உள்ளடக்கத்துக்குச் செல்

லுடுவிக் வான் பேத்தோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லுடுவிக் ஃவான் பேத்தோவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லுட்விக் வான் பேத்தோவன்
Ludwig van Beethoven
யோசப் டைல்ர் வரைந்த ஓவியம், 1820
பிறப்புபான், கோல்ன்
இறப்பு(1827-03-26)26 மார்ச்சு 1827 (அகவை 56)
வியன்னா, ஆத்திரியப் பேரரசு
பணிஇசையமைப்பாளர்
கையொப்பம்

லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven, /ˈlʊdvɪɡ væn ˈbˌtvən/ (கேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

இவர் 1792இல் மேற்கத்திய இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகருக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் கடைசியில் வியன்னா நகரில் 1827இல் இறந்தார்.

பிறப்பு மற்றும் இளமைக்காலம்[தொகு]

யோகன் பீத்தோவன் மற்றும் மரியா மாக்டலேன் கவேரிச் ஆகியாரின் மகனாராக 1770ஆம் ஆண்டில் பான் என்னும் ஊரில் பிறந்தார் லூடுவிக் வான் பீத்தோவன்[2]. இவரது பிறந்த தேதி தொடர்பான முறையான ஆவணங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. லூடுவிக்கின் தந்தை யோகன் பீத்தோவன் ஒரு இசைகலைஞர் மற்றும் இசை ஆசிரியராவார். லூடுவிக்கின் முதல் இசை ஆசிரியர் அவருடைய தந்தை யோகன் தான். பின்னர் உள்ளுரில் இவருக்கு வேறு இசை ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். பிள்ளை பருவத்திலேயே இசை கற்ற தொடங்கினார் லூடுவிக். யோகன் மிக கண்டிப்பான ஆசிரியராக திகழ்ந்தவர். அச்சிறு வயதிலேயே லூடுவிக்கின் இசை திறமை வெளிப்பட தொடங்கியது. தந்தையிடன் இசை கற்றபோதே பிற இசைகலைஞர்களிடமும் இசை கற்றார் லூடுவிக். கில்லாசு ஃவான் ஈடென், தோபியாசு பிடெட்ரிச் ஃபெய்ஃபர் (பியானோ), பிரான்சு ரோவண்டினி (வயலின் மற்றும் வியோலா) போன்றோரிடமும் இசை கற்றுக்கொண்டார் இளம் லூடுவிக். லூடுவிக்கை தன் இசை வாரிசாக நிறுவ முனைந்த தந்தை யோகன் லூடுவிக்கின் ஆறாம் அகவையில் (1778ல்) அவருடைய முதல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

பின்னர் 1779ல் லுடுவிக் தனது வாழ்வின் முக்கியமான ஆசிரியரான கிறிஸ்டியன் கோட்லாப் நீஃப்பிடம் இசையமைத்தல் பற்றி கற்கத் தொடங்கினார். நீஃப்பிடம் இசை எழுத கற்றதோடு அவருடைய உதவியுடன் தனது முதல் இசை படைப்பை 1783ல் வெளியிட்டார் லூடுவிக். 1784 முதல் நீஃப்பின் துணை இசைக்கலைஞராக அரசவை இசைக்குழுவில் பணியாற்றத் தொடங்கினார். 1783ல் லூடுவிக் தனது முதல் மூன்று பியானோ சொனாட்டாகளை மாக்சுமிலியன் பெடரிக் என்பவருக்காக உரித்தாக்கினார். லூடுவிக்கின் இசை திறமையினால் ஈர்க்கப்பட்டு, அவரின் இசை கல்விக்காக கொடையளித்தார் மாக்சுமில்லியன். மொசார்டுடன் இணைத்து இசை கற்பதற்காக 1787 மார்ச் மாதம் வியன்னா சென்றார். அவர்களுடை நட்பு குறித்து தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. தன் தாயாரின் மறைவு காரணமாக உடனேயே அவர் பான் திரும்பினார். தந்தையும் நோயுற்ற காரணத்தினால், குடும்ப சுமை லூடுவிக் மீது விழுந்தது.

காது கேளாமை[தொகு]

1796 ஆம் ஆண்டு பீத்தோவனின் 26 ஆம் வயதில் அவருக்கு காது கேளாமை ஆரம்பித்தது.[3] கேட்கும் திறனை அவர் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கினார்.

காதிரைச்சல் நோயால் அவர் தீவிரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்தார். ஒரு விதமான இரைச்சல் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததால் அவரால் இசையை கேட்க முடியாமல் போனது. காதில் வலி ஏற்படுவதால் அவர் பேசுவதைக்கூட குறைத்துக்கொண்டார்.

என்ன காரணத்தினால் அவருக்கு காதுகேளாமை வந்ததென்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அவருக்கு டைபஸ் நோய் இருந்தது என்று மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் அவருக்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவும் பழக்கம் இருந்தது எனவும், அதனால் இந்நோய் ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உட்காதுகளில் இருந்த நாள்பட்ட புண்களே செவிட்டுத்தன்மைக்கு காரணம் என்று கூறியது.

1801 வாக்கில் தனது காதின் நிலை பற்றி விளக்கி தன் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார் பீத்தோவன்.சில நெருங்கிய நண்பர்கள் செவிட்டுத்தன்மை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர். பின் மருத்துவரின் ஆலோசனைபடி வியன்னாவுக்கு அருகில் உள்ள சிறிய ஆஸ்திரிய கிராமமான ஹெலிசாட்டில் வசித்து வந்தார். அவர் அங்கு 1802 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வசித்து வந்தார்.

ஹெலிசாட்டில் இருந்தபோது பீத்தோவன் தன் தமயனுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி இருந்தார். அதில் அவர் செவிட்டுத்தன்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடேன் என்று கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் அவரால் எதையுமே கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. தனது ஒன்பதாம் ஒத்தினி இசையை வாசிக்கும் பொழுது, அவ்விசை அவர் காதுகளிலேயே விழவில்லையாம். பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்பதும், கைத்தட்டல் ஓசைகளும் கூட அவர் காதுகளில் விழவில்லையாம். சுற்றி பார்த்துதான் அவர்கள் கைதட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டாராம் பீத்தோவன். அதன் பின் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பதை நிறுத்திக் கொண்டாராம் பீத்தோவன். அவரின் ஏராளமான காது கேட்கும் கருவிகள் தற்போது ஜெர்மனியின் போன் என்னும் நகரில் உள்ள பீத்தோவனின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. (பீத்தோவன் பிறந்த வீடு தற்போது பீத்தோவனின் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது).

செவிட்டுத்தன்மை காரணமாக பீத்தோவன் உரையாடல்களை நோட்டுப் புத்தகத்தில் நிகழ்த்தத் தொடங்கினார். அவரின் நண்பர்கள் சொல்லவிரும்புவதை உரையாடல் கையேட்டில் எழுதுவார்கள். அதற்கு பீத்தோவன் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வாயிலாகவோ பதில் அளிப்பார். இவ்வாறு பீத்தோவன் 400 உரையாடல் கையேடுகளை வைத்திருந்தார். அதில் 264 கையேடுகள் அவரின் இறப்பின் பின் அழிக்கப்பட்டன. மீதம் உள்ளவற்றையும் சில மாறுதல்களை செய்து மக்களின் காட்சிக்கு வைத்துள்ளனர்.

நடத்தை[தொகு]

யூலியசு சிகிமிட் வரைந்த இயற்கையுடன் பீத்தோவான் நடப்பது போன்ற

பீத்தோவனின் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையான காதுவலியால் அவதிப்பட்டே கழிந்தது. இருபதாவது வயது முதலே எரிச்சலூட்டும் கடுமையான வயிற்று வலியாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பீத்தோவானுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியதாகவும் பதிவு செய்துள்ளார். இருமுனையப் பிறழ்வு எனப்படும் மனநோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அறியப்படுகிறது [4]. ஆயினும்கூட, அவருடைய வாழ்நாள் முழுவதும் நெருங்கிய மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பர்களின் வட்டத்தை இவர் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையின் முடிவில், பீத்தோவனின் நண்பர்கள் அவரது தனிப்பட்ட செயல்திறன்களுக்குன் கூட அவருக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபட்டனர் [5].

ஆதரவு[தொகு]

பீத்தோவன் தனது படைப்புகளை வெளியிட்டும் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருமானத்தை ஈட்டினார். ஆனாலும், வருவாய்க்கு ஆதரவாளர்களின் தாராள மனப்பான்மையை அவர் சார்ந்திருந்தார். இளவரசர் லோக்கோவிட்சு மற்றும் இளவரசர் லிச்னொவ்சுகி உள்ளிட்ட ஆரம்பகால ஆதரவாளர்கள் கூடுதலாக இவருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகையை அளித்தனர்.

இறப்பு[தொகு]

பேத்தோவன் தனது மீதமுள்ள மாதங்களில் பெரும்பாலான நாட்கள் படுக்கையிலேயே இருந்தார். அவர் ஒரு இடியுடன் கூடிய மழை நாளில், தனது 56 ஆம் வயதில் மார்ச் 26, 1827 அன்று கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் பிரேத பரிசோதனையில் அதிக மது அருந்துதல் காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. பீத்தோவனின் இறுதி ஊர்வலத்தில் வியன்னாவின் குடிமக்கள் 20,000 பேர் கலந்து கொண்டனர்.

நடப்புப் பண்பாட்டில்[தொகு]

பல வாழ்க்கை வரலாற்றுத் திரைபடங்களில் பீத்தோவானின் வாழ்க்கை மையப் பொருளாக இடம்பெற்றுள்ளது. பீத்தோவான்சு டென்த் என்றவொரு நாடகத்தில் பீட்டர் உசிட்டினோவ் இரட்டை வேடங்களில் நடித்தார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் நவம்பர் 27 இல் உசிட்டினோவ் தானே முக்கியமான கதாபாத்திரத்தில் பங்கேற்று சியார்ச்சு ரோசு உள்ளிட்ட துணை நடிகர்களுடன் இணைந்து நடித்தார் [6].

பெருமைப்படுத்துதல்[தொகு]

பீத்தோவன் நினைவுச்சின்னம், பான் நகரில் அவரது 75 வது ஆண்டு நினைவாக 1845 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. செருமனியில் ஒரு இசையமைப்பாளருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும். பிரான்சு லிசித்து என்ற இசை வல்லுநரின் தூண்டுதலால் இக்கலை அரங்கம் ஒரே மாதத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வொல்ஃப்கேங்க் அமதியுசு மோட்சார்ட் என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளருக்கு 1842 ஆம் ஆண்டில் ஆசுத்திரியாவிலுள்ள சால்சுபர்க் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. ஆனால் வியன்னா நகரில் 1880 ஆம் ஆண்டு வரை பீத்தோவானுக்கு சிலையேதும் வைக்கப்படவில்லை என அறியப்படுகிறது [7].

பாசுடனில் அமைக்கப்பட்டுள்ள சிம்பொனி அரங்கத்தில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகடுகள் ஒன்றே ஒன்றில் மட்டும் பீத்தோவானின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற தகடுகள் அனைத்தும் காலியாகவே விடப்பட்டுள்ளன என்பதை கூர்ந்து நோக்கினால் பீத்தோவான் அடைந்திருந்த புகழின் பெருமை நன்கு விளங்கும்.[8].

பான் நகரில் மையத்தில் ஒரு அருங்காட்சியகம், அவருடைய பிறப்பு இடமான பீத்தோவான் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதே நகரில் 1845 ஆம் ஆண்டு முதல் ஒரு இசை விழா, பீத்தோவென் இசைவிழா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நடைபெறாமல் இருந்தது, ஆனால் 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதன் கோளின் மீதுள்ள மூன்றாவது பெரிய கிண்ணக்குழிக்கு பீத்தோவானின் பெயர் சூட்டப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

பீத்தோவனின் இசைகள்[தொகு]

பீத்தோவனின் மூன்று உலக புகழ் பெற்ற இசைகள்.

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பேத்தோவன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Beethoven was baptised on 17 December. His date of birth was often, in the past, given as 16 December, however this is not known with certainty; his family celebrated his birthday on that date, but there is no documentary evidence that his birth was actually on 16 December.
  2. Barry Cooper (8 October 2008). Beethoven. Oxford University Press. pp. 407–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-531331-4. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
  3. Solomon (2001)[page needed]
  4. D. Jablow Hershman; Julian Lieb (1988). The Key to Genius: Manic Depression and the Creative Life. Prometheus Books 
  5. Grove Online
  6. "Plays in English about Beethoven – Ludwig van Beethoven's website".
  7. Alessandra Comini, The Changing Image of Beethoven: A Study in Mythmaking. Books.google.com.au. 2008-05-30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86534-661-1. பார்க்கப்பட்ட நாள் 2012-09-20.
  8. "The History of Symphony Hall".

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ludwig van Beethoven
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுடுவிக்_வான்_பேத்தோவன்&oldid=3675703" இலிருந்து மீள்விக்கப்பட்டது