சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோமதி அம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சங்கரநாராயணர் கோயில்
சங்கரநாராயணர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
அமைவு: சங்கரன்கோவில்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்: ஆடித் தவசு
சங்கரநாரயணர்

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

மரபு வழி வரலாறு[1][தொகு]

இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.[சான்று தேவை]

காவற் பறையன்[தொகு]

மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.

உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது[தொகு]

திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.

சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.

காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.

கோயிலும், அதன் பகுதிகளும்[தொகு]

கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.

சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.

சங்கரனார் கோயில் ஓர் அழகிய கோயில். மகா மண்டபத்தைச் சுற்றி பல திருவுருவங்கள் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவு பாராட்டத்தக்கது. அவையாவன : துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், துவாரபாலகர் 2, ரிஷபாரூடர், உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர், மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர், சந்திர சேகரர், துவார பாலகர் 2 , உக்கிரபாண்டிய அரசர், ஸிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி, ஸ்ஹண்முகர், மகிஷாசுர மர்த்தினி, கபாலி, கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தக்ஷசம்ஹார மூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், மஹா விஷ்ணு, வீரபத்திரர், பைரவர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர். மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கம் தக்ஷிணாமூர்த்தி, மேல்பக்கம் நரஸிம்மமூர்த்தி, வடபக்கம் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளார்கள்,

திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,

ஆடித் தபசு[தொகு]

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை ஏலம் போடப்படும். உண்டியல்கள் மூலமாக ரொக்கப் பணமும் சாமான்களும் வரும்..ஆடித்தவசு குறித்த விவரமான கட்டுரை தனியாக இடம்பெற்றுள்ளது.

பாம்புப் புற்று[தொகு]

கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 ) மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும் 90 வயதுக்கு மேல் உள்ளோர் கூறுகின்றனர்.

புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் உண்மையான வரலாறு. புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை.

எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )[தொகு]

திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.

உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். கதை மேலும் போகிறது. இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். இதுவரை சிவனாரைப் பற்றி மட்டுமே குறித்து வந்த கதை பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரியார் இராமானுசாச்சாரியாரால் தொடங்கப்பெற்ற தத்துவக் கொள்கையை விளக்கும் வரலாற்றைத் திடீரெனப் புகுத்துகிறது. இந்தக் கோயிலோடு திருமாலுக்குத் தொடர்பினை உண்டாக்கி அதற்கு ஆதரவு தேடும் பொருட்டுச் சங்கரலிங்கத்தின் பெயராகிய சங்கரநயினார் என்பதற்குப் பதிலாகச் சங்கரநாராயணர் ( சிவனும் திருமாலும் ) என்ற பெயரை முதன்மையாக்கும் இக்கதையின் பகுதி பிற்காலத்தில் நுழைக்கப்பட்டதென்பது சிறிதும் சந்தேகமில்லாதது.

கோயிலின் அமைப்பு அதன்கண் திருமாலுக்கு ( சங்கரநாராயணருக்கு ) ஆரம்பத்தில் கோயில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. கோயில் இரண்டு பெரும் பகுதிகளை உடையது. அவற்றில் பெரியதில் சிவபெருமானின் அடையாளமாகிய சிவலிங்கம் ( சங்கரலிங்கம் ) இருக்கிறது. சின்னதில் கோமதி அம்பிகை இருக்கின்றாள். மூன்றாவதாக இரண்டுக்கும் இடையிலே நாராயணருக்கு ஒரு சிறு கோயில் நுழைக்கப் பெற்றது. ஆனால், இந்தக் கோயில் இந்த மூன்றாவது பகுதியில் புகுத்துதலுக்குப் பொருந்தியதாக இல்லை. எப்படியெனில் வழிப்போக்கனாகிய ஓர் ஏழை அடியேனும் கூடத் தெருவிலிருந்தபடியாகவே கண்டு வழிபாடு செய்வதற்கு ஏதுவாகச் சிவலிங்கம், அம்மை ஆகிய இறைவன், இறைவி சன்னிதிகள் தலைவாயிலிலிருந்து பல தொடர்க் கதவுகளினால் திறந்திருப்பதுபோல, சங்கரநாராயணர் சந்நிதிக்குச் சிறிதும் வசதி இல்லை. அதனால் சங்கரநாராயணர் கோயில் தலைவாசல் இல்லாததாய்ப் பெரிய கோயிலின் உள்ளேயே அடங்கிப் போய்விட்டது. அதாவது தெருவிலிருந்தபடியே இறைவன் அல்லது இறைவியை வழிபடும் வசதி சங்கரநாராயணர் சன்னதியில் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.

சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக்காலத்தில் தருமகர்த்தாக்கள் இந்தக் கோயிலில் இரண்டு தெய்வங்களும் இருப்பதை மிகைப்படுத்தி வருவதோடு நிலங்களுக்குப் பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி வருகிறார்கல். என்றாலும், கோவிலின் பூஜை முறைகளில் இப்புதுத் தெய்வம் ( சங்கரநாராயணர் ) மிகச் சிறு பகுதிக்கே உரியதாக இருக்கிறது. சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.

இன்றும் சங்கரன்கோவிலில் தீவிர சிவபக்தர்கள் சங்கரநாராயணர் சன்னிக்குள் செல்ல மாட்டார்கள். மேலும் சிலர் உள்லே சென்று இடப்பகுதிப் பிரகாரத்தை மட்டும் சுற்றிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இது கண்ணால் கண்டுவரும் உண்மை.

தக்கணை தவமிருந்து முக்தி பெற்றது, வீர்சேனை பிணி தீர்ந்தது, சயந்தன் வினை தீர்ந்தது, கானவன் வீடுபேறடந்தது, கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் காணக்கிடக்கின்றன. பத்திரகார முனிவன், இந்திரன், அகத்தியர், பைரவர், சூரியன், அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறும்.

அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.

சரித்திர வரலாறு -கல்வெட்டு

தச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம்.

சாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது.

உக்கிரபாண்டியர் இக்கோயிலைக்கட்டிய காலத்திலேயே கருவை நகரை ஆண்ட பேரரசராகிய பிரசுத்துவச பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்தார் என்பதும், அவர் மகன் விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரநயினார் கோயில் இருக்கும் இடம் கருவை நகர்க் கோயிலுக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் தல புராணத்தால் அறிந்திடும் வரலாறுகள்.

சீவலமாறர்

சீவலமாற பாண்டியரே இத்தலபுராண ஆசிரியர். இவர் இவ்வூரிற் பலகாலம் தங்க்கியிருந்தனர். .அவர் பெயரால் ஊருக்குத் தென்மேற்கே இப்போதுள்ள சீவலப்பேரி என்ற குளத்தினாலும், கிழக்கே இரண்டு மைலுக்குள் உள்ள சீவலராயன் ஏந்தல் என்ற ஊராலும் நிலைநாட்டப்பெறும். இவர் பெயர் கங்கை கொண்டான், மானூர், தென்காசி, சீவலப்பேரி ஆகிய தலங்களிலும், சம்பந்தப்படுகிறது.

கோமதியம்மை திருமுன்பு சக்கரம்

இன்றைக்கு ஒரு 183 ஆண்டுகளுக்கு முன்னர் (2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது ). கி.பி. 1785-இல் இறைவர் திருவடியடந்த மாபாடியம் சிவஞான முனிவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது திருவாவடுதுறையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார். இரைவர் திருவடிக்கு மெய்யன்பராதலினாலே அவரிடம் குட்டம், குன்மம் போன்ற நீங்க்கா நோய்களையும் போக்கும் அருட் சக்தி பதிந்து விளங்கியது அவர் சங்கரன்கோயிலுக்கு வந்து மேலை வீதியிலுள்ள தமது திருமடத்தில் எழுந்தருளியமையை அறிந்த நெற்கட்டுஞ்ச்செவலின் குறுநில மன்னராகிய சிவக்னான பூலித்தேவர் குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்க்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவ பூஜை, குரு பூஜை, மகாசேசுர பூஜைகளின் பொருட்டு சாசனம் செய்து கொடுத்தார்.

வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது. இந்தத் தேசிக மூர்த்திகள் சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார். மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார். ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தவறாமல் நடைபெற்று வருகின்றது., . .

மேற்கோள்கள்[தொகு]

  1. அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தல வரலாறு - 2002 -இன்படி

துணைநூல்[தொகு]

  • அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் சங்கரன்கோயில் தல வரலாறு -2002

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]