உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
பிறப்புசுப்பிரமணியம் சங்கர்
(1938-07-12)சூலை 12, 1938 [1]
திருநெல்வேலி, இந்தியா
இறப்புசூன் 3, 2000(2000-06-03) (அகவை 61)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
செயற்பாட்டுக்
காலம்
1965-1998
வாழ்க்கைத்
துணை
கீதா சங்கர் ​(தி. 1967)
வலைத்தளம்
http://www.jaishankar.in

ஜெய்சங்கர் (Jaishankar, 12 சூலை 1938 – 3 சூன் 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். இவர் 1960களிலும், 70களிலும் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக இருந்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மக்கள் கலைஞர் அல்லது மக்கள் தமிழன் என்ற பட்டத்துடன் படங்களில் இவருத பெயர் குறிப்பிடப்பட்டது. வல்லவன் ஒருவன் மற்றும் சி. ஐ. டி. சங்கர் போன்ற படங்களில் இவர் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றும் குறிப்பிடப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

ஜெய்சங்கரின், இயற்பெயர் சங்கர் ஆகும். கும்பகோணத்தைப் பூர்வீகமாக கொண்டவர். ஆனால் திருநெல்வேலியில் குடியேறி வாழ்ந்துவந்த சுப்பிரமணியன், யோகாம்பாள் இணையருக்கு மகனாக 12 யூலை 1938 அன்று பிறந்தார்.[1][2] இவரது தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர். பணியின் காரணமாக இவரது குடும்பம் சென்னை மயிலாப்பூரில் குடியேறியது. இதனால் ஜெய்சங்கர் தனது பள்ளிப்படிப்பை பி. எஸ். உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் சென்னை புதுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க இவர் சட்டக்கல்லூரியில் இணைந்தார். ஆனால் நாடகம் மற்றும் பிற கலை வடிவங்களில் இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு ஆண்டிலேயே அதைக் கைவிட்டார்.[2]

இவர் சோ ராமசாமியின் "விவேகா பைன் ஆர்ட்ஸ்" நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் பெரும்பாலும் மயிலாப்பூர்வாசிகள் இருந்தனர். அதில் இவர் சிறிய பாத்திரங்களில் நடித்துவந்தார். இவர் தனது நடிப்புத் திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் இல்லாததால் மகிழ்ச்சியற்று இருந்தார். இதன் விளைவாக, இவர் நாடக் குழுவிலிருந்து விலகி, இறுதியில் கூத்தபிரனின் "கல்கி ஃபைன் ஆர்ட்ஸ்" நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு இவர் கல்கியின் 'அமர தாரா' நாடகத்தில் நாயகனாக நடித்து முத்திரை பதித்தார்.

திரைப்படங்கள்

1965-இல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் ஜெய்சங்கர் என்ற பெயரில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

சக நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுகளைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

இரசிகர்கள் அளித்த பட்டப் பெயர்கள்

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் இரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

பெற்ற விருதுகள்

மறைவு

2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.[3] இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார்.[4]

திரைப்படவியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Randor Guy (2008-11-07). "Bond of Tamil screen". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 9 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109093321/http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750220400.htm. 
  2. 2.0 2.1 Ramachandran, T. M. (3 July 1965). "On the way to fame!". Sport and Pastime. Vol. 19. p. 52. Archived from the original on 1 March 2023. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  3. "CM pays tribute to Jaishankar". Archived from the original on 2009-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-03-31.
  4. "Charitable Trust launched". Archived from the original on 2011-09-14. பார்க்கப்பட்ட நாள் 2007-03-31.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்சங்கர்&oldid=4098535" இலிருந்து மீள்விக்கப்பட்டது