உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசுதானா சரவாக்

ஆள்கூறுகள்: 1°33′49″N 110°20′44″E / 1.56361°N 110.34556°E / 1.56361; 110.34556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஸ்தானா சரவாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசுதானா சரவாக்
Astana Sarawak
கூச்சிங் நகரில் ஆசுதானா சரவாக்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டி முடிக்கப்பட்டது
வகைஅரண்மனை
இடம்கூச்சிங், சரவாக்
நாடு மலேசியா
ஆள்கூற்று1°33′49″N 110°20′44″E / 1.56361°N 110.34556°E / 1.56361; 110.34556
கட்டுமான ஆரம்பம்1870; 154 ஆண்டுகளுக்கு முன்னர் (1870)
நிறைவுற்றது1888; 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1888)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை1

ஆசுதானா சரவாக் அல்லது சரவாக் அரண்மனை (ஆங்கிலம்: The Astana, Sarawak; மலாய்: Astana Negeri Sarawak); என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ள ஓர் அரண்மனையாகும். சரவாக் ஆற்றின் வடக்குத் திசையின் கரையோரத்தில் உள்ளது.

இந்த அரண்மனை, சரவாக் மாநிலத்தின் ஆளுநரான யாங் டி பெர்துவா சரவாக் (Yang di-Pertua Negeri Sarawak) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். ’இஸ்தானா’ எனும் மலாய்ச் சொல்லின் மாறுபாட்டுச் சொல்தான் ’ஆஸ்தானா’. அரண்மனை என தமிழில் பொருள்படும்.[1]

பொது[தொகு]

இந்த அரண்மனை 1870-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த வெள்ளை இராசா (White Rajah), சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவரால்; அவரின் மனைவி மார்கரெட் ஆலிசு லிலி டி விண்ட் (Margaret Alice Lili de Windt) என்பவருக்குத் திருமணப் பரிசாக கட்டப்பட்டது.[2]

பொதுமக்களின் பார்வைக்கு இந்த அரண்மனை திறக்கப்படுவது இல்லை. இருப்பினும் அரண்மனையின் பூங்கா தோட்டங்களைப் பொதுமக்கள் சரவாக் ஆற்றின் கரைகளில் இருந்து காணலாம். கூச்சிங் பாரம்பரிய வளங்களின் (Kuching Heritage Trail) ஒரு பகுதியாக இந்த அரண்மனை கருதப் படுகிறது.[1]

வரலாறு[தொகு]

வெள்ளை இராஜா, (ஆங்கிலம்: White Rajah; மலாய்: Raja Putih Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சியைக் குறிப்பிடும் பெயராகும்.

1840-ஆம் ஆண்டுகளில், புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) எனும் பிரித்தானியர் சில பகுதிகளைப் பெற்றுக் கொண்டார். அந்தப் பகுதிகள் தான், பின்னர் ஒரு சுதந்திரமான அரசாக, சரவாக் இராச்சியம் எனப் பெயர் பெற்றது.

அந்தக் காலக் கட்டத்தில், சரவாக்கை ஆட்சி செய்யத் தொடங்கிய புரூக் அரசக் குடும்பத் தலைவரையும்; புரூக் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும்; வேறுபடுத்திக் காட்டுவதற்காக ’வெள்ளை இராஜா’ எனும் அடைமொழிப் பெயர் பயன்படுத்தப்பட்டது.

சார்ல்ஸ் புரூக்[தொகு]

ஜேம்சு புரூக் என்பவர் சரவாக் இராச்சியத்தின் முதல் இராஜாவாக ஆட்சி செய்தார். 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, ஜேம்சு புரூக் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். மூன்றாவது ஆட்சியாளராக ஆட்சிக்கு வந்தவர் சார்லஸ் புரூக்.[3]

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராஜாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.

காலனித்துவப் பாரம்பரியக் கட்டிடங்கள்[தொகு]

வெள்ளை இராஜா வம்சத்தின் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தை, இன்றும்கூட சரவாக்கில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு காலனித்துவப் பாரம்பரியக் கட்டிடங்களில் காணலாம். ஆஸ்தானா சரவாக், முன்பு அரசு மாளிகை (Government House) என்று அழைக்கப்பட்டது.[4]

சரவாக் இராச்சியத்தின் இராஜாவான சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவரால்; அவரின் மனைவி மார்கரெட் ஆலிசு லிலி டி விண்ட் என்பவருக்குத் திருமணப் பரிசாக இந்த அரண்மனை கட்டப்பட்டது.

சார்ல்சு புரூக் திருமணம்[தொகு]

1869 அக்டோபர் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சார்லஸ் புரூக் - மார்கரெட் ஆலிசு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மார்கரெட் ஆலிசு, சரவாக்கின் ராணி (Ranee of Sarawak) எனும் பட்டத்திற்குத் தகுதி உயர்த்தப் பட்டார். இராணி மார்கரெட் 1870-ஆம் ஆண்டில் சரவாக் வந்து சேர்ந்தார்.

பின்னர் அந்த அரசத் தம்பதிகள், சரவாக் ஆஸ்தானாவைத் தங்களின் முக்கிய இல்லமாகப் பயன்படுத்தினர். பின்னர் 1913-இல் வெளியிடப்பட்ட மார்கரெட் ஆலிசு நினைவுக் குறிப்பான மை லைப் இன் சரவாக்: தி அஸ்தானா (My Life in Sarawak: The Astana) எனும் நூலில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதி உள்ளார்.[5]

அந்தக் காலக் கட்டத்தில், அரண்மனைப் பூங்காவில் சார்லஸ் புரூக், பாக்கு மரங்களை நட்டு வைத்து இருக்கிறார். தன்னைப் பார்க்க வரும் டயாக் மக்களின் தலைவர்களுக்கு பாக்குச் சீவல்களை அன்பளிப்பாக வழங்குவது சார்லஸ் புரூக்கின் அப்போதைய வழக்கமாக இருந்து உள்ளது.[6]

வெள்ளை இராஜா வம்சாவழியினர்[தொகு]

பெயர் தோற்றம் பிறப்பு இறப்பு
ஜேம்சு புரூக்
(1841–1868)
29 ஏப்ரல் 1803, இந்தியா 11 ஜூன் 1868, இங்கிலாந்து
ஜோன் புரூக்
Rajah Muda of Sarawak
(1859–1863)
1823
இங்கிலாந்து
1 டிசம்பர் 1868, இங்கிலாந்து
சார்லஸ் புரூக்
(1868–1917)
3 ஜுன் 1829, இங்கிலாந்து 17 மே 1917, இங்கிலாந்து
சார்லசு வைனர் புரூக்
(1917–1946)
26 செப்டம்பர் 1874, இங்கிலாந்து 9 மே 1963, இங்கிலாந்து
பெர்த்திராம் புரூக்
Tuan Muda of Sarawak
(1917–1946)
- 8 ஆகஸ்டு 1876, சரவாக் 15 செப்டம்பர் 1965, இங்கிலாந்து
அந்தோனி புரூக்
Rajah Muda of Sarawak
(1939–1946)
- 10 டிசம்பர் 1912, இங்கிலாந்து 2 மார்ச் 2011, நியூசிலாந்து

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tamara Thiessen (2008). Bradt Travel Guide - Borneo. Bradt Travel Guides. pp. 242–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-252-1.
  2. Sam Bedford (29 May 2018). "The Astana: Kuching's Palace of the White Rajahs". Culture Trip. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.
  3. James, Lawrence (1997) [1994]. The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. pp. 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16985-X.
  4. James, Lawrence (1997) [1994]. The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. pp. 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16985-X.
  5. Margaret Brooke (Ranee of Sarawak.) (1913). My Life in Sarawak. Methuen.
  6. Alan Teh Leam Seng (8 October 2017). "Home of the White Rajahs". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • The Brooke Trustபுரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுதானா_சரவாக்&oldid=3652213" இலிருந்து மீள்விக்கப்பட்டது