உள்ளடக்கத்துக்குச் செல்

பொய்கையாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொய்கையாழ்வார்
ஆழ்வர்களில் முதன்மையானவர் அவர்.
பிறப்புகாஞ்சிபுரம், தமிழ்நாடு
தத்துவம்விசிஷ்டாத்வைதம்
குருசேனை முதலியார்
இலக்கிய பணிகள்முதலாம் திருவந்தாதி

பொய்கையாழ்வார் (ஒலிப்பு) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்கள் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது.[1][2] முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.[சான்று தேவை]

பிறப்பு

[தொகு]

இவர் காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெக்கா எனும் பகுதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவிலில் உள்ள பொய்கையில் பிறந்தார். காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.[3] சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஆறு ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவ நம்பிக்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சசன்யம் எனப்படும் புனித சங்கின் அம்சம் ஆவார்.[4]

முதலாழ்வார்கள்

[தொகு]

இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

கால நிர்ணயம்[5]

[தொகு]
ஆதாரம் முதலாழ்வார்களின் காலம்
மா. இராசமாணிக்கம் 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
சாமி சிதம்பரனார் 7ஆம் நூற்றாண்டு
பூர்ணலிங்கம் பிள்ளை 7ஆம் நூற்றாண்டு
கலைக்களஞ்சியம் 5ஆம், 6ஆம் நூற்றாண்டின் பின்பகுதி
மு. இராகவையங்கார் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் 7ஆம்

நூற்றாண்டின் தொடக்கம் வரை

ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்

[தொகு]
திருக்கோவில் இடம் படம் திருமால்-திருமகள்
1. திருவரங்கம் 10°51′45″N 78°41′23″E / 10.8625°N 78.689722°E / 10.8625; 78.689722
1 பாசுரம்
2. திருவெக்கா 12°49′26″N 79°42′43″E / 12.824°N 79.712°E / 12.824; 79.712
1 பாசுரம்
3. திருக்கோயிலூர் 11°58′01″N 79°12′07″E / 11.966944°N 79.201944°E / 11.966944; 79.201944
4. திருப்பரமபதம்
Vishnu, Lord of Vaikuntha
Vishnu, Lord of Vaikuntha
5. திருப்பதி 13°08′35″N 79°54′25″E / 13.143°N 79.907°E / 13.143; 79.907
6. திருப்பாற்கடல்

இறைவனின் நாடகம்

[தொகு]

வைணவ இலக்கியங்களின் படி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாகத் தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் "ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்" எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்குச் சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் (அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில் (அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.[6]

மூன்று திருவந்தாதிகள்

[தொகு]

அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது),

இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது),

மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆன்மிகம், ed. (31 அக்டோபர் 2014). ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம். தினமணி.
  2. 12 ஆழ்வார்கள், ed. (09 பிப்ரவரி 2011). பொய்கையாழ்வார். தினமலர். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. "Poigai Alzhwar – Jeeyar Educational Trust UK" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  4. "Poigai Alwar – Biography, Early Life & Significance - Astropedia". Astroved Astropedia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-09.
  5. நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997
  6. "ஆழ்வார்கள் வரலாறு". www.tamildigitallibrary.in. பார்க்கப்பட்ட நாள் 2023-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்கையாழ்வார்&oldid=3960304" இலிருந்து மீள்விக்கப்பட்டது