், சுல்தான் அகமட் ஷா கொல்லப்பட்டார்.

போர்த்துகீசியர்களுடன் மோதல்கள்

[தொகு]

இதற்கிடையில், 1509 - 1510-ஆம் ஆண்டுகளில் போர்த்துகீசியக் கடல் தளபதி லோபெஸ் டி செக்குயிரா மலாக்காவிற்கு வருகை தந்த போது, அவரைக் கொலை செய்ய சுல்தான் மகமுட் ஷா திட்டமிட்டார்.

இருப்பினும், செக்குயிரா அந்தக் கொலைச் சதியை அறிந்து கொண்டு, மலாக்காவை விட்டு வெளியேறினார். தன்னுடைய பாதுகாவலர்கள் சிலரையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட அபோன்சோ டி அல்புகெர்க் (Afonso de Albuquerque) எனும் மற்றொரு போர்த்துகீசியக் கடல் தளபதி கோவாவில் இருந்து மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார்.[4]

மலாக்கா கடல்கரையில் போர்

[தொகு]

மலாக்காவின் மீது படை எடுத்தார்.[5] போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் 40 நாட்கள் நடந்தது. 1511 ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது. மலாக்கா வீழ்ச்சி அடைந்தது.[6]

சுல்தான் மகமுட் ஷா, மலாய் தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்த பகாங்கிற்கு தப்பிச் சென்றார். அங்கு இருந்து சீனா நாட்டின் உதவியைப் பெறுவதற்கு முயற்சிகள் செய்தார். எனினும் உதவிகள் கிடைக்கவில்லை.

பிந்தான் தீவு

[தொகு]

பின்னர் சுல்தான் மகமுட் ஷா, சிங்கப்பூரின் தென்கிழக்கே இருந்த பிந்தான் தீவிற்குச் சென்றார். பிந்தான் தீவு இப்போது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக உள்ளது.

சுற்றுப்புற மாநிலங்களில் இருந்த ஆட்சியாளர்கள், அவரை மலாக்காவின் ஆட்சியாளராக மதிப்பு கொடுத்து, மரியாதை கொடுத்து, தொடர்ந்து உதவிகள் செய்து வந்தனர். அவர் பிந்தான் தீவில் ஒரு மலாய் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவராக ஆனார்.

சுல்தான் மகமுட் ஷாவின் தாக்குதல்கள்

[தொகு]

அதே வேளையில் போர்த்துகீசியர்களை எதிர்த்து, சுல்தான் மகமுட் ஷா, 1515 முதல் 1519 வரை பல தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியுற்றன.

பிந்தான் தீவில் இருந்த சுல்தான் முகமது ஷாவை அடக்குவதற்கு போர்த்துகீசியர்கள் தீவிரமாகக் களம் இறங்கினார்கள். பிந்தான் தீவில் சுல்தான் முகமது ஷா இருக்கும் வரையில் தங்களுக்கு ஆபத்து என்பதையும் உணர்ந்தார்கள்.

பிந்தான் தீவு தீக்கிரை

[தொகு]

சுல்தான் முகமது ஷாவின் அச்சுறுத்தல்களை அடியோடு களைந்து விட வேண்டும் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தனர். ஆக பிந்தான் தீவையே அழித்துவிட முடிவு செய்தார்கள். ஒரு பெரும் படையைத் திரட்டி பிந்தான் தீவிற்கு அனுப்பினர். இது 1526-ஆம் ஆண்டில் நடந்தது.

அந்தப் படைக்கு பெட்ரோ மாஸ்காரன்காஸ் (Pedro Mascarenhas) என்பவர் தலைமை தாங்கினார். பிந்தான் தீவையே அழித்து விட வேண்டும் என்று போர்த் தளபதிக்கு கட்டளை இடப்பட்டது. அதன் படியே அவரும் செய்து முடித்தார். 1526-ஆம் ஆண்டு பிந்தான் தீவைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

முசபர் ஷா

[தொகு]

சுல்தான் முகமது ஷாவும் அவருடைய குடும்பத்தினரும் பிந்தான் தீவில் இருந்து சுமத்திரா, ரியாவ் (Riau) தீவுக் கூட்டத்தில் இருக்கும் கம்பார் எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றனர். அங்கேயே சுல்தான் முகமது ஷா தன்னுடைய கடைசி நாட்களையும் கழித்தார்.

1528-ஆம் ஆண்டு சுல்தான் முகமது ஷா காலமானார். அத்துடன் மலாக்கா சுல்தான்களின் வரலாற்றுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. அப்போது சுல்தான் முகமது ஷாவுக்கு, முசபர் ஷா (Muzaffar Shah); அலாவுதீன் ரியட் ஷா (Alauddin Riayat Shah II) என இரு மகன்கள் இருந்தார்கள்.[7]

முசபர் ஷா, தீபகற்ப மலேசியாவின் வடக்குத் திசைக்குச் சென்று பேராக் சுல்தானகத்தை (Sultanate of Perak) நிறுவினார். இன்னொரு மகன் அலாவுதீன் ரியாட் ஷா, ஜொகூருக்குச் சென்று ஜொகூர் சுல்தானகத்தை (Johor Sultanate) நிறுவினார்.[8]

மலாக்கா சுல்தான்கத்தின் ஆட்சியாளர்கள்

[தொகு]
மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
  2. On returning to Melaka, Tun Mamat presented the Princess’s demands, upon which the humbled Sultan said, “All that she demands, we can provide, save only the blood of our son.”[தொடர்பிழந்த இணைப்பு]
  3. bin Mansor, Suffian (2017). Buku Teks Sejarah Tingkatan 2. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-49-1647-3.
  4. Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-57689-6.
  5. Power Over Peoples: Technology, Environments, and Western Imperialism, 1400 to the present, Daniel R. Headrick, page 63, 2010
  6. Haywood, John (2002). Historical Atlas of the Early Modern World 1492–1783. Barnes & Noble Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-3204-3.
  7. "Mahmud Shah | sultan of Malacca".
  8. bin Mansor, Suffian (2017). Buku Teks Sejarah Tingkatan 2. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-49-1647-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
சுல்தான் மகமுட் சா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மலாக்கா சுல்தான் பின்னர்
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
புதிய சுல்தானகம்
ஜொகூர் சுல்தான் பின்னர்

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_மகமுட்_சா&oldid=3898367" இலிருந்து மீள்விக்கப்பட்டது