தொண்டரடிப்பொடியாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் பத்தாமவராக வரும் இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

  • திருப்பள்ளியெழுச்சி
  • திருமாலை

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

திருவரங்கத்து இறையாகிய அரங்கனுக்காக பூமாலை கைங்கர்யம் செய்வதற்குண்டான நந்தவனம் அமைத்து அன்றலர்ந்த மலர்களை பறித்து அழகான பூச்சரங்களாக தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பித்து வரும் வேளையில் தேவதேவி என்ற சோழநாட்டு கணிகையின் பால் விருப்பம் கொண்டு தன்னையே மறந்தார். கணிகையால் தன் செல்வம் யாவும் இழந்த இவருக்காக அரங்கன் தன் கோயில் வட்டிலைக் கொடுத்துதவ, அதை களவாடிய பழி இவர் மீது வீழ்ந்து அரசன் முன் இவரை இட்டுச்சென்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டதோடு, இவரையும் ஆட்கொண்டது. மீண்டு வந்த இவர் தன் இறுதிவரை அரங்கனுக்கே அடிமைப்பூண்டார்.

பெயர்க்காரணம்[தொகு]

தான் எனும் ஆணவத்தை தவிர்க்கும் பொருட்டு தன்னை சிறுமைப்படுத்திக் கொள்வது ஞானிகளுக்கு இயற்கை. மேலும் பரமனுக்கு அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக எண்ணுவது வைணவ மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்றும், அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துப்போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார்.

முன்னோடி[தொகு]

தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.

சிறப்பு[தொகு]

"திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது. இதன் பொருள் யாதெனில் ஆழ்வார் இயற்றிய திருமாலை எனும் நூலை அறிந்திடாதவர் பரமனாகிய திருமாலையே அறிந்திடாதவர்கள் ஆவார் என்பதாம். அல்லது பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் திருமாலை எனும் நூலை படித்தால் போதுமென்பதாம்.

திருப்பள்ளியெழுச்சியின் முதல்துளி[தொகு]

காலைப்பொழுது விடிவதை வெகு இயல்பாக நம் கண்முன் காட்சிப்படுத்தும் இப்பாடல்களில் முதல்பாடல் இதோ:

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்!
கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,
வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்த்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,
அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!

http://thirumandangudi.angelfire.com/ Blog: http://thirumandangudithondaradipodiazhwar.blogspot.in/