இந்திய விலங்குகள் நல வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India) இந்திய அரசுக்கு விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க சட்டப்படியாக அமைக்கப்பட்ட பரிந்துரை வாரியமாகும்; இந்தியாவில் விலங்குகளின் நலத்தை மேம்படுத்துவதும் இதன் இலக்காகும்.[1] இந்த அமைப்பு விலங்குநலச் சட்டங்கள் நாட்டில் பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்றது; விலங்குகள் நல அமைப்புகளுக்கு நல்கைகள் வழங்குகின்றது; "நாட்டின் விலங்குகள் நல இயக்கத்தின் முகமாக" தன்னை அடையாளப்படுத்துகின்றது.[1]

நிறுவனம்[தொகு]

இந்திய விலங்குகள் நல வாரியம் விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு நான்கின்படி நிறுவப்பட்டது.[1] இந்த வாரியம் அமைக்கப்பட புகழ்பெற்ற மனிதவியலாளர் திருமதி. ருக்மிணி தேவி அருண்டேல் முதன்மை பங்காற்றி[1] முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.[2] இந்த வாரியத்தில் 28 உறுப்பினர்கள் உள்ளனர்;இவர்களது பணிக்காலம் 3 ஆண்டுகளாக உள்ளது.[1]

இந்த வாரியம் துவக்கத்தில் இந்திய அரசின் உணவு மற்றும் வேளாண் அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கி வந்தது. 1990இல் இது தற்போது இயங்கிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

ஆய்வக விலங்குகள்[தொகு]

ஆய்வகங்களில் விலங்குகள் மீதான துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு விலங்குகள் மீதான சோதனைகளை கட்டுப்படுத்தி மேற்பார்க்கும் நோக்குடை குழு (CPCSEA) உருவாக்கிட அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த குழு உருவாக்கப்பட்ட பின்னர் இக்குழுவிற்கு இருமுறை வாரியத்தின் சார்பாக முனைவர் எஸ்.சின்னி கிருஷ்ணா "இந்திய ஆய்வகங்களில் நிலவும் மோசமான நிலையை " எடுத்துரைத்தார்.[2]

இதனை "முறையாக கருத்தில் கொண்டு செயலாற்ற அரசுக்குப்" பல ஆண்டுகள் பிடித்தன.[2] 2001இல் விலங்குகளை வளர்க்கவும் சோதனைகள் நடத்தவும் கட்டுப்படுத்தும் விதிகளை இயற்றினர்.[2]

மனமகிழ்வு சூழலில் விலங்குகள்[தொகு]

மனமகிழ்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும் விலங்குகளுக்கு இழைக்கப்படும் தீமைகள் குறித்து வாரியம் அடுத்ததாக முன்னெடுத்தது.[2] 1964இல்,"வட்டரங்குகள் - நாகரிமில்லாதோருக்கான கேளிக்கை" என்ற நூலை வெளியிட்டது.[2] 2001இல் நிகழ்கலை விலங்குகள் விதிகளை அரசு இயற்றியது; இவை 2005இல் திருத்தப்பட்டன.[2] In 2012இல் இந்த விதிகள் திறம்பட செயற்படுத்தப்படுவதாக வாரியம் அறிவித்தது.[2]

செயற்பாடுகள்[தொகு]

இந்த வாரியத்தின் செயற்பணிகளில் சில பின்வருமாறு:

விலங்குகள் நல அமைப்புகளுக்கான அங்கீகாரம்[தொகு]

தனது விதிமுறைகளுக்கு ஏற்ப இயங்கும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு (AWOs) அங்கீகாரம் வழங்கி மேற்பார்க்கின்றது.[3] தேவையான ஆவணங்களை இவ்வமைப்புகள் வழங்க வேண்டும்; இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சார்பாளரை தனது செயற்குழுவில் ஏற்க வேண்டும்; காலக்கெடுக்கேற்ப ஆய்வுக்கு உட்பட வேண்டும்.[3] இத்தேவைகளை நிறைவேற்றும் அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க பரிசீலிக்கப்படுகின்றது. தவிரவும் வாரியம் விலங்குகள் நல அதிகாரிகளை நியமிக்கின்றது; இவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் சட்டத்தை செயற்படுத்தும் அமைப்புக்களுக்கும் இடையே பாலமாக பணியாற்றுகின்றனர்.[3]

நிதிய உதவி[தொகு]

அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் நல அமைப்புகளுக்கு நிதிய உதவிகளை வழங்குகின்றது; இதற்காக அவர்கள் வாரியத்திற்கு நல்கை கோரிக்கை எழுப்ப வேண்டும்.[4] வழமையான நல்கை, கால்நடை பாதுகாப்பு நல்கை, விலங்குகளை பராமரிக்க வசிப்பிடம் கட்ட நிதி, விலங்கு குடும்பக் கட்டுப்பாடு (ABC) திட்டம், விலங்குகளுக்கான ஆம்புலன்சுக்கான நிதி மற்றும் இயற்கைப் பேரிடர் நல்கை என்ற வகைகளில் நல்கைகள் வழங்கப்படுகின்றன.[4]

விலங்குகள் நல சட்டங்கள் மற்றும் விதிகள்[தொகு]

விலங்குகள் சட்டங்கள் மற்றும் விதிகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து வாரியம் பரிந்துரைக்கின்றது. 2011இல் ஓர் புதிய விலங்கு நலச் சட்ட வரைவு பொதுமக்கள் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.[5] சட்டங்களை சரியாகப் புரிந்து கொண்டு காவலர்களும் அலுவலர்களும் செயலாற்ற உதவும் வண்ணம் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.[6]

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்[தொகு]

விலங்குகள் நல பிரச்சினைகளைக் குறித்து வாரியம் பல வெளியீடுகளை கொண்டு வருகின்றது.[7] வாரியத்தின் கல்விக் குழு விலங்குகள் நல தலைப்புகளில் பேச்சுக்களை ஒழுங்கமைக்கின்றது. வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட விலங்குநல கல்வியாளர்களையும் பயில்விக்கின்றது.[8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Introduction", Animal Welfare Board of India, accessed August 27, 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Remembering The Board's Early Days", Dr. S. Chinny Krishna, Animal Citizen, Animal Welfare Board of India, July-Sept. 2012, p. 6.
  3. 3.0 3.1 3.2 "Recognition", Animal Welfare Board of India, accessed August 27, 2014.
  4. 4.0 4.1 "Financial Assistance", Animal Welfare Board of India, accessed August 27, 2014.
  5. "Draft Animal Welfare Act 2011" பரணிடப்பட்டது 2014-09-03 at the வந்தவழி இயந்திரம், Animal Welfare Board of India, accessed August 27, 2014.
  6. "Animal Protection Laws for guidance of Police, HAWOs, NGOs & AWOs", Animal Welfare Board of India, accessed August 27, 2014.
  7. "Publications", Animal Welfare Board of India, accessed August 27, 2014.
  8. "AWBI Launches Humane Education Project", Animal Citizen, Animal Welfare Board of India, July-Sept. 2012, p. 2.

வெளி இணைப்புகள்[தொகு]