உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் இராமசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கும்பகோணம் இராமஸ்வாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில்
கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில் is located in தமிழ் நாடு
கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில்
கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில்
இராமசுவாமி கோயில், கும்பகோணம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°57′25″N 79°22′25″E / 10.9569°N 79.3737°E / 10.9569; 79.3737
பெயர்
புராண பெயர்(கள்):குடந்தை
பெயர்:கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பட்டாபிசேக ராமர், சீதாப்பிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. 1620
அமைத்தவர்:ரகுநாத நாயக்க மன்னர்

கும்பகோணம் இராமசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கும்பகோணத்தில் அமைந்துள்ள கலைச்சிறப்பு மிக்க பழைமையான ஒரு வைணவத் திருத்தலம் ஆகும்.

தல வரலாறு

[தொகு]

இக்கோயில் குடந்தை நகரின் நடுநாயகமாக பெரிய கடைவீதியின் தென் கோடியில் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இக்கோயில் பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பெற்றது.

மூலவர், தாயார்

[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பு பட்டாபிசேக நிலையில் இராம பிரான் காட்சி தருவதேயாகும். இராமர், சீதாபிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருகனன்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைவருடைய சிற்பங்களை கருவறையில் காணமுடியும். இவர்களுடைய திருமேனிகள் அழகே உருவெடுத்தாற்போல விளங்குகின்றன. ஆஞ்சநேயர் வீணையுடனும், இராமாயண பாராயணத்துடனும் இருக்கும் நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருகன் சாமரம் வீச, இலக்குமணம் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து இராமச்சந்திரமூர்த்தியின் ஆணையை எதிர்பார்ப்பதுபோல காட்சி தருகிறார்.[1] லட்சுமணரே, ராமரின் வில்லையும் சேர்த்துப் பிடித்தபடி இருப்பது வேறு திருத்தலங்களில் காண முடியாத அரிய அமைப்பு.[2]

சிற்பக்கூடம்

[தொகு]

இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. இந்த முன் மண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. இம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிற்பக் கலை மிளிர்கிறது. ஒவ்வொன்றும் வரலாற்றுக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ரதி மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன.[3]

இராமாயண ஓவியம்

[தொகு]

இக்கோயிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும். இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம்.

கொடி மரம்

[தொகு]

இக்கோயிலில் 13.7.2015 அன்று கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரத்தின் அடிப்பாகம் சேதமடைந்ததால், அக்கொடி மரம் நீக்கப்பட்டு 20 அடி உயரத்தில் நாட்டு தேக்கு மரத்தினால் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது.[4]

12 கருட சேவை

[தொகு]

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.[5][6]

குட முழுக்கு

[தொகு]

2016இல் நடைபெறவுள்ள மகாமகத்தை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட நான்கு விமானங்களுக்கு திருப்பணிகள் நிறைவு பெற்றன. செப்டம்பர் 4, 2015 வெள்ளிக்கிழமை காலை புதிதாக வடிவமைக்கப்பட்ட ரதம், தங்கமுலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம், ராஜகோபுர கலசங்கள், மூலவர் கோபுர கலசம்,தங்க முலாம் பூசப்பட்ட கருட வாகனம், படிச்சட்டங்கள் ஆகியவற்றின் ஊர்வலம் நடைபெற்றது.[7] செப்டம்பர் 9, 2015 காலை ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானம் ஆகியவற்றுக்கு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.[8]

9.9.2015 கும்பாபிஷேகம் படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.
  2. http://books.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4783&cat=3[தொடர்பிழந்த இணைப்பு]
  3. அருள்மிகு இராமசாமி திருக்கோயில் தல வரலாறு, கும்பகோணம், 1998
  4. கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை, தினமணி, 14.7.2015
  5. 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016
  6. "கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016". Archived from the original on 2018-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  7. குடந்தை ராமசாமி கோயிலில் இன்று கலச ஊர்வலம், தினமணி, 4 செப்டம்பர் 2015
  8. கோயிலில் குடமுழுக்கு, தினமணி, 10 செப்டம்பர், 2015[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]