திருப்பல்லாண்டு (வைணவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பல்லாண்டு (வைணவம்)
நூல் பெயர்:திருப்பல்லாண்டு (வைணவம்)
ஆசிரியர்(கள்):பெரியாழ்வார்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர்ச் சேர்ந்த பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும். இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதல் ஆயிரம் பாக்களில் முதல் 12 பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.

மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்குக் கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சிப் பாடப்பட்டதே திருப்பல்லாண்டு.

இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற, இவரது பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.

மேலும் சாற்றுமறை எனும் வைணவ தினவழிபாட்டின் தொடக்கத்தின் போதும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின் போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இப்பல்லாண்டு இன்றளவும் பாடப்பட்டே பின்னரே சுவாமி திருக்கோயிலுக்குள் எழுந்தருள்கிறார்.

வடமொழி வேதங்களுக்கு "ஓம்" எப்படி ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இந்தத் 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது.

சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு சைவத்திருமுறையில் உள்ள நூல்.

வெளியிணைப்பு[தொகு]

விக்கி நூல்களில் வைணவத் திருப்பல்லாண்டு