உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 10°55′56″N 79°31′58″E / 10.93222°N 79.53278°E / 10.93222; 79.53278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருச்சேரை சாரநாதப்பெருமாள் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
சாரநாதப்பெருமாள் திருக்கோயில் is located in தமிழ் நாடு
சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
ஆள்கூறுகள்:10°55′56″N 79°31′58″E / 10.93222°N 79.53278°E / 10.93222; 79.53278
பெயர்
பெயர்:திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:திருச்சேறை
கோயில் தகவல்கள்
மூலவர்:சாரநாதர்
தாயார்:சாரநாயகி
தீர்த்தம்:சார புஷ்கரணி
உற்சவர்:ஸ்ரீ சாரநாதப் பெருமாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:15ம் நூற்றாண்டு
அமைத்தவர்:தஞ்சை நாயக்க மன்னர்கள்

சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை.

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன. இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள தொடருந்து நிலையம் கும்பகோணமும், வானூர்தி நிலையம் திருச்சியும் ஆகும். இக்கோவில் அஞ்சல் முகவரி: அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்

கோவில்

[தொகு]
கொடி மரமும் மூன்று நிலை கோபுரமும்

இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் 90 அடி உயரமானது. கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன.. கோயில் உள் சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலின் மூலவர் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாக உள்ளார். இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் "திருச்சேறை" ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர்.

கோவில் விமானம்: சார விமானம்; புஷ்கரணி: சார புஷ்கரணி.

தல வரலாறு

[தொகு]

ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து பிரளயகாலம் வருகிறது, நீ உடன் பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் என கட்டளை இட்டார். பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்தவன்னம் இருந்தது. மகாவிஷ்ணுவை வேண்ட திருமால் பூலோக முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்ததில் நீராடி, மண் எடுத்து செய் எனக் கூறினார். பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார். பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும், காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது என்பதும் இத்தலம் குறித்த மரபுவழி வரலாறுகளாகும்.

விஜயநகரப் பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் மன்னார்குடியில் இராஜகோபால சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கத் தீர்மானித்து அதற்கான பொறுப்பைத் தன் அமைச்சரான நரச பூபாலனிடம் அளித்தார். பூபாலன் சாரநாதப் பெருமாளின் பக்தர். திருச்சேறையிலும் கோவில் அமைக்க விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக்குக் கருங்கற்களைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பாரவண்டியிலிருந்தும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிட்டுச் செல்லும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். இச்செய்தியை அறிந்து சினமடைந்த அரசன் திருச்சேறைக்குச் சென்றான். அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதப் பெருமாள், இராஜகோபால சுவாமியாகக் காட்சியளித்ததால் சினம் தீர்ந்த அரசன் இக்கோவிலையும் அமைப்பதற்கு மனம் உவந்தான் என்பதும் இத்தலம் குறித்த மரபு வரலாறு ஆகும்.

ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவிழா

[தொகு]

10 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இங்கு நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானதாகும். 10 ஆம் நாளன்று தேரோட்டம். பெருமாள் ஐந்து தேவியருடன் காவிரித் தாய்க்குக் காட்சியளித்த நிகழ்வு நடந்தது தைப்பூச நாளில் என்பதால் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மங்களசாசனம்

[தொகு]

திருமங்கையாழ்வார் இத்தலம் குறித்து 13 பாசுரங்களில் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று:

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.

ஆதாரங்கள்

[தொகு]
  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
  • Coward, Harold G. (2000), Visions of a new earth: religious perspectives on population, consumption and ecology, New York: State University of Newyork Press, Albany, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-4457-0.

வெளி இணைப்புகள்

[தொகு]