உள்ளடக்கத்துக்குச் செல்

கண் (உடல் உறுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நயனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண்
முள்ளந்தண்டுளியின் கண்ணின் கட்டமைப்புப் படம்
கூட்டுக் கண்
மனித விழி
மனித விழி அமைப்பு பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுகிறது.

கண் (ஒலிப்பு) (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே).

கண்ணோட்டம்

[தொகு]

கண் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். அதன் நிறம், வடிவமைப்பு, ஆடிகளின் அளவு ஆகியன மாறுபடும். அதிகப்படியான விலங்குகள் துணை விழிப்பார்வை கொண்டவையாகும். கண்களில் உள்ள ஆடிகள் காட்சிக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்ள்ளும் தன்மை கொண்டதாகும். மேலும் போதுமான வெளிச்சம் உள்ள இடங்களில் கண்ணின் பிறழ்ச்சி குறையும்.

மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால் விலங்குகள் இரவிலும் தெளிவாக காட்சிகளைக் காண முடியும்.

மீன்,பாம்பு உட்பட விலங்குகளுக்கு கண்களின் ஆடிகள் நிலையான வடிவத்தில் இருக்கும். எனவே அதன் கண்கள் புகைப்பட கருவியில் எப்படி உபயோகப்படுகிறதோ, அதேபோல் பயன்படுகிறது.

கண்ணின் இயக்கம்

[தொகு]
வேகமாகப் படிக்க கண்ணுக்கானப் பயிற்சி

நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’() எனப்படுகிறது.

நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன.

கண்ணின் வழியே ஒளி செல்லும்போது ஒளிச் சிதறலும் ஒளித்திசை மாறுதலும் ஏற்படுகின்றன. ஒளியானது விழித்திரையை அடையும் முன் கார்னியா, லென்சின் முன்பகுதி, லென்சின் பின்பகுதி ஆகிய மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகிறது. கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் அக்குவசு இயூமர் என்ற பிளாசுமா போன்ற திரவம் உள்ளது[1]. லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் விட்ரசு இயூமர் என்ற திரவம் உள்ளது. இது கூழ்மமான மீயூக்கோ புரதத்தினாலானது[2]. இத்திரவங்கள் இரண்டும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதினால் ஒளி கண்ணின் விழித்திரையை தடையில்லாமல் அடைகிறது.

மனிதனின் கண்ணில் உள்ள லென்சின் குவிந்த பகுதி பார்க்கும் பொருளின் தூரத்திற்கு ஏற்ப தானே குவித்தன்மையை மாற்றிக் கொள்ளும் தன்மையை கொண்டிருக்கிறது. இத்தன்மையை கண் தக அமைதல் அல்லது விழியின் ஏற்பமைவு என்பர். இவ்வேற்பமைவு, சிலியரி தசைகள், சிலியரி உறுப்புகள், மற்றும் தாங்கும் இழைகளால் நடைபெறுகிறது.

கண் தூரத்திலுள்ள பொருளைப் பார்க்கும்போது சிலியரித்தசைகள் தளர்ந்து விடுகின்றன. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. பொருளை விழியின் அருகில் கொண்டு வரும்போது விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதில்லை. மாறாக லென்சின் மேற்பகுதியின் வளைவுப்பகுதி அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை அதிகரிக்கிறது. இதனால் அருகிலுள்ள பொருட்களின் பிம்பம் நன்றாகத் தெரிகிறது[3].

கண்ணின் குச்சி செல்களின் வெளிப்புறப்பகுதியில் காணப்படும் சிவப்புக் கலந்த ஊதா நிறமி, ரெடாப்சின் அல்லது பார்வை ஊதா என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரத ஆப்சினும் ஆல்டிகைடும் கலந்த வைட்டமின் ’ஏ’ வும் சேர்ந்த பகுதியினை ரெட்டினோ என்கிறார்கள்[4]. ஒளி ரெடாப்சின் மீது விழும்போது நிறமற்றுப் போகிறது. ஏனென்றால் இவை ரெட்டினே மற்றும் ஆப்சினாக உடைக்கப்படுகின்றன. ஒளி இல்லாத வேளையில் இவை மீண்டும் இணைகின்றன. குச்சி செல்கள் அதிக ஒளி உணர்வுத் தன்மை கொண்டவையாகும். எனவே குறைந்த ஒளியிலும் பார்ப்பதற்கு இவை உதவுகின்றன.[5].

கூம்பு செல்களில் காணப்படும் பார்வை நிறமிகள் ரெட்டினேவுடன் சேர்ந்த புரத ஆப்சின்களால் ஆனவையாகும். கூம்பு செல்கள் நிறங்களை உணர்கின்றன[6]. மனிதனின் கண்களில் வெவ்வேறு அலைநீளம் கொண்ட மூண்று நிறமிகள் காணப்படுகின்றன. அதிக அளவு ஒளிகொண்ட பார்வையின் செயலே நிறப்பார்வை எனப்படுகிறது. அதிக அளவு ஒளியின் நிறங்களை விழித்திரையிலுள்ள குச்சி செல்கள் இல்லாத போவியா பகுதி உணர்கிறது. குறைந்த ஒளி எனில் குச்சி செல்களும் அதிக ஒளி எனில் கூம்பு செல்களும் செயல்படுகின்றன. குச்சிசெல்கள் செயல்படும்போது நிறங்கள் உணரப்படுவதில்லை.

விழித்திரையின் செயல்பாட்டில் ஒளிவேதிவினை மூலமாக ஒளிச்சக்தியானது நரம்புத் தூண்டலாக மாற்றப்படுகிறது. இச்செயல் மூலம் நரம்பிழைகள் தூண்டப்பட்டு கடத்தப்படுகின்றன. உணர் உறுப்புகளில் உருவாகும் தூண்டல்கள் கூம்பு செல்களில் உருவாகும் மின்னழுத்தத்தைப் பொறுத்து மூளையினால் சரியாக நிறமாகப் பகுக்கப்படுகிறது. நமது கண்களினால் பகுக்கப்படுகின்ற அல்லது காணப்படுகின்ற நிறமுள்ள படங்கள் மூளையின் ஒரு கடினமான செயல் தொகுப்பாகும்.

கண்ணின் வகைகள்

[தொகு]
வீட்டு ஈ ஒன்றின் கூட்டுக் கண்ணின் மேற்பரப்பு இலத்திரன் நுண்நோக்கியால் பார்க்கப்படும்போது கிடைக்கும் தோற்றம்
பூச்சியின் கூட்டுக் கண்ணின் உடற்கூற்றியல்

Anatomy of the compound eye of an insect]] கலவை அல்லாத கண்கள், குழிக் கண்கள், கோளக் கண்கள், பல லென்ஸ் கண்கள், முறிவு கருவிழி கண்கள், ரிப்லேக்டார் கண்கள், கூட்டுக் கண்கள், அருகமைவாக கண்கள், மேற்பொருந்துதல் கண்கள் ஆகியன கண்ணின் வகைகளாகும்

கலவை அல்லாத கண்கள் என்பது லென்சுடன் கூடிய சாதரண கண்களே ஆகும்.எடுத்துக்காட்டு மீன்களின் கண்கள்.

குழிகண்கள் ஒளியின் கோணங்களை குறைக்கவல்லதாகும்.ஒளியின் கோண அளவு கண்ணை பாதுகப்பாக வைத்துக்கொள்ளும்.

குழிகண்களின் லென்ஸில் உயர் ஒளி விலகல் தன்மையை கொண்டிருப்பின் அது கோள கண்களாகும். இவ்வகை கண்கள் கோள பிறழ்ச்சியை குறைக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட லென்சுகளை கொண்ட கண்களே பல லென்ஸ் கண்களாகும்.பெரும்பாலும் இவ்வகை கண்கள் நீரில் வாழும் உயிரினங்களுக்கே காணப்படும்.

முறிவு கருவிழி கண்கள் பெரும் பாலும் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகளுக்கு அமைந்து இருக்கும்.

ரிப்லேக்டார் கண்களில் இரு லென்சுகள் இருக்கும். அதில் ஒன்று கண்ணாடி பேழை போன்று செயல்படும். இவ்வகை கண்கள் சிறிய பூச்சிகள், பறவைகளுக்கு காணப்படும்.

கூட்டுக் கண்கள் என்பது ஆயிரக்கணக்கான ஒளி வாங்கிகள் பிம்மத்தை வாங்கி, மூளையில் பதிய வைத்து. காட்சியாகக் காட்டும் அதுவே கூட்டுக்கண்கள் ஆகும். பெரும்பாலும் ஈக்களுக்கு இதுபோன்ற கண்களே இருக்கும். பறக்கும் சிலந்திகளுக்கும் இது போன்ற கண்களே இருக்கும். அதாவது குறுகிய பார்வை கொண்ட எண்ணற்ற கண்கள் இருக்கும்.

அருகமைவாகக் கண்கள் சாதாரணக் கண்கள் ஆகும்.

மேற்பொருந்துதல் கண்கள், இது இறால் போன்ற மீன்களுக்கு இருக்கும் கண்கள் ஆகும்.

கண்களின் கூர்மை

[தொகு]

கண்களின் பார்வைக்கூர்மை கண்களின் வகையை பொறுத்து மாறும். பார்வைக்கூர்மையை நிர்ணயிப்பது கண்களில் உள்ள செல்களின் திறமே ஆகும். உயிர்கள் அனைத்தோடும் ஒப்பிட்டால் கழுகுகளுக்கே பார்வையின் கூர்மை அதிகம். குதிரைகளுக்கும் பார்வைத்திறன் அதிகமாகும்.

விலங்குகளின் கண்கள்

[தொகு]
ஓர் ஐரோப்பிய பைசனின் வலக்கண்

மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால் விலங்குகள் இரவிலும் தெளிவாக காட்சிகளைக் காண முடியும். ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒவ்வொரு வகையில் கண்கள் அமைந்துள்ளன. நீரில் வாழ்பவனவற்றிற்கு ஒன்று போலவும், நிலத்தில் வாழ்பவனவற்றுக்கு வெறுபட்டும் இருக்கின்றன.

மனிதர்களின் கண்கள்

[தொகு]

மனிதர்களின் பார்வை கூர்மையையும் செல்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணின் கருவிழி நிறத்தை உறுதி செய்வது அவனின் ஜீன்களாகும். நீலம், பச்சை, கருப்பு, பழுப்பு நிறம் ஆகியன மனித கருவிழியின் வண்ணங்களாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விழித்திரை மாறுபடும். உலகில் உள்ள எந்த இரு மனிதருக்கும் விழித்திரை ஒன்றாக இருப்பதில்லை (இரட்டைப்பிறவிகளுக்கு கூட அவை மாறும்).

மனிதனின் கண் வெளிச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒர் உறுப்பு ஆகும். ஒர் உணர்வு உறுப்பாக பாலூட்டிகளின் கண் பார்வையை அனுமதிக்கிறது. மனித கண்கள் முப்பரிமாண நகரும் உருவத்தை வழங்க உதவுகின்றன, பொதுவாக பகல் நேரங்களில் நிறங்களை உணர்த்துகின்றன. விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் ஒளி உணர்வு மற்றும் வண்ண வேறுபாடு ஆழ்ந்த கருத்து உள்ளிட்ட பார்வை செயல்பாஃடுகளுக்குக் காரணமாகின்றன.மனிதக் கண் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது [7].

கண்ணின் படங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vitreous and Aqueous Humor".
  2. Ali & Klyne 1985, ப. 8
  3. "Human eye". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 20 November 2012.
  4. Perception (2008), Guest Editorial Essay, Perception, p. 1
  5. Stuart JA, Brige RR (1996). "Characterization of the primary photochemical events in bacteriorhodopsin and rhodopsin". In Lee AG (ed.). Rhodopsin and G-Protein Linked Receptors, Part A (Vol 2, 1996) (2 Vol Set). Greenwich, Conn: JAI Press. pp. 33–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55938-659-2.
  6. "The Rods and Cones of the Human Eye".
  7. Judd, Deane B.; Wyszecki, Günter (1975). Color in Business, Science and Industry. Wiley Series in Pure and Applied Optics (third ed.). New York: Wiley-Interscience. p. 388. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-45212-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Eyes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_(உடல்_உறுப்பு)&oldid=3939333" இலிருந்து மீள்விக்கப்பட்டது