சிங்கப்பூரின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூரின் வரலாறு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகின்றது. 14-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வணிகக் குடியேற்றங்கள் சிங்கப்பூரில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. சிங்கப்பூரின் ஆரம்பகால வரலாற்றின் போது, 1299-ஆம் ஆண்டில், புலாவ் உஜோங் (Pulau Ujong) எனும் தீவில் சிங்கபுர இராச்சியம் எனும் ஓர் இராச்சியம் உருவாக்கப்பட்டது.

மயாபாகித் அல்லது சயாமியர்களால் வெளியேற்றப்படும் வரை அந்தச் சிங்கபுர இராச்சியம் பரமேசுவராவின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பின்னர் மலாக்கா சுல்தானகம் (Malacca Sultanate); ஜொகூர் சுல்தானகம் (Johor Sultanate); ஆகிய சுல்தானகங்களின் கீழ் வந்தது.

1819-இல், சர் இசுடாம்போர்டு இராஃபிள்சு (Sir Thomas Stamford Raffles) ஜொகூர் சுல்தானகத்துடன் பிப்ரவரி 6 இல் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு சிங்கப்பூர் தீவில் பிரித்தானிய வணிகத் துறைமுகம் ஒன்றை நிறுவினார். இதுவே 1824-இல் சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாக உருவாவதற்கு வழி அமைத்தது.

பொது[தொகு]

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சப்பானியப் பேரரசு சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், கூடிய அளவு தன்னாட்சியுடன், சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1963-இல் சிங்கப்பூர் மலாயக் கூட்டமைப்பில் இணைந்ததன் மூலம் மலேசியா உருவானது. எனினும், சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சிக்கும், மலேசிய கூட்டணி கட்சிக்கும் இடையே உருவான பிணக்குகளினாலும்; உள்நாட்டுக் கலகங்களாலும்; மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேறியது. 1965 ஆகத்து 9-ஆம் தேதி சிங்கப்பூர் சுதந்திரக் குடியரசானது.

1990-ஆம் ஆண்டுகளில்[தொகு]

கடுமையான வேலையில்லாப் பிரச்சினையையும், வீட்டுவசதிப் பற்றாக் குறையையும் எதிர்கொண்ட சிங்கப்பூர் 1960-கள் தொடக்கம் 1970-கள் வரை நவீனமயமாக்கத் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம், உற்பத்தித் தொழில் துறை ஒன்றை நிறுவுதல்; பெரிய வீட்டுத் திட்டங்களை அமைத்தல்; கல்வியில் பெருமளவு முதலிடுதல்; என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

1990-ஆம் ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த சுதந்திர சந்தைப் பொருளாதாரம்; வலுவான பன்னாட்டு வணிகத் தொடர்புகள்; ஆசியாவில் மிகக்கூடிய "நபருக்கான உள்நாட்டு உற்பத்தி"; ஆகியவற்றுடன், உலகின் மிகவும் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் வளர்ச்சி கண்டது.[1]

பண்டைய சிங்கப்பூர்[தொகு]

இடது பக்க மேற்புறத்தில் தெமாசெக் தீவைக் காட்டும் நிலப்படம்.

கிரேக்க-உரோம வானியலாளர் தொலெமி (Ptolemy), இரண்டாம் நூற்றாண்டில், இப்பகுதியில் சபானா (Sabana) என்னும் இடம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[2] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மூலம் ஒன்றில் காணப்படும் பு லுவோ சுங் (Pu Luo Chung) என்னும் தீவு பற்றிய விபரமே சிங்கப்பூரைப் பற்றிய மிக முந்திய எழுத்து ஆவணமாக இருக்கக்கூடும்.

இப்பெயர் மலாய் மொழிப் பெயரான "முனையில் உள்ள தீவு" (மலாய் தீவக்குறையின் முனையில்) என்னும் பொருள் தரும் பொலோ உஜோங் (Pulau Ujong) என்பதன் ஒலிமாற்றம் எனவே தெரிகிறது.[3]

1365-இல் சாவக மொழியில் எழுதப்பட்ட "நகரகிரேத்தாகாமா" (Nagarakretagama) என்னும் காவியப் பாடலில் துமாசிக் என்னும் தீவில் உள்ள ஒரு குடியிருப்புப் பற்றிய குறிப்பு வருகிறது. துமாசிக் என்பது "கடல் நகரம்" அல்லது "கடல் துறை" என்னும் பொருளுடைய சொல்லாக இருக்கக்கூடும்.[4]

துமாசிக்[தொகு]

துமாசிக் என்னும் பெயர் செஜாரா மெலாயு (Sejarah Melayu) எனும் மலாய் இலக்கிய வரலாற்றுப் படைப்பிலும் காணப் படுகின்றது. இதில் உள்ள ஸ்ரீ விஜய இளவரசனின் கதைப்படி, சிறீ திரி புவன எனும் நீல உத்தமன் எனவும் அறியப் படுகின்றது. 13-ஆம் நூற்றாண்டில் துமாசிக்கில் நீல உத்தமன் கரை இறங்கினார். அவர் அங்கே சிங்கம் என அறியப்பட்ட வித்தியாசமான விலங்கு ஒன்றைக் கண்டார்.

இளவரசர் நீல உத்தமன் அதை ஒரு நல்ல சகுனமாக் கருதி "சிங்கபுர" அல்லது "சிங்கபுரம்" என்னும் பெயரில் ஒரு குடியிருப்பை உருவாக்கினார். ஆனாலும், அறிஞர்களின் கருத்துப்படி சிங்கபுர என்னும் பெயரின் தோற்றம் குறித்து, சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Economic Outlook Database, September, 2006". International Monetary Fund. Archived from the original on 7 May 2009.
  2. Hack, Karl. "Records of Ancient Links between India and Singapore". National Institute of Education, Singapore. Archived from the original on 26 ஏப்பிரல் 2006. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2006.
  3. "Singapore: History, Singapore 1994". Asian Studies @ University of Texas at Austin. Archived from the original on 23 March 2007. பார்க்கப்பட்ட நாள் 7 July 2006.
  4. Victor R Savage, Brenda Yeoh (15 June 2013). Singapore Street Names: A Study of Toponymics. Marshall Cavendish. பக். 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789814484749. https://books.google.com/books?id=DTOJAAAAQBAJ&pg=PA381#v=onepage&q&f=false. 
  5. C.M. Turnbull (30 October 2009). A History of Modern Singapore, 1819-2005. NUS Press. பக். 21–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9971694302. https://books.google.com/books?id=Y9yvBgAAQBAJ&pg=PA22#v=onepage&q&f=false. 

மேலும் காண்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூரின்_வரலாறு&oldid=3651891" இலிருந்து மீள்விக்கப்பட்டது