அடும்பு
அடும்பு Ipomoea pes-caprae | |
---|---|
![]() | |
அடும்பு மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Solanales |
குடும்பம்: | Convolvulaceae |
பேரினம்: | Ipomoea |
துணைப்பேரினம்: | Eriospermum |
இனம்: | I. pes-caprae |
இருசொற் பெயரீடு | |
Ipomoea pes-caprae (லின்.) R.Br. | |
வேறு பெயர்கள் | |
Convolvulus pes-caprae L. |
அடும்பு அல்லது அடம்பு (Beach Morning Glory / Goat's Foot; Ipomoea pes-caprae) என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இப்பூவை சிவபெருமான் தனது சடையில் அணிந்திருப்பதாக திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் "அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும் துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்" (5.84.6) குறிப்பிடுகிறார். இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிதை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது (Dicotyledons). [மலையாளப் பெயர்: அடும்பு வள்ளி, இந்திப்பெயர்: டோப்படிலேடா]
கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரக்கூடியது அடம்பு.பல்வேறு நன்மைகளைக் கொண்ட இது படர்ந்து கொடியாக இருக்கும். இதற்கு ஆட்டுக்கால் அடம்பு என்ற பெயரும் உண்டு. அடம்பின் இலைகள் ஆட்டுக்கால் போன்ற தோற்றம் கொண்டது. இலைகள் கடினமாகவும் புக்கள் நீல நிறத்திலும் காணப்படும். அாிய வகை மருத்துவ மூலிகையானது வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது. [2]
உசாத்துணைகள்[தொகு]
- பி. எல். சாமி, 'சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்' , திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம், 1967, பக். 1-184.
- மா. ந. புஷ்பா, , குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் தொகுப்பேடு , அரசுத் தொல்லியல், அருங்காட்சியகத் துறையின் ஆணையர், சென்னை 6000 008, ஆண்டு 2002, பக். 1-84
- ↑ "Taxon: Ipomoea pes-caprae (L.) R. Br". Germplasm Resources Information Network. Beltsville, Md.: National Genetic Resources Program, Agricultural Research Service, USDA. 9 May 2011. 29 ஜூன் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சக்தி சுப்ரமணியன் (நவம்பா் 2015). "மூட்டு வலியை குணமாக்கும் அடம்பு". தமிழ் மாலை முரசு (மதுரை): பக்க எண் 2. doi:05-11-2015.