கத்ரி கோபால்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கத்ரி கோபால்நாத்
Kadri Gopalnath
Kadri Gopalnath.png
பிள்ளையார்பட்டியில் கத்ரி கோபால்நாதின் கச்சேரி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு திசம்பர் 11, 1949 (1949-12-11) (அகவை 68)
இசை வடிவங்கள் இந்திய பாரம்பரிய இசை, திரையிசை, ஜாசு இசைக்கோர்வை
தொழில்(கள்) சாக்சபோன் வாசிப்பு
இணையதளம் http://www.kadrigopalnath.com/
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
சாக்சபோன்

கத்ரி கோபால்நாத் (துளு: ಕದ್ರಿ ಗೋಪಾಲನಾಥ್, டிசம்பர் 11, 1949) தென்னிந்தியாவைச் சேர்ந்த சாக்சபோன் இசைக் கலைஞர் ஆவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் பிறந்தவர். பெற்றோர்: தனியப்பா, கங்கம்மா.[1] கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்டார்.[2] மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத்; பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

இசை வாழ்க்கை[தொகு]

கோபால்நாத் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை செம்பை நினைவு அறக்கட்டளையில் நிகழ்த்தினார். அதன்பிறகு 1980 ஆம் ஆண்டு நடந்த ‘பாம்பே ஜாஸ் இசைவிழா’ இவரின் இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த ஜான் ஹன்டி எனும் ஜாஸ் இசைக் கலைஞர், கோபால்நாத்தின் இசையால் ஈர்க்கப்பட்டு இருவரும் இணைந்து இசை வழங்க விரும்பினார். ஜாஸ்சும் கருநாடக இசையும் கலந்த இசைக்கோர்வை, இசை நேயர்களை பெரிதும் கவர்ந்தது.

பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, செருமனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த அனைத்துலக செர்வான்டினோ இசைவிழா (International Cervantino Festival), பிரான்சின் பாரிசில் நடந்த ‘இசையரங்க இசைவிழா’ என நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார்.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் முயற்சியால் ‘டூயட்’ எனும் தமிழ் திரைப்படத்தில் கோபால்நாத், ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றினார். அனைத்துப் பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது; அப்பாடல்களில் பெரும்பாலும் 'கல்யாண வசந்தம்' எனும் இராகம் பயன்படுத்தப்பட்டது. செவ்வி ஒன்றில் கத்ரி கோபால்நாத் பகிர்ந்தது: "ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டினேன். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது."

வெளியாகியுள்ள இசைத் தொகுப்புகள்[தொகு]

 • அமெரிக்காவைச் சேர்ந்த சாக்சபோன் கலைஞரும் இசையமைப்பாளருமான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் 2005ஆம் ஆண்டு முதற்கொண்டு இணைந்து பணியாற்றினார் கோபால்நாத். இதன் பலனாக 'கின்ஸ்மென்' (Kinsmen) எனும் இசைத் தொகுப்பு வெளியானது.
 • ஜாஸ் புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஜேம்சு நியூட்டன் என்பவருடன் இணைந்து 'சதர்ன் பிரதர்ஸ்' (Southern Brothers) எனும் இசைத் தொகுப்பினை கோபால்நாத் வெளியிட்டார்.
 • 'ஈஸ்ட்-வெஸ்ட்' (East-West) எனும் ஒலி-ஒளி வழங்குதலையும் வெளியிட்டுள்ளார். இந்திய-மேற்கத்திய இசைக் கலப்பினை இத்தொகுப்பில் இவர் செய்துள்ளார். இந்தியாவின் தியாகராஜர், செருமனியின் பேத்தோவன் போன்றோரின் இசையை உள்ளடக்கிய இந்த இசைத் தொகுப்பு தயாராக 6 மாதங்களானது.

சிறப்புகள்[தொகு]

 • லண்டன் பிபிசி நடத்தும் ‘உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கருநாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது. லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இவரின் நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள ‘ஆசியன் மியூசிக் சர்க்கியூட்’ எனும் அமைப்பு புரவலராக இருந்தது.
 • பிரபல கருநாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர், கத்ரி கோபால்நாத்தை ‘மெய்யான கருநாடக இசை மேதை’ என பாராட்டியுள்ளார்.

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்[தொகு]

 • கம்பன் புகழ் விருது 2018, வழங்கியது: அகில இலங்கைக் கம்பன் கழகம்
 • கர்நாடக கலாஸ்ரீ, 1996
 • கர்நாடக ராஜ்யோட்சவா விருது, 1998
 • பத்மசிறீ, 2004 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
 • மதிப்புறு முனைவர் பட்டம், 2004 ; வழங்கியது: பெங்களூர் பல்கலைக்கழகம்
 • கலைமாமணி, வழங்கியது: தமிழ்நாடு அரசு
 • சாக்சபோன் சக்ரவர்த்தி
 • சாக்சபோன் சாம்ராட்
 • கானகலா ஸ்ரீ
 • நாதபாசன பிரம்மா
 • சுனதா பிரகாசிகா
 • நாத கலாரத்னா
 • நாத கலாநிதி
 • சங்கீத வாத்திய ரத்னா
 • மேதகைமை விருது (Vocational Excellency Award), வழங்கியது: மெட்ராசு ரோட்டரி கழகம்
 • ஆசுதான வித்வான், வழங்கியது: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
 • ஆசுதான வித்வான், வழங்கியது: ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம்
 • ஆசுதான வித்வான், வழங்கியது: ஸ்ரீ அஹோபில மடம்
 • ஆசுதான வித்வான், வழங்கியது: ஸ்ரீ பிள்ளயபட்டி கோவில்
 • சங்கீத கலாசிகாமணி விருது, 2013, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரி_கோபால்நாத்&oldid=2518974" இருந்து மீள்விக்கப்பட்டது