கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பகோணத்திலுள்ள முக்கியமான பழைமையான திருக்கோயில் ஆகும்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

கோயில் வரலாறு[தொகு]

கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்களில் இதுவும் ஒரு முக்கியமான கோயிலாகும். இக்கோயில் நகரின் மையப்பகுதியில் உள்ளது. கோயிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது. மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.[1]

கோயில் அமைப்பு[தொகு]

மூலவர் கருவறையின் வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். திருச்சுற்றின் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், விநாயகர் காணப்படுகின்றனர். நவக்கிரகங்கள் உள்ளன. சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார். நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை மூலவருக்கு முன்பாகக் காணப்படுகின்றன. திருச்சுற்றில் பூஞ்சோலை மாரியம்மனுக்காக ஒரு தனி சன்னதி உள்ளது.

ராகுகால வழிபாடு[தொகு]

இக்கோயிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள காளிகா பரமேஸ்வரிக்குத் தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 22, 2015 அன்று நடைபெற்றது.[2]

அக்டோபர் 22, 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]