சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் மன்சூர் ஷா Mansur Shah | |
---|---|
மலாக்காவின் 6-ஆவது சுல்தான் | |
ஆட்சி | மலாக்கா சுல்தானகம்: 1459–1477 |
முன்னிருந்தவர் | சுல்தான் முசபர் ஷா |
பின்வந்தவர் | சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா |
மரபு | மலாக்கா சுல்தானகம் |
தந்தை | சுல்தான் முசபர் ஷா |
இறப்பு | 1477 |
சமயம் | இசுலாம் |
சுல்தான் மன்சூர் ஷா (மலாய் மொழி: Sultan Mansur Shah ibni Almarhum Sultan Muzaffar Shah ; ஆங்கிலம்: Mansur Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் ஆறாவது அரசர். இவர் சுல்தான் முசபர் ஷாவின் மகன் ஆவார். 1459 முதல் 1477 வரை மலாக்காவை ஆட்சி செய்தவர்.[1]:246
இவரின் ஆட்சியின் போது, இவர் மலாக்காவை அதன் மிகப்பெரிய அளவிற்கு வெற்றிகரமாக விரிவுபடுத்தினார். மன்சூர் ஷா தன் ஆட்சியில் விரிவாக்கக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தினார்.
தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு சுமத்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளில் உள்ள பல பிரதேசங்கள் அவரின் ஆட்சியின் போது மலாக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன. சிலாங்கூர், பெர்னாம், கம்பார் (சுமத்திரா), சியாக், மஞ்சோங், ரூபாட், சிங்கப்பூர் மற்றும் பிந்தான் போன்ற பிரதேசங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
வரலாறு
[தொகு]மன்சூர் ஷாவின் ஆட்சியின் போது மலாக்காவின் பெண்டகாராவாக இருந்தவர் துன் பேராக் (Tun Perak). அவரின் மூலமாகப் பகாங்கைத் தாக்க உத்தரவிட்டார். கிழக்குக் கடற்கரையில் மலாக்காவின் நிலைப்பாட்டை உறுதிப் படுத்துவதே அந்தத் தாக்குதலுக்கான முக்கியக் காரணமாகும்.
பின்னர் இவர் மஜபாகித் பேரரசின் இளவரசியை மணந்தார். அதற்காக இவருக்கு சுமத்திராவில் இருந்த சியாந்தான் மற்றும் இந்திரகிரி பிரதேசங்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.
மஞ்சூர் ஷாவின் மகள் மகாதேவி
[தொகு]மன்சூர் ஷா நல்ல ஒரு அரசதந்திரி. மலாக்காவின் இளவரசிகளுக்கும்; அரசியல் நிலைப்பாடுகளில் வெற்றி பெற்ற அண்டைய அரசுகளின் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான திருமண உறவுகளை வளர்த்துக் கொண்டார். அவற்றின் வழியாக அந்த அரசுகளில் மலாக்காவின் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்திக் கொண்டார்.
அந்த வகையில் தன்னுடைய மகள் இளவரசி மகாதேவியைச் (Princess Mahadewi) சியாக் அரசருக்கு (King of Siak) மணமுடித்து வைத்தார்.
சீன இளவரசி ஹாங் லி போ
[தொகு]வரலாற்றாசிரியர் டோம் பைர்ஸின் (Tomé Pires) கூற்றுப்படி, மிங் வம்சத்தின் பேரரசர் யோங்லே (Ming Dynasty Emperor Yongle) (1403-1424); தன் மகளான இளவரசி ஹாங் லி போவை (Princess Hang Li Po), சுல்தான் மன்சூர் ஷாவுக்குத் திருமணம் செய்து வைக்க ஒரு பெரிய பரிவாரங்களுடன் மலாக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
இருப்பினும் இளவரசி ஹாங் லி போ பற்றிய செய்திகள், இன்றளவும் மர்மம் நிறைந்த கதையாகவே உள்ளது. ஏனெனில் மிங் வம்சத்தில் ஹாங் (Hang) என்ற குடும்பப் பெயரும் இல்லை. மற்றும் லி போ (Li Po) என்ற இளவரசியின் பெயரும் எந்தப் பதிவுகளிலும் இல்லை.
மிங் பேரரசர் யோங்லேவின் மகள்கள்
[தொகு]பேரரசர் யோங்லேவுக்கு 5 இளவரசிகள் மட்டுமே இருந்தனர்.
- இளவரசி யோங்கான் - Princess Yong'an (永安公主; 1377 – 1417)
- இளவரசி ஆன் செங் - Princess Ancheng (安成公主; 1384 – 1443)
- இளவரசி யோங் பிங் - Princess Yongping (永平公主; 1379 – 1444)
- இளவரசி சியான் நிங் - Princess Xianning (咸寧公主; 1385 – 1440)
- இளவரசி சாங் நிங் - Princess Changning (常寧公主; 1387 – 1408)
சுல்தான் மன்சூர் ஷாவின் ஆட்சியின் போது, மிங் வம்சத்தின் பேரரசராக இங் சோங் (Emperor Yingzong) (1457-1464) என்பவர் இருந்தார். யோங்லே (Emperor Yongle) அல்ல. பேரரசர் யோங்லே என்பவர் பரமேசுவரா காலத்தில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவை ஆட்சி செய்தவர்.
கைப்பற்றப்பட்ட மாநிலங்களின் இளவரசிகளையும் இந்த மலாக்கா சுல்தான் திருமணம் செய்து கொண்டார். எடுத்துக்காட்டாக: பகாங்கின் இளவரசி வானாங் செரி (Princess Wanang Seri of Pahang); மற்றும் சுமத்திரா மஜபாகித் அரசின் ராதன் காலோ காந்தாரா கிரானா (Raden Galoh Candra Kirana).
பொருளாதாரக் கொள்கை
[தொகு]மன்சூர் ஷா தனது ஆட்சியின் போது வர்த்தகப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்தார். இது மலாக்கா வழியாக வர்த்தகம் செய்வதில் வணிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது.
மலாக்காவின் மேற்கில் உள்ள அரேபியா மற்றும் இந்தியா நாட்டு வணிகர்களின் வர்த்தகத்திற்கு 6% வரி விதிக்கப்பட்டது. இது ஒரு முன்னுரிமைக் கட்டண முறையாகும்.
மேலும் கடல்சார் தென்கிழக்கு ஆசிய வணிகர்களின் வர்த்தகத்தில் 3% வரி விதிக்கப்பட்டது. சீனா, ஜப்பான் மற்றும் ஜாவாவைச் சேர்ந்த வணிகர்களுக்கு வரியே விதிக்கப்படவில்லை.
மலாக்கா சுல்தான்கத்தின் ஆட்சியாளர்கள்
[தொகு]மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேசுவரா | |
மெகாட் இசுகந்தர் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
பரமேசுவரா தேவ ஷா | |
சுல்தான் முசபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா | |
சுல்தான் அகமட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Siamese Wars with Malacca During the Reign of Muzaffar Shah G. E. Marrison Journal of the Malayan Branch of the Royal Asiatic Society Vol. 22, No. 1 (147) (March 1949), pp. 61–66
- History of Malacca - Chronology of Events