கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கும்பகோணம் சார்ங்கபாணி சுவாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சாரங்கபாணி கோவிலின் கோபுரத் தோற்றம்.

சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். சிறிய அளவிலான சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில் பின் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டவையாகும்.[சான்று தேவை]

சார்ங்கபாணியா, சாரங்கபாணியா?[தொகு]

சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். இனியதோர் 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். 'சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே' என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம். இத்தொடர் நேராகத் திருமாலைக்குறிக்காது. பொதுமக்கள் இவ்வேற்றுமையை உணராமல் சாரங்கபாணி எனத் திருமாலை வழங்கத் தொடங்கிவிட்டனர். சார்ங்கபாணி என்னும் பெயர் உச்சரிக்க எளிமையாக இல்லாததே இதற்குக் காரணம். உலக வழக்கு இப்படி மாறிய உடனே நிகண்டு ஆசிரியர்களும் சாரங்கபாணி என்ற சொல்லுக்கே திருமால் எனக் கூறிவிட்டனர். 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாரதிதீப நிகண்டிலேயே 'விண்டுநராந்தகன் சாரங்கபாணியன் வெற்பெடுத்தோன்' என இப்பெயர் இடம்பெற்றுவிட்டது. பின்னால் வந்த அகராதிகளில் எல்லாம் சாரங்கம் என்ற சொல்லிற்குத் திருமாலின் வில் என்ற பொருள் ஏறிவிட்டது. இலக்கியத்தில் பேச்சு மொழியின் செல்வாக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். [1]

கும்பகோணம் பெயர்[தொகு]

இக்கோயிலின் முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது. [2]

மூலவர், தாயார்[தொகு]

இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி.

பாடியோர்[தொகு]

பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.

தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட

வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி

திருவிழாக்கள்[தொகு]

தேர்த்திருவிழா[தொகு]

இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும். இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.

தமிழகத்தில் தேர் போன்ற அமைப்பில் பல கோயில்களில் உள்ள கருவறைகளோ, மண்டபங்களோ காட்சியளிக்கின்றன. அவற்றில் தாராசுரம், பழையாறை, திருக்கருக்காவூர், மேலக்கடம்பூர், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களைக் கூறலாம்.

12 கருட சேவை[தொகு]

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [3] [4]

பஞ்சரங்க தலங்கள்[தொகு]

கோவில் அமைவிடம்
ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் திருப்பேர் நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் மயிலாடுதுறை

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலில் 1999இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மகாமகத்தையொட்டி கும்பகோணத்திலிலுள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் 10.7.2015இல் தொடங்கின. [5] 13.7.2015 காலை கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. [6]

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006

மேற்கோள்கள்[தொகு]

13.7.2015 கும்பாபிஷேகம் படத்தொகுப்பு[தொகு]