உள்ளடக்கத்துக்குச் செல்

அரங்கேற்றம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரங்கேற்றம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புதுரைசாமி
காலகேந்திரா
செல்வராஜ்
மிஸ்ஸிஸ் கோவிந்தராஜன்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
பிரமிளா
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
வெளியீடுபெப்ரவரி 9, 1973
நீளம்4302 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரங்கேற்றம் (Arangetram) 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா, கமல்ஹாசன், எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான கமல்ஹாசனின் முதல் வாலிப வயது திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரமிளா, ஜெயசுதா, சசிகுமார், மற்றும் 'அச்சச்சோ' சித்ரா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். நடிகை ஜெயசித்ராவிற்கு இப்படமே அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.[3]

கதைக்களம்

[தொகு]

ராமு சாஸ்திரிகள் ஒரு ஏழை அர்ச்சகராவார். அவர் தன் மனைவி விசாலம் மற்றும் எட்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். அவரது கடுமையான கொள்கைகளும் பிடிவாதமான நடத்தையும் அவரது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு தடைகளாக மாறுகின்றன. இந்நிலையில் அவரது தங்கை ஜானகி கணவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் தன் மகளுடன் அண்ணனின் வீட்டுக்கு வந்து வசிக்கிறாள். இது அந்தக் குடும்பத்தின் துயரத்தையும், வறுமையையும் அதிகரிக்கிறது. ராமு சாஸ்திரிகளின் மூத்த மகள் லலிதா வேலைக்குப் போக ஆசைப்படுகிறாள். ஆனால் அவளின் தந்தை அதை அனுமதிக்கவில்லை. அவளின் பக்கத்து வீட்டுக்காரர் நடேச உடையார், அவரது மகன் தங்கவேலு ஆகியோருடன் நல்ல நட்புடன் இருக்கிறாள். தங்கவேலு லலிதா மீதான தனது காதலையும் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவிக்கிறான். இந்தக் காதலை உடையார் தடுக்கிறார். இதனால் வீட்டைவிட்டுச் செல்லும் தங்கவேலு ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது.

ராமு சாஸ்திரிகளின் குடும்பத்தில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. பல இரவுகள், அவர்கள் பசியுடன் உறங்கச் செல்கிறனர். ஒரு நாள் தன் தம்பி ஒரு பிச்சைக்காரரிடம் உணவை வாங்கி சிப்பிடுவதை அறிந்த லலிதா, தன் தந்தையின் எதிர்ப்பை மீறி உடையார் உதவியுடன் வேலை பெற்று வேலைக்குச் செல்கிறாள். அவளுடைய வருமானம் குடும்பத்தை படிப்படியாக உயர்த்துகிறது. அவளுடைய மூத்த தம்பி தியாகு மருத்துவராக ஆசைப்படுகிறான். மருத்துவக் கல்லூரியில் இடம் பெற பரிந்துரைக்காக லலிதா சென்னைக்குச் செல்கிறாள். பரிந்துரைக்காக வந்த இடத்தில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இந்த கொடூர நிகழ்வு குறித்து லலிதா யாரிடமும் சொல்லாமல் மூடி மறைக்கிறாள். பின்னர் அதிக சம்பளத்துடன், பதவி உயர்வு பெற்று ஐதராபாத்திற்கு பணிமறுதலில் செல்கிறாள். புதிய வேலையை ஏற்றுக்கொண்ட உடனேயே, தியாகுவின் மருத்துவப் படிப்பிற்காக பண உதவி வேண்டி தன் சம்பளத்தில் இருந்து முன் பணம் கேட்கிறாள். அவளுடைய இயலாமையைப் பயன்படுத்திக் கொண்ட மேலதிகாரி லலிதாவை பாலியல் இச்சையுடன் அணுகுகிறார். அவள் அதற்கு விட்டுக்கொடுக்கிறாள், அவர் அவளுக்குப் பணம் தருகிறார். அவளுடைய குடும்பத்தினரின் பணத் தேவைகள் அதிகரிக்கிறன. அவள் அதிக பணம் சம்பாதிக்க, பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். அவளுடைய குடும்பம் செழிப்பாக வாழும் அதே வேளையில், லலிதா அதற்காக அவதிப்படுகிறாள்.

ஒரு நாள், தங்கவேலு விலைமாதுவைத் தேடி லலிதாவின் வீட்டிற்கு வருகிறான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். தன் தந்தையின் கொட்டத்தை அடக்கவே தங்கவேலு இறந்துவிட்டதாக நாடகம் ஆடியிருப்பார். லலிதா இந்த அளவு தாழ்ந்து போனதைக் கண்டு வருத்தமடைந்த தங்கவேலு அங்கிருந்து வெளியேறுகிறான். ஆண்டுகள் செல்லச் செல்ல, லலிதாவின் உடன்பிறப்புகள் முன்னேறுகின்றனர்; தியாகு டாக்டராகிறான், தங்கை மங்களம் பாடகியாகிறாள்; தங்கை தேவி நிலக்கிழாரின் மகனான பசுபதியைக் காதலிக்கிறாள், அவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு லலிதா வீடு திரும்புகிறாள், அன்புடன் வரவேற்கப்படுகிறாள். ஆனால், தன் தாயின் நிலை அறிந்து அவள் மனச்சோர்வடைந்து, பெற்றோரின் பொறுப்பின்மையை விமர்சிக்கிறாள். தேவியின் திருமண நாளில், ஐதராபாத்தில் தன் வாடிக்கையாளராக இருந்த பசுபதிதான் மணமகன் என்பதைக் கண்டு லலிதா அதிர்ச்சியடைகிறாள். மணமகள் தன் தங்கை என்பதை அறிந்து திருமணத்தை ரத்து செய்துவிடுவானோ என்று அவள் அஞ்சுகிறாள். ஆனால் திருமணச் சடங்குகளை இயந்திரத்தனமாகச் செய்கிறாள். லலிதாவும் பசுபதியும் தனியாக சந்தித்து, கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு முன்னேற முடிவு செய்கின்றனர். உடையார் தன் மகனுக்கு திவசம் செய்யவிருக்கும் போது, லலிதா தலையிட்டு தங்கவேலு உயிருடன் இருப்பதைக் கூறுகிறாள். ஆனால் அவர்கள் சந்தித்த சூழ்நிலையைக் கூறவில்லை.

தியாகு வட்டாட்சியரின் மகள் பாமாவை காதலிக்கிறான். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. ராமு சாஸ்திரிகளும் விசாலமும் உடையாரை அவரது வீட்டிற்குச் சென்று நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கப் போகும்போது, தங்கவேலுவைப் பார்க்கின்றனர். வீட்டிற்கு வருவதற்கு முன் தங்கவேலு லலிதாவை எங்கே சந்தித்தார் என்று கேட்கின்றனர். அவன் அமைதியாக இருக்கிறன். ஆனால் அவர்கள் சென்ற பிறகு, தன் தந்தையிடம் லலிதாவை எப்படி, எங்கே சந்தித்தான் என்பது குறித்து கூறுகிறான். ஆனால் லலிதாவின் பெற்றோர் இதைக் கேட்டுவிடுகின்றனர். அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். ராமு சாஸ்திரிகளும் தியாகுவும் லலிதாவை ஏற்க மறுக்கின்றனர். லலிதா வீட்டை விட்டு வெளியேற்றினால் மட்டுமே திருமணத்தை நடத்துவதாக வட்டாட்சியர் கூறுகிறார். தியாகுவும் ராமு சாஸ்திரிகளும் அவளை இரக்கமின்றி விட்டைவிட்டு வெளியேற்றுகிறனர். அவளுடைய தியாகங்களைப் புரிந்துகொண்ட உடையார், அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவள் கண்ணியமாக வாழ, தங்கவேலுவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். தங்கவேலுவுக்கும் லலிதாவுக்கும் திருமணமும், தியாகுவுக்கும் பாமாவுக்கும் திருமணமும் நடக்கிறது. உடையார் மற்றும் தங்கவேலுவின் பெருந்தன்மைக்கு லலிதா நன்றியுள்ளவளாக இருந்தாலும், அவள் அனுபவித்த அதிர்ச்சி அவளை பைத்தியமாக்குகிறது.

நடிப்பு

[தொகு]
நடிகர்கதாபாத்திரம்
பிரமிளாலலிதா
சிவகுமார்தங்கவேலு
கமல்ஹாசன்தியாகு
எஸ். வி. சுப்பையாராமு சாஸ்திரிகள்
சசிகுமார்பசுபதி[4]
எம். என். ராஜம்விசாலம்
எம். எஸ். சுந்தரி பாய்ஜானகி
ஜெயசித்ராமங்கலம்[5]
ஜெயசுதாதேவி
செந்தாமரைநடேச உடையார்
அச்சச்சோ சித்ராமீனு
கிரிஜாகிரிஜா
ஆர். நீலகண்டன்இசை வாத்தியார்
ஒரு விரல் கிருஷ்ணா ராவ்ஜெயராமன்
ஜெய்சங்கர்கௌரவ தோற்றம்
லட்சுமிகௌரவ தோற்றம்

பாடல்கள்

[தொகு]

வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.[6][7]

எண்.பாடல்பாடகர்கள்நீளம் (நி:வி)
1. "ஆண்டவனின் தோட்டத்திலே" பி. சுசீலா 3:24
2. "கண்ணனிடம் எந்தன் கருத்தினை" கே. ஸ்வர்ணா 2:10
3. "மூத்தவள் நீ இருக்க" பி. சுசீலா 4:29
4. "ஆரம்ப காலத்தில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:51
5. "கண்ணனை காண்பதற்கோ" திருச்சி லோகநாதன் & கே. ஸ்வர்ணா 2:42
6. "மாப்பிள்ளை ரகசியம்" எல். ஆர். ஈஸ்வரி 3:27
7. "என்னடி மருமகளே உன்னை எவரடி பேசிவிட்டார்" டி. வி. ரத்தினம் 0:25
8. "கண்ணார்க்கும் கற்றவரும்" கே. ஸ்வர்ணா 0:39
9. "பாவியை கண்டவண்ணம்" கே. ஸ்வர்ணா 1:00
10. "ஸ்ரீமாதா ஸ்ரீமகா" கே. ஸ்வர்ணா 0:40
11. "அகர முதல நகுரச" கே. ஸ்வர்ணா 0:19

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராம்ஜி, வி. (9 July 2019). "அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!". Kamadenu. Archived from the original on 16 July 2019. Retrieved 16 July 2019.
  2. ராம்ஜி, வி. (9 சூலை 2019). "அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!". இந்து தமிழ். Archived from the original on 16 சூலை 2019. Retrieved 18 மே 2021.
  3. "துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020.
  4. "திரைப்படச்சோலை 22: [[சசிகுமார் (நடிகர்)|சசிகுமார்]] வம்சம்". இந்து தமிழ். 12 ஏப்ரல் 2021. Retrieved 4 மே 2021. {{cite web}}: URL–wikilink conflict (help)
  5. "தண்ணி கருத்திருச்சு..." தினமலர். 26 டிசம்பர் 2014. Archived from the original on 15 நவம்பர் 2017. Retrieved 18 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. Dhananjayan 2011, ப. 258.
  7. "Arangettram Tamil Film EP Vinyl record by V Kumar". Macsendisk. Archived from the original on 18 February 2023. Retrieved 18 February 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்றம்_(திரைப்படம்)&oldid=4346273" இலிருந்து மீள்விக்கப்பட்டது